வீழ்த்த நினைத்து வீழ்ந்து கிடக்கும் ட்ரம்ப்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்.. பகுதி -6 | 'Extraordinary Rise': Trump kowtows to kingpin Xi Jinping

வெளியிடப்பட்ட நேரம்: 09:41 (28/12/2017)

கடைசி தொடர்பு:09:41 (28/12/2017)

வீழ்த்த நினைத்து வீழ்ந்து கிடக்கும் ட்ரம்ப்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்.. பகுதி -6

 இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

“சீனா நமக்கு ஒரு தந்திரமிக்க போட்டியாளராகவும் நமது வேலைவாய்ப்புகளைத் திருடிக்கொள்ளும் நாடாகவும் உள்ளது. சீனாவுடன் நான் வர்த்தக யுத்தம் நடத்துவேன். சீனாவுடன் நாம் எவ்வித வர்த்தக உறவும் வைத்துக்கொள்ளாமல் இருந்தால், நம்மால் ஏராளமான டாலர்களைச் சேமிக்க முடியும். " - இது கடந்த 2010-ம் ஆண்டில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சொன்னது. 

அதன்பின்னர் 2011 -ல், "சீனா அமெரிக்காவைத் தோற்கடித்து அதனைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகிறது" என ட்விட்டரில்  குறிப்பிட்டிருந்தார். 2016 மே மாதம் நடைபெற்ற பிரசார கூட்டம்  ஒன்றில், சீனா பின்பற்றும் வர்த்தக நடைமுறைகள் குறித்துப்  பேசுகையில், சீனா எங்கள் தேசத்தை பலாத்காரம் செய்வதை அனுமதிக்க முடியாது" என்றார் ட்ரம்ப். 

இவையெல்லாம், கடந்த காலத்தில் சீனா குறித்த ட்ரம்பின் பார்வை எப்படி இருந்தது என்பதற்கான சான்றுகள்.

ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்தே சீனா குறித்த அவரது பார்வையே மாறிப்போனது. அதிலும், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது  மாநாட்டில் சீன அதிபராக ஜின்பிங் மீண்டும் ஐந்தாண்டு காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், கட்சியில் அவர் ஏற்படுத்திக் கொண்ட அதிகாரக் குவிப்பும், அதனைத் தொடர்ந்து இன்னும் 30 ஆண்டுகளில் சீனாவை உலக வல்லரசாக ஆக்கப்போவதாக அவர் வெளியிட்ட அறிவிப்பும், ஜின்பிங்கை உலகின் அதிகாரம்மிக்க தலைவராக காட்டியது.

கூடவே, உலகின் அதிகாரம் மிக்க தலைவராக இதுவரை பார்க்கப்பட்டு வந்த அமெரிக்க அதிபரைக் காட்டிலும், ஜின்பிங் செல்வாக்கு மிக்க  தலைவராக உருவெடுத்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் எழுதித்தள்ளியதைப் பார்த்து நியாயமாக ட்ரம்புக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனாலும் என்ன செய்ய... கோபத்தையும் எரிச்சலையும் மனதில் அடக்கிக்கொண்டு, “நீங்கள் அசாதாரணமான உயரத்தை அடைந்துள்ளீர்கள்” என ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டுத் தெரிவித்ததோடு, வடகொரியா விவகாரம் மற்றும் இருதரப்பு வர்த்தக விவகாரங்கள் குறித்தும் பேசியதாக ட்ரம்ப் ட்விட்டரில்  குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்பின் இந்த அந்தர் பல்டியைப் பார்த்து அப்போதே உலக  நாடுகள் மூக்கில் விரல் வைத்தன. ஆனால் ஆச்சர்யம் அதோடு  நிற்கவில்லை. கடந்த நவம்பர் மாதம் சீனாவுக்கு முதன்முறையாக விசிட் அடித்த ட்ரம்ப், எதிர்காலத்தில் பெய்ஜிங்குக்கும் வாஷிங்டனுக்கும் இடையே மிக நெருங்கிய உறவு ஏற்படும் என்ற எண்ணம் ஏற்படும் விதமான அறிவிப்புகளை வெளியிட்டார். 

