’’இத்தனை வருடமாக அமெரிக்காவை ஏமாற்றிக்கொண்டிருந்திருக்கிறீர்கள்!’’ - ரெளத்ரமாகும் ட்ரம்ப் | Trump Tweet makes international tension in Pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (02/01/2018)

கடைசி தொடர்பு:19:13 (02/01/2018)

’’இத்தனை வருடமாக அமெரிக்காவை ஏமாற்றிக்கொண்டிருந்திருக்கிறீர்கள்!’’ - ரெளத்ரமாகும் ட்ரம்ப்

ட்ரம்ப்

"நல்லா இருப்போம்...நல்லா இருப்போம், எல்லாரும் நல்லா இருப்போம்..." இப்படித்தான் புது வருடத்தை அனைவரும் ஆரம்பிப்போம். ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த வருடத்தை கடுமையான கோபத்துடன் ஆரம்பித்துள்ளார். "எங்களைப் பார்த்தால் என்ன முட்டாள் மாதிரி தெரிகிறதா?" என்று பாகிஸ்தானை நேரடியாகவே வசைபாட ஆரம்பித்துள்ளார் அவர்.

இந்த வருடத்தின் டிரம்பின் முதல் ட்வீட்டாக டக்ளஸ் மாகாண துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து இந்த வருடத்தைத் தொடங்கியுள்ளார். பின்னர் 'மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்' என்ற தன் பிரதான வாசகத்துடன் கடந்த வருடத்தில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக ஒரு வீடியோவையும் வெளியிட்டார். அதில் ''நம் நாடு மிகவேகமாகவும் சிறந்ததாகவும், வளர்ந்துவருகிறது. இந்த நேரத்தில் என்னுடைய நண்பர்கள், ஆதரவாளர்கள், எதிரிகள், என்னை வெறுப்பவர்கள் மற்றும் நேர்மையற்ற `ஃபேக் மீடியாவுக்கும்' மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துகள். 2018-ம் ஆண்டு, அமெரிக்காவுக்கு மிகச்சிறந்த வருடமாக இருக்கும். அமெரிக்காவை மீண்டும் நாம் கிரேட்டாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். யாரும் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்' என்று ஊடகங்களைச்சாடியுள்ளார். 

அதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக ட்விட்டரில் சரமாரியான விமர்சனங்களை டிரம்ப் முன்வைத்துள்ளார். அந்த ட்வீட்டில் ''அமெரிக்கா கடந்த 15 வருடங்களில் 2.1 லட்சம் கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு முட்டாள்தனமாக வழங்கியுள்ளது. அதற்கு அவர்களிடமிருந்து ஒரு பலனும் கிடைக்கவில்லை. ஆனால், அவர்கள் அதற்குப் பதிலாக பொய்யையும், சட்டவிரோதமான செயல்களையும் திருப்பி வழங்கியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள தலைவர்களைப் பார்த்தால், பாகிஸ்தானுக்கு முட்டாள்கள்போல் தெரிகிறதா...? தீவிரவாதிகளின் புகலிடமாகத் திகழும் பாகிஸ்தானுக்கு இனி ஒருபோதும் நிதியுதவி வழங்கப்போவதில்லை'' என்று கடுமையான வார்த்தைகளால் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். 

இந்த ட்வீட் சர்வதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறத்துறை அமைச்சர், ''நாங்கள் ஏற்கெனவே அமெரிக்காவிடம் கூறியிருந்தோம்; எந்தெந்த விஷயங்களையெல்லாம் எங்களால் செய்ய முடியாது என்று. எனவே, ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்த ட்வீட் அர்த்தமற்றது'' என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவிடம்  பாகிஸ்தான் அளித்துள்ள வாக்குறுதிகளைக் காப்பாற்றியே வருகிறது. இருந்தும் அமெரிக்கா இப்படி ஒரு விமர்சனத்தை குறிப்பிட்டிருப்பது வருத்தமளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில், "தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு, நிலம் மற்றும் காற்றுவழி தொலைதொடர்புக்கு உதவி, ராணுவ தளத்தை அளித்துள்ள நிலையிலும், அமெரிக்காவின் நம்பிக்கையில்லா தன்மை வெளிப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது. 

இதுகுறித்து விவாதிக்க பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு அமைச்சரவையை நாளை கூட்டி முடிவெடுக்க உள்ளது. கடந்த 2001-ம் ஆண்டிலிருந்து, நடந்த ராணுவத் தாக்குதல்களில் சுமார் 17,000 உயிர்களை இழந்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரச்னையில் தலையீடு, ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பயணம் செய்யத்தடை, தற்போது பாகிஸ்தான் மீதான விமர்சனம் போன்ற செயல்பாடுகளில் அதிபர் டிரம்ப் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்று முழுமையாக ஒரு வருடம்கூட ஆகாத நிலையில், அவரின் இத்தகைய நடவடிக்கைகள், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் கடும் எதிர்ப்புக்குரலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அதிரடியாக இந்த வருடத்தை தொடங்கியுள்ள டிரம்ப் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்