வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (05/01/2018)

கடைசி தொடர்பு:17:48 (05/01/2018)

‘ஹெச்1-பி’ விவகாரத்தில் இந்தியர்களை வெளியேற்றினால் அமெரிக்காவுக்குத்தான் இழப்பு!

“ ‘ஹெச்1-பி’ விசா பெறுவதில் மாற்றம் கொண்டுவந்தால், அமெரிக்காவுக்கே பாதிப்பு ஏற்படும்” என்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் அமைப்பின் தலைவர் ஆர்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஹெ1பி விசா

அமெரிக்க அதிபராகப்  பொறுப்பேற்ற டிரம்ப், ‘ஹெச்1-பி விசா வழங்கும் எண்ணிக்கை குறைக்கப்படும். இதற்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும்' என அறிவித்தார். பிறகு, `ஹெச்1-பி விசா பெறுபவர்களின் வாழ்க்கைத் துணைக்கு வழங்கப்படும் `ஹெச்1-4' விசா வழங்கப்படுவதும் நிறுத்தப்படும்' எனத் தகவல் வெளியானது. இது, அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இந்தியர்களுக்கு, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நாஸ்காம் தலைவர் சந்திரசேகர் தன் கருத்தை வெளியிட்டார். “கீரின் கார்டு பெற காத்திருப்பவர்களுக்கு எந்தப் பிரச்னையும்ஹெச்1-பி நாஸ்காம் இல்லை. ஹெச்1-பி விசா விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தால், அது அமெரிக்காவின் வளர்ச்சிக்கே பாதிப்பாக அமையும். அமெரிக்காவில் தொழில் போட்டிபோடும் தன்மை தற்போது கடுமையாகப் பாதித்துவருகிறது. அமெரிக்காவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளைச் சார்ந்த நிறுவனங்களில் திறமைவாய்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. இந்தப் பிரிவுகளில் மட்டும் 20 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

ஹெச்1-பி விசா பெறுவதில் மாற்றம் கொண்டுவருவதற்கான முடிவை, அரசியல்ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் எடுத்திருக்கலாம். அமெரிக்கப் பொருளாதாரத்துக்குத் திறன்வாய்ந்த பணியாளர்கள் தேவைப்படுவதை, அமெரிக்க அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களே அறிந்துள்ளனர்" என்றார்.

அமெரிக்காவில் உள்ள கார்னெல் சட்டக் கல்லூரியின், வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களின் சட்டப் பிரிவைச் சார்ந்த பேராசிரியர் ஸ்டீபன் யேல்-லோஹர் கூறும்போது... “அமெரிக்க நிர்வாகத்தினர் ஹெச்1-பி விசா விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர விரும்பினால், அதை நிறுவனங்களும் ஹெச்1-பி விசாவில் பணிசெய்ய வந்திருப்பவர்களும் சட்டப்படி எதிர்க்க வாய்ப்பு உள்ளது. மாற்றத்தை அமல்படுத்துவதற்கு முன்னர், அமெரிக்க காங்கிரஸ் சபையில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும். சபையில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள், ‘தற்போது மாற்றத்தைக் கொண்டுவருவது சரியான நேரம் அல்ல’ என வாதிடுவர். இதனால், ஹெச்1-பி விசா பெற்று நீண்டகாலம் காத்திருந்து கீரின் கார்டு பெற காத்திருப்பவர்களுக்கு எந்த வகையான பாதிப்பும் ஏற்படாது. 

ஹெச்1-பி விசா மேலும், விசாவில் நடைமுறை மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு பல மாதங்கள் ஆகும். அமெரிக்க நிர்வாகத்தில் எந்த வகையான மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறார்கள் என்பது குறித்து ஃபெரடல் பதிவில் தகவல்களைப் பதிவுசெய்ய வேண்டும். இந்தப் பதிவில் பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிப்பார்கள். மக்கள் கருத்துத் தெரிவிப்பதற்கு, குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க வேண்டும். மக்களின் கருத்துகளை வெளியிட வேண்டும். அதன் பிறகே மாற்றத்தை அமல்படுத்திட முடியும். இதற்கு நீண்டகாலம் ஆகும் என்பதால், ஹெச்1-பி விசா பெற்றவர்கள் பெரிதாகக் கவலைப்படவேண்டிய அவசியமில்லை” என்றார் ஸ்டீபன்.

“அமெரிக்கப் பொருளாதாரம் தற்போது வளர்ச்சி நிலைக்குத் திரும்புவதால், ஹெச்1-பி விசா பிரச்னை மீண்டும் எழ வாய்ப்புகள் குறைவு” என்கின்றனர் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருப்பவர்கள். டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு, இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழில்நுட்ப ஊழியர்கள் பல்வேறு பிரச்னைகளைத் தொடர்ந்து சந்தித்துவருகின்றனர். அமெரிக்காவின் அருகில் உள்ள கனடாவிலும் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. எனவே, அதிக அளவில் இந்தியர்கள் கனடாவில் குடியேற வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.


டிரெண்டிங் @ விகடன்