“வருகிற நாள்களில் அமெரிக்கா - சீனா இடையே இன்னும் வலுவான நட்புறவு ஏற்படும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடமளிக்க பசிபிக் பெருங்கடலில் போதுமான இடம் உள்ளது"  என்று பெய்ஜிங்கில் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசியதைப் பார்த்து உலக நாடுகள் வாயடைத்துப் போய்விட்டன.

பகையும் நீயே... சொந்தமும் நீயே!

அரசியல்வாதிகள் அடிக்கடி தங்களது கொள்கைகளை மாற்றிக்கொள்வது வாடிக்கைதான் என்றாலும், அது பெரும்பாலும்  உள்ளூர் அரசியல் மட்டத்தில்தான் காணப்படும். சர்வதேச விவகாரங்களில் சற்று யோசித்துதான் செயல்படுவார்கள். ஆனால் சீனா விவகாரத்தில் ட்ரம்ப்பிடம் காணப்பட்ட இந்த மாற்றம் சீனாவாலேயே நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது.

ஏனெனில், மேலே குறிப்பிட்டபடி ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது மேற்கொண்ட பிரசாரத்தின்போது சீனாவைக்  கடுமையாகத் தாக்கிப் பேசினார். சீனாவின் இறக்குமதி பொருள்களால் அமெரிக்காவின் உற்பத்தித் துறை பெருமளவில்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமான அமெரிக்கர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படுவதாகவும், எனவே தாம் ஆட்சிக்கு வந்தால் சீனா மற்றும் மெக்சிகன் இறக்குமதி பொருள்களுக்கான வரியை முறையே 45 மற்றும் 35 சதவீதமாக உயர்த்துவேன் என்றும்  அறிவித்திருந்தார். 

ஆனால், அப்படி வரியை உயர்த்தினால் அமெரிக்காவுக்கும் கடும் பாதிப்புகள் ஏற்படும் என அந்த நாட்டுப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தனர். "சர்வதேச நாடுகளுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மற்றும் சேவைகளில் 25 சதவீதம் சீனா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்குத்தான் செல்கின்றன. இந்த நிலையில், அந்த இரண்டு நாடுகளும் இதற்குப் பதிலடியாக அமெரிக்கப்  பொருள்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்துவது உள்ளிட்ட வர்த்தகத் தடைகளை ஏற்படுத்தினால், இருதரப்புக்குமிடையே முழு  அளவில் வர்த்தகப் போர் வெடிக்கும். இதனால், 2019-ல் அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டு, அதன் பொருளாதார வளர்ச்சி -0.1 என்ற சதவீதத்துக்கு அதலபாதாளத்துக்குச் செல்லக்கூடும். மேலும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.7 சதவிகிதம் அதிகரித்து சுமார் 40 லட்சம் அமெரிக்கர்கள் வேலை இழக்கக்கூடும்" என்று அவர்கள் எச்சரித்தனர்.

இத்தகைய சூழலில்தான் தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப், தேர்தல் பிரசாரத்தில் கூறியதுபோன்று இதுவரை சீனப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை 45 சதவீதமாக உயர்த்தவும் இல்லை, சீனாவுக்கு எதிராக முக்கிய வர்த்தகக் கொள்கை எதையும் அமல்படுத்தவும் இல்லை. அதேபோன்று தென் சீனக் கடலில் சீனாவுக்கு எதிரான ஆக்ரோஷமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. கூடவே,  மாதம் ஓர் ஏவுகணையைத் தயாரித்து அமெரிக்காவைப் பீதியடைய வைத்துக்கொண்டிருக்கும் வடகொரியாவுடன் தொடர்ந்து வர்த்தக மற்றும் தூதரக உறவுகளைப் பராமரித்து வருவதற்காக சீனாவைத் தண்டித்துவிடவும் இல்லை.

