வெளியிடப்பட்ட நேரம்: 10:39 (03/01/2018)

கடைசி தொடர்பு:10:39 (03/01/2018)

'ஸ்மார்ட் அதிபர்' முதல் உலகக் கோப்பை வரை... 2018-ண் உலகக் கணிப்புகள்!

2018, 2018

லகத்தில் எப்போதுமே கணிப்புகளுக்கு மவுசு ஜாஸ்தி. நாஸ்டர்டாமஸ் முதல் நம்மூர் 'பாத' ஜோசியர்கள் வரை கட்டம்கட்டி வெளுத்து வாங்குபவர்கள் நம் ஜனங்களின் கண்களுக்கு வித்தியாசமாகத் தெரிவார்கள். முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு 'அடிவயிற்றில் இருந்து 'ஓம்' எனக் கூவினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்', என்று சதுரங்க வேட்டை பாணியில் அழிச்சாட்டியம் செய்தாலும் அதை நம்பி லைக்ஸ் குவிப்பதற்கு இங்கு ஏக இதயங்கள் காத்திருக்கின்றன. 'டிசம்பரில் சுனாமி கன்ஃபார்ம்' என கேரள ஈ.எஸ்.பி 'டாக்டரின்' லெட்டர் பேட் அலப்பறைகளை மாங்கு, மாங்கு என ஷேர் செய்தது பூரா நம்ம பயகதேன். கணிப்புகளின் மேல் நம்மவர்கள் கொண்டிருக்கும் காதலுக்குத்தான் எத்தனை சுவாரஸ்யம். சரி... கட்டுரைக்கு வருவோம். 2018-ன் பயணம் எவ்வாறு அமையும், உலகளவில் என்ன நிகழக்கூடும் என்பதைப் பற்றிய ஓர் கணிப்பு உலக மீடியாக்களில் வலம் வரத்தொடங்கியிருக்கின்றன. அவற்றின் மீது நம் பார்வையை படர விட்டதில் சிக்கியவை இவை... 

ட்ரம்புக்கே டெஸ்ட் வைக்கும் 2018 

2018, 2018

டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றத்திலிருந்து ஆற்றிக் கொண்டிருக்கும் அரசியல் அரும் தொண்டுக்கு மார்க் போட வருகிறது 2018 செனட் இடைத்தேர்தல் (Midterm Election). மக்களின் நம்பிக்கையை ட்ரம்ப் பூர்த்தி செய்தாரா என்ற கேள்விக்கு துருப்புச் சீட்டாக இந்த இடைத்தேர்தலின் முடிவு அமையப் போகிறது. கடந்த, டிசம்பர் 2ம் தேதி நடைபெற்ற அலபாமா செனட் இடைத்தேர்தலில் டிரம்ப் பரிந்துரையின் பேரில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ராய் மூர் போட்டியிட்டார். 21,924 வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டாவ்க் ஜோன்ஸிடம் மண்ணைக் கவ்வினார் ட்ரம்ப் பரிந்துரைத்த ராய் மூர். 25 வருடங்களுக்குப் பிறகு அலபாமாவில் ஜனநாயகக் கட்சி செனட் தேர்தலில் வெற்றிபெற்றது. எனவே, இவ்வருட செனட் இடைத்தேர்தல் ட்ரம்புக்கு டெஸ்ட் வைக்கப் போகிறது என்பது உறுதி. 

அதிகாரத்தில் அதிசயம் புரியப்போகும் புதின்

2018

ரஷ்யாவின் அதிபர் மற்றும் பிரதமருக்கான மறுதேர்தல் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 2001 முதல் 2008 வரை அதிபராகவும், 2008 முதல் 2012 வரை பிரதமராகவும், மீண்டும் 2012ல் இருந்து தற்போது வரை அதிபராகப் பணியாற்றி வருகிறார் விலாடிமிர் புதின். இந்நிலையில், எதிர் அணி தலைவர் அலெக்ஸி ஊழல் புகாரில் சிக்கி அரசியலில் போட்டியிட முடியாத நிலை உள்ளதால் வருகின்ற தேர்தலிலும் புதின்தான் வெற்றி பெறுவார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. அவ்வாறு வெற்றி பெற்றால் 2024 வரை ரஷ்யாவில் புதின் அதிகாரம்தான். இதன் மூலம் இந்த நூற்றாண்டின் கால் பாதியை விலாடிமிர் புதின் ரஷ்யாவை ஆளப் போகிறார் என்பது உறுதியாகிவிடும். அதோடு அவரது பணி நிறைவு பெறும் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.

