இளமை முதல் உயிரைப் பறித்த தோட்டாக்கள் வரை! - பெனாசிர் புட்டோ நினைவுகள் #BenazirBhutto #RememberingBenazir | A lookback at Pakistan's first woman primeminister Benazir Bhutto's life!

வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (27/12/2017)

கடைசி தொடர்பு:17:43 (27/12/2017)

இளமை முதல் உயிரைப் பறித்த தோட்டாக்கள் வரை! - பெனாசிர் புட்டோ நினைவுகள் #BenazirBhutto #RememberingBenazir

பெனாசீர் புட்டோ

ரசியல் மற்றும் ஆட்சி அதிகாரம்கொண்ட குடும்பம். அதனால், தானும் பிற்காலத்தில் அரசியல் களத்தில் இறங்கி, பல சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதை இளமைப் பருவத்தில் சூசகமாக உணர்ந்திருந்தார் பெனாசிர் பூட்டோ. அதன்படியே, தந்தையின் மறைவுக்குப் பிறகு, அரசியலில் களமிறங்கினார். 35 வயதில் பிரதமானது, எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலாக இருந்தது, தன் உயிரைப் பறிக்க காத்திருந்த வெடிகுண்டுகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் சவாலாக இருந்தது என, பெனாசிரின் வாழ்க்கை முழுவதுமே போராட்ட அத்தியாயங்கள். 2007-ம் ஆண்டு, பெனாசிரின் உயிரைத் தோட்டாக்கள் பறித்த தினம் (டிசம்பர் 27) இன்று. 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுல்ஃபிக்கார் அலி பூட்டோ - பேகம் நஸ்ரத் பூட்டோ தம்பதிக்கு மூத்த மகளாக 1953, ஜூன் 21-ல் பிறந்தவர், பெனாசிர் பூட்டோ. பெற்றோர் அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் இருந்ததால், சிறு வயதிலேயே அரசியல் சூழலில் வளர்ந்தார். படிப்பில் மிகுந்த ஆர்வம். கராச்சி நகரின் பல பள்ளிகளில் பள்ளிப் படிப்பையும் வெளிநாட்டுக் கல்லூரிகளில் தத்துவம், அரசியல், பொருளாதாரப் படிப்புகளையும் முடித்தார். 'என் கல்லூரிப் பருவம்போல, மீண்டும் ஒரு பொற்காலம் கிடைக்காது' என்று பலமுறை கூறியிருக்கிறார். 

பெனாசீர் புட்டோ

படிப்புடன் நிற்காமல் சமூக நிகழ்வுகளில் அதிக கவனம் செலுத்தினார். 'ஏன் எதற்கு' எனப் பள்ளி, கல்லூரிக் காலங்களிலேயே தீர்க்கமான கேள்விகளையும் விவாதங்களையும் முன்வைத்தார். அந்தக் குணமே, பெனாசிரை துணிச்சலுடன் பல பிரச்னைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்க வைத்தது. இவரின் கல்வி அறிவுத்திறனுக்காக 1976 டிசம்பரில், ஆக்ஸ்போர்டு சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சங்கத்தின் தலைவரான முதல் ஆசியப் பெண் என்ற பெருமையையும் பெற்றார். 

கல்லூரிப் படிப்பை முடித்து பாகிஸ்தானுக்குத் திரும்பினார் பெனாசிர். சிறைவாசத்திலிருந்த தந்தை தூக்கிலிடப்பட்டது, தனது வீட்டுக் காவல் உள்ளிட்ட அடுத்தடுத்த நிகழ்வுகள் பெனாசிரைப் பெரிதும் பாதித்தது. இதனால், அரசியல் மற்றும் நாட்டின் கள நிலவரத்தை நன்கு உணர்ந்தார். கடும் சிக்கலிலும் தீர்க்கமான முடிவெடுத்து தன் 24 வயதில், தந்தையின் 'பாகிஸ்தான் மக்கள் கட்சி' தலைவர் பொறுப்பை ஏற்றார். அப்போது, பாகிஸ்தான் நாட்டு அரசியலில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரிய பெண் ஆளுமைகள் யாருமில்லை. 

