ஜெருசலேமுக்கு அங்கீகாரம் - அமெரிக்காவைப் பின்பற்றும் கவுதமாலா!

அமெரிக்காவைப் பின்பற்றி கவுதமாலாவும், தனது இஸ்ரேல் தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றவிருப்பதாக அறிவித்துள்ளது.

கவுதமாலா அதிபர் ஜிம்மி மோரால்ஸ்

 

இஸ்ரேல் தலைநகராகத் தொன்மையான ஜெருசலேம் நகரை அமெரிக்கா அண்மையில் அங்கீகரித்தது. அதன் ஒருபகுதியாக டெல் அவிவ் நகரில் இருக்கும், தனது தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். கடந்த 1967-ம் ஆண்டு, பாலஸ்தீனப் போரின்போது, கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் கைப்பற்றியது. பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகள் இந்த நகருக்கு உரிமைகொண்டாடி வரும் வேளையில், அமெரிக்காவின் தன்னிச்சையான இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு இந்தியா உள்பட உலக நாடுகள் பலவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 193 நாடுகளில் 128 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தன.

இந்தநிலையில், அமெரிக்காவின் முடிவைப் பின்பற்றி இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது கவுதமாலா. இதுதொடர்பாக கவுதமாலா அதிபர் ஜிம்மி மோரால்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். தூதரகத்தை மாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாகத் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!