வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (28/12/2017)

கடைசி தொடர்பு:19:50 (28/12/2017)

மகளை மில்லியனராக்கிய அப்பாவின் ‘சீக்ரெட் ரெசிப்பி’! - ஜப்பானின் நெகிழ்ச்சிக் கதை

ரெசிப்பி

PC: Bloomberg

ம்ம ஊர் இயக்குநர்கள் இந்தக் கதையைக் கேட்டால், நிச்சயம் உணர்வுபூர்வமான திரைப்படமாக எடுத்துவிடுவார்கள். அவ்வளவு நெகிழ்ச்சியான கதை. 

தெற்கு ஜப்பானில் உள்ள ஒசகா நகரத்தைச் சேர்ந்தவர், ஹிரோய் டனகா (Hiroe Tanaka). தந்தையை இழந்தபோது இவருக்கு வயது 21. ரியல் எஸ்டேட் ஏஜென்டாக இருந்த தந்தை, நேரம் கிடைக்கும்போதெல்லாம், குஷிகட்சு (Kushikatsu) என்ற ஒசகாவின் முக்கிய உணவை மிகவும் சுவையுடன் சமைப்பார். ஹிரோயின் ஃபேவரைட் உணவும் அதுதான். சிக்கனை, காய்கறிகள் மற்றும் மசாலா சேர்த்து, குச்சியில் சொருகிப் பொரித்து எடுத்தால், அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால், அதற்காக அவர் பயன்படுத்திய ‘சீக்ரெட் ரெசிப்பி’ மட்டும் யாருக்கும் தெரியாது. அவர் இறந்தபோது, அவருடனே அந்த ரெசிப்பியும் இறந்துவிட்டது என நினைத்தார் ஹிரோய். 

கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, நண்பர் கைஜி நுகி நடத்திய உணவகத்தில் சமையல் கலையில் நிபுணராக முடிவுசெய்தார் ஹிரோய். ஒசகாவின் முக்கிய உணவான குஷிகட்சுவை சரியான பதத்தில் சமைக்கப் பல ஆண்டுகளாக முயற்சி செய்தார் ஹிரோய். ஆனால், அந்த ரெசிப்பி மட்டும் ஹிரோயிக்குப் பிடிபடவேயில்லை. அப்போதுதான் (2008-ம் ஆண்டில்), உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தன் உணவகத்தை மூடிவிடலாம் என்ற நிலைக்கே வந்துவிட்டார் நுகி. ஆனால், 'கடன் வாங்கியாவது இந்த உணவகத்தை நடத்தலாம்' என்றார் ஹிரோய். 

ரெசிப்பிசொல்லிவிட்டாரே தவிர, உணவகம் நடத்துவதற்கான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அப்போதுதான், வீட்டில் இருக்கும் ஒரு பெட்டியில், தந்தை எழுதிவைத்திருந்த குஷிகட்சுவின் சீக்ரெட் ரெசிப்பியைக் கண்டுபிடித்தார் ஹிரோய். மீண்டும் நம்பிக்கை துளிர்ந்தது. அந்த ரெசிப்பி அடிப்படையில் குஷிகட்சு செய்ய முயற்சி செய்தார். 

'‘ஆரம்பத்தில் குஷிகட்சு சமைப்பது மிகவும் எளிது என்று நினைத்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் என்னால் குஷிகட்சுவை சமைக்கவே முடியாது என்று முடிவுசெய்துவிட்டேன். அப்போதுதான், அப்பா எழுதி வைத்திருந்த ரெசிப்பியைப் பார்த்தேன். மீண்டும் குஷிகட்சுவை சமைத்தேன். என் அப்பா சமைத்தால் எப்படி இருக்குமோ அதே சுவையில் இருந்தது. அப்பாவின் ரெசிப்பை பற்றி எனக்கும் நுகிக்கும் மட்டும்தான் தெரியும். இதுவரை வேறு யாரிடமும் கூறியதில்லை. இனியும் அப்படிதான் இருப்பேன்”, என்கிறார் நெகிழ்வும் உறுதியும் கலந்த குரலில். 

பிறகு, மத்திய டோக்கியோவிலிருந்து சற்றே தள்ளியிருந்த ஒரு குடியிருப்புப் பகுதியில், சிறிய அளவில் உணவகம் ஒன்றை ஆரம்பித்தனர். 'இந்த இடத்தில் உணவகம் ஆரம்பித்தால் யாரும் வரமாட்டார்கள்' என்று பலரும் கூறினர். ஆனால், அதைப் பொய்யாக்கி கூட்டம் குவிந்தது. ஹிரோயின் கையால் செய்யப்படும் சுவையான குஷிகட்சுவை சுவைப்பதற்காக ஆர்டர் கொடுத்துவிட்டு ஒரு மணி நேரம்கூட காத்திருக்க ஆரம்பித்தனர். அந்த உணவகம் இருக்கும் தெருவின் நீளத்திற்கு, அவர்களின் வாகனங்கள் நின்றன.

குஷிஹட்சூ

தற்போது 46 வயதாகும் ஹிரோய், ஜப்பானில் 146 உணவகங்களுக்குச் சொந்தக்காரர்.. ஜப்பானில் உள்ள மல்டிமில்லினர்களில் ஒருத்தர். ஹவாய் தீவிலும் ஓர் உணவகத்தைத் திறந்திருக்கிறார். “மற்றவர்களுக்கு குஷிகட்சு ஒரு பாரம்பர்ய உணவாக இருக்கலாம். எனக்கு அதுதான் வாழ்க்கை. அதற்கு ஒவ்வொரு நாளும் என் அப்பாவுக்கு நன்றி கூறுகிறேன். அவரின் ரெசிப்பி மட்டும் இல்லையென்றால், நான் என்றோ காணாமல் போயிருப்பேன்'' என்று உருக்கமாகக் கூறுகிறார் ஹிரோய்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்