ட்ரம்பின் இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணம் வடகொரியா மீது அவர் முழு கவனமும் திரும்பியிருப்பதுதான் காரணம் என்கின்றனர் சீனா மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கைகளை அலசி ஆராயும் நிபுணர்கள்.

“சீனாவுடனான தற்போதைய வர்த்தக மற்றும் பொருளாதரப் பிரச்னைகளைத் தற்காலிகமாக ஒதுக்கிவைத்துவிட்டு வடகொரியாவுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வைப்பதில் அதிக  கவனம் செலுத்த வேண்டும்" என ட்ரம்ப் கருதுகிறார். அதுமட்டுமல்ல, சர்வதேச அளவில் உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்துகிற ஒரு தேசத்தின் வலுவான மற்றும் அதிகாரமிக்கத் தலைவராக ஜின்பிங் திகழ்வதால், அவரைப் புகழ்ந்தும் அவருடன் தாமே முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தவும் வேண்டிய அவசியம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு  ஏற்பட்டுள்ளது" என்று கூறுகிறார் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றின் சர்வதேச விவகாரங்கள் குறித்த ஆய்வுப் பேராசிரியர் பால் மஸ்கிரேவ்.

ஆனால், இந்த நிலைமை எவ்வளவு நாள்களுக்கு நீடிக்கும் அல்லது இதனால் அமெரிக்காவுக்கு ஏதாவது நன்மை ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்புவரை சீனாவை மிகக்கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப்புக்கு, தற்போது சீனாவுடனான உறவு இதற்கு முந்தைய அமெரிக்க அதிபர்களைக் காட்டிலும் மிக நன்றாகவே இருப்பதாகத் தெரிகிறது.

சீனா என்ன நினைக்கிறது? 

அதே சமயம் சீனாவின் கண்ணோட்டம் வேறாக இருக்கிறது. “எங்கள் மீதான ட்ரம்ப்பின் இந்த மென்மையான போக்கு தொடர்ந்து நீடிக்குமா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் ட்ரம்ப்பின் மனநிலை ஸ்திரமானது இல்லை. எந்த ஒரு நிகழ்வும் சீனா மீதும் அதன் அதிபர் ஜின்பிங்கின் மீதும் ட்ரம்ப்புக்கு வெறுப்பை ஏற்படுத்திவிட வாய்ப்பு உண்டு. இதைச் சீனாவும் உணர்ந்துதான் உள்ளது. ஆனால், அதுவரைக்கும் அந்த நட்புறவை நீடிக்கச் செய்யலாம். அந்த வகையில் இதற்கான முழு பெருமையும் ஜின்பிங்கையே சேரும். பதவிக்கு வரும் முன்னர் வரைக்கும் சீனாவைக் கரித்துக்கொட்டிக் கொண்டிருந்த ஒருவரை நேசக்கரம் நீட்டச் செய்தது ஜின்பிங்கின் சாதுரியம். அவர் என்ன விரும்பினாரோ அதை ஒரு வருடத்துக்கும் குறைவான நாள்களுக்குள் சாதித்துக் காட்டியுள்ளார். அப்படியானால் எதிர்காலம் சீனாவுக்கு எவற்றையெல்லாம் கொண்டுவரும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்..." என்கிறார் சீன அயலுறவு அமைச்சக அதிகாரி ஒருவர். 

================================================================================================

தென் சீனக்கடலிலும் மூக்குடைப்பட்ட அமெரிக்கா!

இயற்கை எரிவாயு, எண்ணெய் வளமிக்க தென் சீனக் கடல் பகுதி வழியாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான வர்த்தகப் போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் தென் சீனக்கடல் பகுதியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் புருனே உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளும் உரிமை கொண்டாடுவதால் இந்த நாடுகளுக்கும் சீனாவுக்கும் மோதல் ஏற்பட்டது. 

