வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (31/12/2017)

கடைசி தொடர்பு:14:29 (05/01/2018)

ஃபேஸ்புக்கில் சாரா, ட்விட்டரில் ட்ரம்ப்... 2017-ன் சோஷியல் மீடியா ட்ரெண்ட்டிங்ஸ்! #Rewind2017

வாட்ஸப், ஃபேஸ்புக், ட்விட்டர்... தினமும் இவையின்றி உலகம் இயங்குவதே இல்லை. சர்வதேச அளவில் மிகப்பெரிய மாற்றங்களையும் உருவாக்கும் சக்தி கொண்டதாகச் சமூக வலைதளங்கள் திகழ்கின்றன. ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு சுவாரஸ்யம் வலைதளங்களில் வலம்வந்து கொண்டே இருக்கின்றது. 2017-ளிலும் சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை. அப்படி சமூக வலைதளங்கள் சார்ந்து அதிகம் பேசப்பட்ட சில விஷயங்களை இங்கே காண்போம்.

ராகுல் காந்தியும் ட்விட்டரும்

ட்விட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை டிசம்பர் 2016ல் 10,21,000. இது, டிசம்பர் 2017ல் 52,66,136. அதாவது, ஓராண்டுக்குள்ளாக கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. ராகுலைவிட, ஆறு மடங்குக்கும் மேலான ஃபாலோயர்ஸை வைத்துள்ளார் மோடி. அவர் ட்விட்டர் ஃபாலோயர்களின் எண்ணிக்கை சுமார் 3.8 கோடி. ஆனால், அதிகமான ஃபேக் அக்கவுன்ட்ஸ் இவர்களைப் பின்தொடர்வதாக சில சர்ச்சைகளும் எழுந்தன.

                                                    ராகுல் காந்தி 

ட்ரம்ப்பின் covfefe

"Despite the constant negative press covfefe" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மே மாதம் வெளியிட்ட ட்வீட், ட்விட்டர்வாசிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆறு மணி நேரம் நீடித்த அந்த ட்வீட், ஒரு மணி நேரத்தில் 35,000 ரீட்வீட்டைப் பெற்றது. இதற்குக் காரணம், covfefe என்கிற வார்த்தையே இல்லை என்பதுதான். ஸ்பெல்லிங் மிஸ்டேக் உடன் ட்வீட் செய்ததுதான் வைரலுக்கான காரணம். உடனே உலக அளவில் ட்ரெண்ட் ஆனது இந்த வார்த்தை. அதைத்தொடர்ந்து ட்ரம்பை வைத்து மீம்ஸ்களும், நகைச்சுவைகளும், விமர்சனங்களும் பறந்தன.

சோனு நிகாம் Vs ட்விட்டர்

பிரபல பாடகர் சோனு நிகாம் இந்த ஆண்டு ட்விட்டரில் இருந்து வெளியேறினார். சர்ச்சைக்குரிய வகையில் ஒரு ட்வீட் போட, அது பலத்த எதிர்வினைகளை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து ட்விட்டர் அக்கவுன்ட்டை டிஆக்டிவேட் செய்தார். 

முடக்கப்பட்ட ட்ரம்ப் அக்கவுன்ட்

ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த படியர் ட்டுய்சக், பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை அழித்தது, பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. பதினோரு நிமிடத்தில் டிரம்ப்பின் கணக்கு மீட்கப்பட்டது. இது தவறுதலாக நடந்துவிட்டதாக படியர் ட்டுய்சக் விளக்கம் கொடுத்தார். இதற்கிடையே, இப்படி டிரம்ப்பின் கணக்கை முடக்கி, வலைதள உலகுக்கு அமைதி தந்த அமைதி தூதனே என்று படியர் ட்டுய்சக்கை பாராட்டித் தள்ளிவிட்டனர் டிரம்ப் எதிர்ப்பாளர்கள்.

ட்ரம்ப்

#metoo வெள்ளம்

நடிகை அலிசா மிலானோ, தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டீனின் பாலியல் தொல்லைக்கு எதிராக இந்த ஹேஸ்டேக்கை (hashtag) முதலில் பயன்படுத்தினார். இது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இதைத் தொடர்ந்து, பிரபலங்கள் உட்பட பல பெண்கள், தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகளைப் பற்றி வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். இது இன்று வரையிலும் தொடர்கிறது.

சாரா

இது ஒரு மொபைல் செயலி. அறிமுகப்படுத்தப்பட்ட 30 நாட்களில் 20 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது. தன்னுடைய அடையாளத்தை மறைத்துக்கொண்டு, ஒருவரின் கணக்குக்குள் சென்று அவரைப் பற்றி என்னவிதமான கருத்துக்களை வேண்டுமானாலும் தெரிவிப்பதே இதன் சிறப்பம்சம். இந்த சேவை ஏற்கெனவே இருந்தாலும், 2017-ல்தான் திடீரென வைரல் ஆனது. எப்படி ட்விட்டரை ட்ரம்ப் தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்தனவோ, அதைப் போல மொத்த ஃபேஸ்புக் டைம்லைனையும் ஆக்கிரமித்தன சாரா ஸ்க்ரீன்ஷாட்கள்.

சில அப்டேட்ஸ்

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் வைக்கப்படும் முகப்புப் புகைப்படத்துக்கு முதன்முதலாக Profile picture guard அறிமுகப்படுத்தப்பட்டது.

வாட்ஸ் அப்

வாட்ஸ்அப் இரண்டு முக்கியமான அம்சங்களை அறிமுகப்படுத்தியது. அவை, லைவ் லொகேஷன் ஷேரிங் மற்றும் அனுப்பிய செய்தியைத் திரும்பப்பெறும் வசதி ஆகிய இரண்டுதான். இதுதவிர வாட்ஸ்அப் பிசினஸ் என்னும் சேவையையும் நிறுவனங்களுக்காக கொண்டுவந்தது.

ட்விட்டர்

தனது ஐகானிக் கேரக்டர்களான 140 என்பதை, இரட்டித்து 280 ஆக மாற்றியது ட்விட்டர். இது ட்விட்டர் வரலாற்றில் புதிய முயற்சியாக அமைந்தது.


டிரெண்டிங் @ விகடன்