உறைபனியில் தினமும் ஒரு மணி நேரப் பள்ளிப் பயணம்! - மனதை உலுக்கும் ஏழைச் சிறுவனின் புகைப்படம்

சீனாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் பனிப்பொழிவில் நனைந்து, தலை முழுக்க வெள்ளைப்பூத்து, பள்ளிக்கு வந்த ஏழைச் சிறுவனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

poor chinese boy
 

இதுகுறித்து சீன உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்தி பின்வருமாறு: 

சீனாவின் யுனான் மாகாணத்தில் ஸாடோன்ங் என்னும் கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் வசிக்கும் வாங் ஃப்யூமன் என்னும் சிறுவன், சுமார் 4.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த வாங் ஃப்யூமன் பள்ளிக்குத் தினமும் நடந்தே செல்வார். இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். ஃப்யூமன் வகுப்பறைக்குள் நுழைந்ததும் மாணவர்கள் அனைவரும் சிரிக்கத் தொடங்கிவிட்டனர். ஃப்யூமனுக்கு என்னவென்றே புரியவில்லை. அப்போது வகுப்பறைக்கு வந்த ஆசிரியை மாணவர்களை அமைதிப்படுத்தியுள்ளார்.

ஃப்யூமனை பார்த்த ஆசிரியை கண்கலங்கிவிட்டார். காரணம் சுமார் ஒரு மணிநேரம் பனியில் நடந்துவந்ததால் ஃப்யூமனின் தலை முழுக்க பனி போர்த்தியிருந்தது. கன்னங்கள் சிவந்து, புருவங்களிலும் பனிப் பூத்திருந்தது. ஃப்யூமன் அணிந்திருந்த சட்டை மிகவும் லேசான சட்டை என்பதால் அவர் கை கால்களும் பனியில் சிவந்திருந்தன. ஃப்யூமனைப் போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த ஆசிரியை ‘சீனாவில் ஒருசில பகுதிகளில் இன்று காலை மைனஸ் 9 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது. பனிப்பொழிவில் ஒரு மணி நேரம் நடந்து வந்த சிறுவனின் முகம் என்னைக் கண்கலங்க வைத்துவிட்டது’ என்று பதிவிட்டிருந்தார். ஆசிரியையின் பதிவால் சீனாவைச் சேர்ந்த பலர் ஃப்யூமனுக்கு உதவ முன்வந்துள்ளனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!