சீனாவின் இந்த அடாவடி குறித்து சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ் வழக்குத் தொடர்ந்த நிலையில், " தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் உரிமை கொண்டாட சீனாவுக்கு சட்ட ரீதியாக எவ்வித முகாந்திரமும் இல்லை" எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

ஆனாலும், சீனா அதனை பொருட்படுத்தாமல் தென் சீனக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் பொருட்டு,  
அங்கு செயற்கை தீவுகளை ஏற்படுத்தி, அதில் விமானப் படை தளத்தையும் அமைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அமெரிக்கா, தென் சீனக் கடல், சர்வதேச எல்லைக்கு உட்பட்டது என்று வாதிட்டு வருகிறது.  

இந்நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம், சீன ராணுவம் உருவாக்கியுள்ள செயற்கை தீவுகளுக்கு அருகில் சுமார் 12 கடல் மைல் தொலைவில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டதையடுத்து, சீனா ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றது. 

"சர்வதேச கடல் எல்லையை சீனா மதிக்கிறது. அதே நேரம் சீன எல்லைக்குள் யாரும் நுழைய முயன்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். தென் சீனக் கடலில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் அத்துமீறினால் கடல், வான் வழியாகப் போர் தொடுப்போம்" என்று சீன கடற்படை தளபதி அட்மிரல் வூ செங்கி எச்சரிக்கை விடுத்தார். 

இந்த மோதல்களுக்கு இடையேதான், சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்த பிலிப்பைன்ஸை சீனா சத்தமில்லாமல் சரிக்கட்டி விட்டது. ஜின்பிங் தலைமையிலான சீன அரசு எத்தகைய சாம தான பேத தண்டத்தை பயன்படுத்தியதோ, தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுடன் ஒத்துழைக்கும் கொள்கையைப் பின்பற்றப்போவதாக அறிவித்துவிட்டது. அதேபோன்றுதான் வியட்நாம் உள்ளிட்ட  இதரக் குட்டி ( தென்கிழக்கு ஆசிய) நாடுகளையும்,  தெற்குச் சீனக்கடல் பகுதியைச் சுற்றி எங்குமே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறப்பண பணி எதையும் செய்ய முடியாதவாறு முடக்கிவிடுவோம் என்று சீனா விடுத்த மிரட்டலால் தங்களது பொருளாதாரம் பாதிக்கப்படுமே என்ற அச்சத்தில் அந்த நாடுகளும் அடிபணிந்து விட்டன.  

இது அமெரிக்காவின் முகத்தில் கரியைப் பூசிய கதையாகி விட்டது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதியன்று அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளின் பிரதிநிதிகளும் கூடி சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை சீனாவும், இதர தென் கிழக்கு ஆசிய நாடுகளும் மதித்து நடக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. ஆனால் புகார் கொடுத்தவனே கேசை வாபஸ் வாங்கியதுபோல வழக்குத் தொடுத்த நாடே சமரசமாகப் போவதாக அறிவித்துவிட்ட பிறகு அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை? சரியான மூக்குடைப்பு. 

கூடவே, " இது தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையேயான விவகாரம். எங்கள் பிரச்னைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அந்நியர்கள் யாரும் தலையிட வேண்டாம்" என அமெரிக்காவுக்கு சீன அயலுறவுத் துறை அமைச்சகம் எச்சரிக்கை வேறு விடுத்துள்ளது. யானை இளைத்தால் எலியும் எட்டி உதைக்கும் என்பது இதுதானோ!

================================================================================================

அமெரிக்காவையே அசைத்துப் பார்க்கிற சீனா, அண்டை நாடான இந்தியாவுடன் மட்டும் அடங்கிப் போகுமா என்ன...? ஜின்பிங் அதிபரான பின்னர் பாகிஸ்தானைப் பகடைக் காயாக வைத்துக்கொண்டு இந்தியாவிடம் வம்புக்கு இழுக்கும் சீனாவின் சீண்டல்கள், இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதல்கள் குறித்து வரும் அத்தியாயங்களில்.... பார்க்கலாம்...! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்