பெனாசீர் புட்டோ

1987-ம் ஆண்டு ஆசிஃப் அலி ஜர்தாரியை திருமணம் செய்துகொண்டார் பெனாசீர். பிலாவால், பக்த்வார், ஆசீஃபா ஆகிய குழந்தைகள் பிறந்தன. தனி ஒரு பெண்ணாகத் தொடர்ந்து மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அரசியல் களத்தில் எதிர்க்கட்சியினரால் பல எதிர்ப்புகளையும் துயரங்களையும் எதிர்கொண்டார். 1988-ம் ஆண்டு தனது 35-ம் வயதில் முதல் பொதுத் தேர்தலை எதிர்கொண்ட்ஃபார் பெனாசீர். இவரது கட்சி மிகப்பெரிய வெற்றிபெற, பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார். அரசை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பையும் பெற்றார். பிரதமராக இருந்த காலங்களில் மகளிர் காவல் நிலையங்கள், பெண்கள் அபிவிருத்தி வங்கிகளை அதிக அளவில் நிறுவினார். கருக்கலைப்புக்கு எதிராகக் குரல்கொடுத்தும், பாகிஸ்தானில் பெண்களின் உரிமைகளைக் குறைக்கும் முரண்பாடான பல சட்டங்களையும் நீக்கினார். 'உலகப் பெண் தலைவர்களின் கழகம்' என்ற அமைப்பை நிறுவி, அதன் உறுப்பினராகவும் இருந்தார். 

20 மாதங்களிலேயே பதவியை இழந்து, எதிர்க்கட்சித் தலைவரானார். 1993-ம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பிரதமராகி, மீண்டும் 1996-ம் ஆண்டு பதவியை இழந்தார். இந்த இருமுறையும் பெனாசீர் பதவியை இழக்க, கணவரின் மீதான ஊழல் புகார்களே முக்கிய காரணமாக இருந்தது. இப்படித் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சிகளைச் சமாளிக்க கடும் சிரமத்தை எதிர்கொண்டார். பின்னர், தனிப்பட்ட காரணங்களால் 1998-ம் ஆண்டு துபாயில் குடியேறினார். அங்கேயே குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு, சொற்பொழிவுகள் நிகழ்த்திக்கொண்டிருந்தார். 

2007-ம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பிய பெனாசீர், தன் மீதான முந்தைய குற்றச்சாட்டுகள் அனைத்திலிருந்தும் மீண்டுவந்தார். அரசியலில் மீண்டும் தடம் பதிக்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கவும் முன்பைவிட அதிகமாகப் போராடினார். அந்தச் சமத்தில் அவரைக் குறிவைத்து பலமுறை தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடந்தன. அவற்றுக்கெல்லாம் கடும் சவாலாக இருந்தார் பெனாசீர். தன் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தும், அஞ்சாமல் களப்பணிகளில் ஈடுபட்டார். எப்போது வேண்டுமானாலும் தன் உயிர் போகும் என்பதை உணர்ந்திருந்தவர், 'உங்களுடன் எத்தனை நாள் அன்பு செலுத்தப்போகிறேன் எனத் தெரியவில்லையே' என்று பல முறை தன் குடும்பத்தாரிடம் நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார். 

பெனாசீர் புட்டோ

தன் பிரசாரக் கூட்டங்களில், பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் சமூகப் பிரச்னைகளுக்கு அதிக அளவில் குரல் கொடுத்தார். பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரம் இருந்த சூழல். முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்த பெனாசீர், டிசம்பர் 27-ம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற்ற ஒரு பேரணியில் கலந்துகொண்டார். குண்டு துளைக்காத வாகனத்தின் மேற்கூரைப் பகுதியில் நின்றபடி மக்களைப் பார்த்து கையசைக்க ஆயத்தமானார். அப்போது, மறைந்திருந்து சுட்ட எதிராளியின் துப்பாக்கிக் குண்டுகள், பெனாசீர் உடலைத் துளைத்தன. சற்று நேரத்தில் கூட்டத்தில் வெடிகுண்டுகள் வெடித்தன. மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பெனாசீர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமானரான பெனாசீருக்குப் பிறகு, அந்நாட்டில் இதுவரை பெண்கள் யாரும் பிரதமராகவில்லை. அந்த நாட்டுச் சரித்திரத்தில் நீங்கா அடையாளம் பெற்ற, பூட்டோவின் மரணத்துக்குக் காரணமானவர்கள் இதுவரை கண்டறிந்து தண்டிக்கப்படவில்லை. பெனாசீரின் தைரியமான போராட்டக் குணம் பலருக்கும் பாடமாக திகழ்கின்றது. ஆண்களுடன் ஒப்பிடுகையில், உலகம் முழுக்கவே அரசியல் வாழ்வு பெண்களுக்கு பல மடங்கு சவால்களையும் போராட்டங்களையும் தருவதாகவே உள்ளன என்பதுக்கு பெனாசீரின் வாழ்க்கையும் எடுத்துக்காட்டு. 


டிரெண்டிங் @ விகடன்