வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (24/12/2017)

கடைசி தொடர்பு:14:45 (24/12/2017)

விசித்திர வெனிசுலா! - வெளிநாட்டுத் தூதர்கள் வெளியேற்றம்

வெனிசுலா மீண்டும் ஒரு விசித்திர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி பிரேசில் மற்றும் கனடா நாட்டுத் தூதர்களை நாட்டை விட்டே வெளியேற்றியுள்ளது.

நிக்கோலஸ் மதுரோ

லத்தீன், அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, புதிய உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பித்தார். அதன்படி, அடுத்து வரும் வெனிசுலா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்து முடிந்த வெனிசுலா மேயர் தேர்தலை மூன்று முன்னணி எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதையடுத்து, வருகிற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிடத் தடை விதிப்பதாகத் தற்போதைய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிக்கோலஸ் மதுரோவின் சர்வாதிகாரப் போக்கைக் காண்பிப்பதாக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திவருகின்றன. மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலில் குடிமக்கள் அனைவரும் நேர்மையாக, சுதந்திரமாகப் பங்கெடுக்க முழு உரிமையும் உள்ளது. இதற்கான அனைத்துத் தகுதியும் வெனிசுலா மக்களுக்கு உள்ளது” என குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ், கனடா மற்றும் பிரேசில் நாட்டுத் தூதர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. தூதரக அதிகாரிகளுக்கான சட்டதிட்டங்களை மேற்கண்ட இருவரும் ஒழுங்காக கடைபிடிக்க வில்லை எனவும், வெனிசுலாவின் உள் விவகாரங்களில் தலையிட்டார்கள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.