வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (09/01/2018)

கடைசி தொடர்பு:15:15 (09/01/2018)

ஆதார் ஆணைய அதிகாரிகளைக் கைதுசெய்யுங்கள்..! எட்வர்டு ஸ்நோடென் ஆதங்கம்

'ஆதார் தகவல்கள் வெளியானது தொடர்பான விவகாரத்துக்கு, தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தைதான் கைதுசெய்ய வேண்டும்' என்று எட்வர்ட் ஸ்நோடென் தெரிவித்துள்ளார். 

"ஐந்நூறு ரூபாய் மட்டுமே செலவுசெய்து, ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் தனிப்பட்ட தகவல்களைப் பெற முடிந்தது. 500 ரூபாய் அளித்த சில நிமிடங்களில், ஒரு கேட்வே ஆக்ஸஸ், லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு அளிக்கப்பட்டன. அதன்மூலம் ஆதார் தகவல்களை அணுக முடிந்தது' என்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்தது ஆதார் ஆணையம். மேலும், ஆதார் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், இந்தச் செய்தியை வெளிக்கொண்டுவந்த செய்தியாளர் தும் செய்தியை வெளியிட்ட செய்திநிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம்குறித்த எட்வர்டு ஸ்நோடெனின் ட்விட்டர் பதிவில், 'ஆதார் மீறல்களை செய்தியாளர் வெளிக்கொண்டுவந்ததற்கு அவருக்கு விருது அளிக்க வேண்டும். விசாரணை நடத்தக் கூடாது. இந்த அரசாங்கம், உண்மையில் நீதிகுறித்து அக்கறை கொண்டிருந்தால், அவர்களுடைய கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்களுடைய கொள்கைகள் 100 கோடி இந்தியர்களின் தனியுரிமையை அழித்துவிடும். இதற்குக் காரணமானவர்களை அரசு கைதுசெய்ய வேண்டுமா? அவர்கள், தனிநபர் அடையாள ஆணையம் என்று அழைக்கப்படுவார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.