`சரியான நேரத்தில் பேச்சுவார்த்தை!' - வடகொரியா விஷயத்தில் யூ-டர்ன் அடிக்கும் ட்ரம்ப் | peace through strength, Trump on North korea

வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (11/01/2018)

கடைசி தொடர்பு:08:41 (11/01/2018)

`சரியான நேரத்தில் பேச்சுவார்த்தை!' - வடகொரியா விஷயத்தில் யூ-டர்ன் அடிக்கும் ட்ரம்ப்

கடந்த  ஓர் ஆண்டுக்கும் மேலாக, வடகொரியாவின் அபரிமிதமான அணு ஆயுதச் சோதனையால், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதனால், வடகொரியா - தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் இருந்துவந்தது. இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதையடுத்து, 'வடகொரியாவுடன் சீக்கிரமே அமைதிப் பேச்சுவார்த்தைகுறித்து பேசப்படும்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ட்ரம்ப்

வரும் பிப்ரவரி மாதம், தென்கொரியாவில் இருக்கும் பியோங்சங்கில், வின்டர் ஒலிம்பிக்ஸ் நடக்க உள்ள நிலையில், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா விருப்பம் தெரிவித்திருந்தது. இந்தப் பேச்சுவார்த்தை, சமீபத்தில் நடந்தது. வின்டர் ஒலிம்பிக்ஸில் வடகொரியா கலந்துகொள்ளுமா இல்லையா என்பதுதான் இந்தப் பேச்சுவார்த்தையின் சாரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது, 'வின்டர் ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ள நாங்கள் தயார்' என்று வடகொரியா தெரிவித்துவிட்டது. இதனால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் அமைதி திரும்பிவிடும் என்று நம்பப்படுகிறது. அதன் நீட்சியாக, அமெரிக்காவுடனும் வடகொரியா இணக்கமான உறவைப் பேணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள ட்ரம்ப், `வடகொரியாவுடன் அமெரிக்காவுக்கு நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், இப்போது  பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நேர்மறையான எனர்ஜி தென்படுகிறது. இதை நான் மிகவும் விரும்புகிறேன். வலிமையான உறவுமூலம் வடகொரியா விஷயத்தில் மீண்டும் அமைதி நிலைநாட்டப்படும். சரியான நேரத்திலும் சரியான சூழ்நிலைகளின் கீழ் வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.