மே மாதம் ‘டும் டும் டும்’

2018

'வம்சத்துக்கே இழுக்கு என்று யார் நினைத்தாலும், எனது காதலை கைவிடுவதாய் இல்லை' என்று பிரிட்டிஷ் மன்னர் வம்சத்தை சேர்ந்த இளவரசர் ஹாரி தனது முடிவில் பிடிவாதமாக உள்ளார். 'பிரிட்டிஷ் வம்சத்துக்கே இழுக்கு' என்ற அளவுக்கு இவரின் காதலில் என்ன பிரச்னை என்றால், அவர் காதலித்து வரும் பிரபல அமெரிக்க நடிகையான மேகன் மார்கல், ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். இவர்களது கெட்டி மேளம் வரும் மே மாதம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனை தடுக்கும் 'ஸ்மார்ட்' அதிபர்

2018

'ஸ்மார்ட்போனால் குழந்தைகளின் மூளைக்கு பாதிப்பு ஏற்படுகிறது' என்று எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, வரும் செப்டம்பர் முதல் ஃப்ரான்ஸ் நாட்டின் முதன்மைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துவதை தடுக்கத் திட்டமிட்டுள்ளார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரன். 'குழந்தைகளிடமிருந்து புகார்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது என்றாலும், நம் நாட்டை முன் நிறுத்தி பல நாடுகள் நம்மை பின்பற்றும்', என்று உறுதியாகச் சொல்கிறார் அதிபர் மேக்ரன்.

ட்ரம்ப் vs கிம்

2018

அணு ஆயுதங்களை வைத்து அமெரிக்காவுக்கே மரண பயம் காட்டி வரும் வடகொரிய அதிபர் ’கிம் ஜாங் உன்’னை ’ராக்கேட் மேன்’ என்று அவதூறாக சித்திரித்து ட்வீட்களை தெறிக்க விடுகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இவ்வருடம் இந்த வசைமழை இன்னும் பெருக வாய்ப்புள்ளது. அபாயகரமான அயுதங்களை கைவசம் வைத்திருந்தாலும், எந்த உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாத கிம் ஜாங் எச்சரிக்கைகள் அமெரிக்காவுக்குப் பெரும் தலைவலியைத் தந்திருக்கிறது. அதுவும், புத்தாண்டு செய்தியாக, "அமெரிக்காவை அழிப்பதற்கான அணு ஆயுத பட்டன் எப்போதும் என் மேஜையில் இருக்கும்", என கிம் 'வெடிகுண்டு' போட... அமெரிக்கா நிச்சயம் புது வருட கொண்டாட்டங்களை மறந்திருக்கும். இந்த இருவரும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை திகிலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது 2018.  

சவுதி – ஈரான் : போர்க்கொடி உயருமா?

2018

சவுதி அரேபியா – ஈரானுக்கிடையே நீண்ட நாள் பிரச்னைகள் இருந்து வந்தாலும், அது இவ்வருடம் போராக வெடிக்காது என்கிறார்கள் விமர்சகர்கள். ஆனால் ஏமன், சிரியா, லெபனான் நாட்டைச் சேர்ந்த பாமர மக்கள் இந்த இருநாட்டின் சண்டை, சச்சரவுகளுக்கிடையே பெரிய பாதிப்புகளைச் சந்திக்க இருக்கிறார்களாம். இஸ்ரேல், பாலஸ்தீனுக்கு இடையே நிலவி வந்த பிரச்னையைத் தீர்த்து வைப்பதாக நினைத்து ஜெருசேலமை இஸ்ரேலின் தலைநகராகப் பரிந்துரை செய்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஆனால், டீக்கடை நெருப்பை அணைக்க, தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணையை எடுத்து ஊற்றுவாரே வடிவேலு..  அந்தக் கதையாக மாறிப்போயிருக்கிறது.

உலகக் கோப்பை கால்பந்து யாருக்கு?

2018

உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஜுன் மாதம் ரஷ்யாவில் நடைபெற உள்ளது. ஆனால், இந்த உலகக் கோப்பை ரஷ்யாவுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூற முடியாது. இப்போட்டியில் இத்தாலி ஆப்சென்ட். வலுவான நிலையில் அர்ஜென்டினா, பிரேசில் அணிகள் இருந்தாலும் கோப்பையை நெருங்கப் போவது ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள்தான் என்கிறது கணிப்புகள். குறிப்பாக நடப்பு சாம்பியனான ஜெர்மனி, கோப்பையை தக்க வைத்துக்கொள்வதற்காக அதிகளவில் சீறுமாம். களத்தில் ஆடும் வீரர்களைவிட ஆமையையும், ஆக்டோபஸையும் நம்பி பந்தயம் கட்டும் இவர்களின் கூத்துகளைப் பார்ப்பதற்கும் தயாராகுங்கள் மக்களே...!!


டிரெண்டிங் @ விகடன்