ட்ரம்ப் தலைமையின்கீழ் பணியாற்ற முடியாது! - பதவியைத் துறந்த பனாமா தூதர் | U.S. Ambassador To Panama Resigns, Saying He Can't Serve Trump

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (13/01/2018)

கடைசி தொடர்பு:13:50 (13/01/2018)

ட்ரம்ப் தலைமையின்கீழ் பணியாற்ற முடியாது! - பதவியைத் துறந்த பனாமா தூதர்

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையின் கீழ் பணியாற்ற முடியாது என்று கூறி, பனாமா நாட்டுக்கான தூதர் ஜான் ஃபீலே, தனது பதவியை ராஜினாமா செய்தார். 

Photo Courtesy: NPR.org

ஒபாமாவுக்குப் பின்னர் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ச்சியாக சிக்கிவருகிறார். ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்தது என அவரது உத்தரவுகள் பலவும் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹைதி உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவர்கள் குறித்து அதிபர் ட்ரம்ப் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. இதற்காக ட்ரம்ப் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் ஆப்பிரிக்க யூனியன் நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்தநிலையில், பனாமா நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் ஜான் ஃபீலே, அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் பணிபுரிய முடியாது என்பதைச் சுட்டிக்காட்டி அவர் பதவி விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், வெள்ளை மாளிகை தரப்பில், அவர் சொந்த காரணங்களுக்காப் பதவியைத் துறந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடற்படை முன்னாள் வீரரான ஜான் ஃபீலோ, லத்தீன் அமெரிக்கா நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுகளைப் பராமரிப்பதில் மிகமுக்கியமானவராகக் கருதப்பட்டார். ஃபீலே பதவி விலகியது ட்ரம்ப் நிர்வாகத்துக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.