தென்கொரியா - வடகொரியா இடையே பேச்சுவார்த்தை! - ஒலிம்பிக்ஸால் இணையும் இரு துருவங்கள்!

வரும் பிப்ரவரி மாதம், தென் கொரியாவில் இருக்கும் பியோங்சங்கில் வின்டர் ஒலிம்பிக்ஸ் நடக்கவுள்ள நிலையில், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரியா இசைவு தெரிவித்துள்ளது. இதற்கு வட கொரியாவும் சம்மதித்துள்ளதால், இரு நாட்டுக்கும் இடையில் பகை உணர்வு மறைந்து நட்பு மலரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கிம் ஜோங் உன்

கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உலக அளவில் பேசு பொருளாக இருக்கிறது வட கொரியா. அணு ஆயுதம் பயன்படுத்துதல் தொடர்பாக முதலில் அமெரிக்காவுடன் முரண்டு பிடித்தது வடகொரியா. தொடர்ந்து, ஐ.நா, உலக நாடுகள் என அனைத்திடமும் பகைமை உணர்வுடன் நடந்துகொண்டது. தென் கொரியாவுடன் பல ஆண்டுகளாக இருந்த வெறுப்பு உணர்வு அபரிமிதமான அணு ஆயுதச் சோதனையால் உச்சத்துக்கே சென்றது.

இதனால், எப்போது வேண்டுமானாலும் இரு நாட்டுக்கும் இடையில் போர் மூளலாம் என்று அச்சம் நிலவியது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின், புத்தாண்டு செய்தி அமைந்தது. கிம், `வட கொரியா அணுசக்தி நாடாக உருவெடுத்துவருகிறது. அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் பெரியளவில் தயாரிப்பதே நம் இலக்கு. என் மேஜையில் எப்போதும் அணு ஆயுதத்தை ஏவுவதற்கான பட்டன் இருக்கும்' என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். இப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலையில்தான் பேச்சுவார்த்தைக்கு கை கொடுத்துள்ளது வின்டர் ஒலிம்பிக்ஸ். 

வடகொரியாவில்தான் இந்தப் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடக்க உள்ளது. வின்டர் ஒலிம்பிக்ஸில் வடகொரியா கலந்துகொள்ளுமா இல்லையா என்பதுதான் இந்தப் பேச்சுவார்த்தையின் சாராமாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து தென் கொரிய தரப்பு, `வடகொரியாவுடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எப்படிப்பட்ட பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்' என்று நம்பிக்கை ததும்ப கூறியுள்ளது. இதனால், இரு நாட்டுக்கும் இடையில் பல மாதங்களாக நீடித்து வரும் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!