வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (03/01/2018)

கடைசி தொடர்பு:15:40 (03/01/2018)

இசைவு தெரிவித்த தென் கொரியா... இறங்கிவரும் வடகொரியா... தீபகற்பத்தில் பதற்றம் தணியுமா?

கடந்த  ஓர் ஆண்டுக்கும் மேலாக, வடகொரியாவின் அபரிமிதமான அணு ஆயுதச் சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சமும் உலக நாடுகள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில்தான், இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

கொரியா

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் இணைப்பில் இருந்த உள்நாட்டு ஹாட்-லைனை துண்டித்தது வடகொரியா. இது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுக பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில், ஹாட்-லைன் சேனல்மூலம் தொடர்புகொள்ள வட கொரியா ஒப்புக்கொண்டுள்ளது. இது, அமைதி திரும்புவதற்கான முதல்படியாகவே பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி மாதம், தென்கொரியாவில் இருக்கும் பியோங்சங்கில் வின்டர் ஒலிம்பிக்ஸ் நடக்க உள்ள நிலையில், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா நேற்று விருப்பம் தெரிவித்திருந்தது. வடகொரியாவில்தான் இந்தப் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடக்க உள்ளது. வின்டர் ஒலிம்பிக்ஸில் வடகொரியா கலந்துகொள்ளுமா இல்லையா என்பதுதான் இந்தப் பேச்சுவார்த்தையின் சாரமாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. நேற்று தென்கொரியா, அமைதி நோக்கி ஓர் அடி எடுத்த நிலையில், வடகொரியா மற்றொரு அடி எடுத்துவைத்துள்ளது.