வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (07/01/2018)

கடைசி தொடர்பு:13:14 (07/01/2018)

டாப் செல்லிங் புத்தகங்களுக்குப் பின்னாலிருக்கும் டச்சிங் ஸ்டோரி!

ன் பத்து வயதில் அமெரிக்கா சென்ற, தமிழைத் தந்தை மொழியாகக்கொண்ட பால் கலாநிதி, பள்ளிப் படிப்புக்குப் பிறகு இலக்கியத்தை தேர்ந்தெடுத்துப் படித்தார். அறிவியல்மீது ஈடுபாடு வர, மருத்துவம் படித்து நியூரோ சர்ஜன் ஆனார். மற்றவர்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தவரை நோயாளி ஆக்கியது 'லங் கேன்சர்'. காதல், திருமணம், குழந்தை என்று மகிழ்ந்திருந்தவரின் வாழ்க்கை 37 வயதிலேயே முடிந்துபோனது. ஆனாலும் முடியவில்லை!

குடும்பத்துடன் பால் கலாநிதி

‘உயிரோடு இருக்கிறவரை ஒருத்தன் திரும்பிப் பார்க்க மாட்டான். ஆனால், செத்ததும் பிறகு ஊரே பேசும்’ என்பது பால் கலாநிதியின் வாழ்க்கையில் முழு உண்மையானது. பால் கலாநிதியைப் பற்றி பேசவைத்தது அவருடைய புத்தகம். தன் வாழ்க்கையின் கடைசி நாள்களில், தன்னைப் பற்றி பால் கலாநிதி எழுதியதுதான், வென் பிரீத் பிகம்ஸ் ஏர் (When Breath Becomes Air). கடந்த இரண்டு வருடங்களாக டாப் செல்லர் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. வாழ்க்கையில் சாவின் விளிம்பில் இருக்கும் ஒருவனின் கேள்விகளை, அமைதியை, நகைச்சுவை கலந்து பதிவுசெய்கிறது இந்த ஆட்டோ பயோகிராஃபி. 

லூசி ஜான்வாழ்க்கையின் நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் ஒருவரின் நேர்மையான பதிவுகள், அவர் மீதான கழிவிரக்கம், நம் ஆற்றாமையையும் சேர்த்தே கிளறிவிடும். நினா ரிக்ஸ் என்கிற பெண் எழுதிய தி பிரைட் ஹவர் (The bright hour) புத்தகமும் இந்த வகைதான்.

நினா ரிக்ஸின் புத்தகத்துக்கும் பால் கலாநிதியின் புத்தகத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டுமே புற்றுநோயால் மரித்துக்கொண்டிருந்தவர்களின் ஆட்டோ பயோகிராஃபி. இரண்டுமே எழுதியவர்கள் இறந்த பிறகு வெளியானது.

அதுமட்டுமா? அதை எழுதியவர்களின் இணையர்கள், தற்போது இணைந்திருக்கிறார்கள். ஆம்! பால் கலாநிதியின் மனைவி லூசியும், நினா ரிக்ஸின் கணவர் ஜான் ட்யூபர்ஸ்டீனும் இணைந்து வாழ முடிவுசெய்து இருக்கிறார்கள். 

லுசியும் ஒரு மருத்துவர். இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. கணவரின் மறைவுக்குப் பிறகு மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்தார் லூசி. அதிலிருந்து வெளிவர பல மாதங்கள் ஆகியிருக்கின்றன. அதனால், நினாவின் கணவர் ஜானுக்கு உதவ முன்வந்திருக்கிறார். நினா ஏற்கனவே எழுத்தாளர் என்பதால், லூசி சிலமுறை அவரிடம் பேசியிருக்கிறார். “லூசியிடம் உதவி பெற்றுக்கொள்” - தன் வாழ்வின் கடைசி நாள்களை எண்ணிக்கொண்டிருந்த நினா, கணவரிடம் சொன்ன அட்வைஸ் இது. லூசி கலாநிதியின் குழந்தையுடன் ஜான்

சென்ற வருடம் நினா இறந்துவிட, பாதுகாக்கவேண்டிய இரண்டு குழந்தைகளோடு தூங்கா இரவுகளைக் கழித்துக்கொண்டிருந்தார் ஜான். பிறகு, லூசியிடம் உதவி கேட்டிருக்கிறார். ஏற்கனவே தான் கடந்துவந்த பாதையில், ஜானை அழைத்துவருவது லூசிக்கு சிரமமாயிருந்தாலும், முடியாத காரியமில்லை. 

அந்தப் பாதையின் பயணத்தில் லூசியும் ஜானும் காதலில் விழுந்தார்கள். “என்னால் இன்றும் நம்பமுடியவில்லை, அந்த நேரத்தில் நான், உன் காவலன் போன்று உணர்ந்தேன்” என்று லூசி சொல்ல, “நீதான் என்னை மீட்டெடுத்த மீட்பர்” என்று ஆமோதிக்கிறார் ஜான். 

தன் வேலைத் தொடர்பாக ஜான் வசிக்கும் மாகாணத்துக்கு லூசி வர, இருவரும் முதன்முதலில் சந்தித்திருக்கிறார்கள். அதன்பின் இருவரின் மறைந்த இணையர்களின் புத்தக அறிமுக கூட்டங்களில் கலந்துகொள்ளப் பயணித்து இருக்கிறார்கள். இருவரின் நட்பும் காதலாக மலர்ந்துள்ளது. தற்போது, மூன்று குழந்தைகளுடன் ஒரே குடும்பமாக மாறியிருக்கிறார்கள். மேலும், When Breath Becomes the bright hour என்கிற பெயரில், தங்களின் முன்னாள் இணையர்கள் பற்றி இருவரும் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதவும் முடிவுசெய்திருக்கிறார்கள். 

பல திடீர் திருப்பங்களையும், இன்ப அதிர்ச்சிகளையும் உள்ளடக்கியதுதான் வாழ்க்கைப் பாதை.


டிரெண்டிங் @ விகடன்