சீனா Vs பாகிஸ்தான்: நட்பா... நயவஞ்சகமா? ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் - பகுதி 9 | After CPEC, China's Great Game move to build military base in Pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (18/01/2018)

கடைசி தொடர்பு:12:30 (19/01/2018)

சீனா Vs பாகிஸ்தான்: நட்பா... நயவஞ்சகமா? ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் - பகுதி 9

சீனாவின் பிடியில் இலங்கைத் துறைமுகம்:  - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் ( பகுதி - 8) 

ன்னும் 30 ஆண்டுகளுக்குள் சீனாவை உலக  வல்லரசாக்கப் போவதாக அந்த நாட்டு அதிபர் ஜின்பிங் எந்த நேரத்தில் அறிவித்தாரோ, சூழ்நிலையும் நிகழ்வுகளும் அவருக்குச் சாதகமாகவே நடந்துகொண்டிருக்கின்றன.

இதோ அமெரிக்காவுடனான ராணுவ உறவை முறித்துக்கொண்டதோடு மட்டுமல்லாது,  இனிமேல் இருதரப்பு  வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலருக்குப் பதிலாக சீனாவின் யுவானை பாகிஸ்தான் பொதுத் துறை நிறுவனங்களும், தனியார்  நிறுவனங்களும் தாராளமாக பயன்படுத்தலாம் என பாகிஸ்தான்  ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

கடுகடுத்த ட்ரம்ப்… உறவை முறித்த பாகிஸ்தான்

எல்லாம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த ஜனவரி 1-ம் தேதி போட்ட ஒரு ட்விட்டர் ஸ்டேட்டஸ்தான் இதற்குக் காரணம். 

“ ‘தீவிரவாத ஒழிப்பு' என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ஏராளமான நிதி உதவிகளைப் பெற்றுப் பயனடைந்து வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக 33 பில்லியன் டாலர்களை பாகிஸ்தானுக்கு நிதியாக அளித்துள்ளோம். ஆனால், அவர்கள் திருப்பிக் கொடுக்காது, பொய்யும் துரோகமும் செய்துவருகின்றனர்.

அமெரிக்கத் தலைவர்களை பாகிஸ்தான் அரசு முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை அழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு இருப்பிடமளித்து, அவர்களை வளர்க்கும் செயலை பாகிஸ்தான் செய்துவருகிறது. இனியும் இதை அனுமதிக்க மாட்டோம்" என்று ட்ரம்ப் அந்த ட்வீட்டில் கொந்தளித்த நிலையில், அடுத்த அதிரடியாக பாகிஸ்தானுக்கான ராணுவ நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே நிதி விடுவிக்கப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்தார்.

முட்டுக் கொடுத்த சீனா

ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு மிகுந்த தலைக்குனிவை ஏற்படுத்தினாலும், அந்த நாடு வழக்கம்போல தனது 'கெத்தை' விட்டுவிடாமல், மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டதோடு, அமெரிக்காவுடனான ராணுவ மற்றும் உளவுத்துறை  ஒத்துழைப்பை தற்காலிகமாக முறிப்பதாகவும் தெரிவித்தது.

நீண்ட காலமாக சீனா இதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. ட்ரம்ப்பின் ட்வீட்டுக்கு உடனடியாக ரியாக்‌ஷன் காட்டிய சீனா, தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் பல தியாகங்களைச் செய்துள்ளதாகவும், தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மிகப்பெரும் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் முட்டுக்கொடுத்து உலக அரங்கில் பாகிஸ்தானைத் தாங்கிப் பிடித்தது.

“இமயமலையைவிட உயர்ந்தது, கடலைவிட ஆழமானது, இரும்பைவிட வலிமையானது, தேனைவிட இனிப்பானது” -  இப்படித்தான் சீனாவுடனான தங்கள் நாட்டு உறவை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் குறிப்பிட்டு வந்தார்கள்; இப்போதும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

நட்பா… நயவஞ்சகமா?

இத்தகைய சூழலில் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள கசப்பு உணர்வு, பாகிஸ்தானைத் தானாகவே அமெரிக்காவுக்கு வேண்டாத சீனா மற்றும் ரஷ்யாவை நோக்கி இன்னும் நெருங்க வைத்துள்ளது. ஏற்கெனவே சீனா - பாகிஸ்தான் இடையே நெருக்கமான உறவு இருந்து வரும் நிலையில், இனி இந்த உறவு மேலும் வலுப்பெறும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம் பாகிஸ்தானின் இந்த அமெரிக்க வெறுப்பு காரணமாக மேலும் மேலும் பயனடையப்போவது சீனாதான் என்றும், ஏற்கெனவே பட்டுப் பாதை பொருளாதார வழித் தட திட்டத்தின் ஒரு அம்சமாக சுமார் 55 பில்லியன் டாலர் மதிப்பில் சீன - பாகிஸ்தான் பொருளாதார வழித் தட திட்டத்தைச் செயல்படுத்துவதாகக் கூறி பாகிஸ்தானில் கால் பதித்துள்ள சீனாவால், தங்கள் நாடு சீனாவின் காலனி நாடாகிவிடும் என்று பாகிஸ்தானில் ஆங்காங்கே குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

‘‘இந்தத் திட்டம், பாகிஸ்தானை பெரும் சமூக - பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளிவிடும். சீனாவின் காலனி நாடாக பாகிஸ்தானை ஆக்கிவிடும். சீனாவுக்குத்தான் இந்தத் திட்டத்தின் முழுப் பலனும் கிடைக்கும்’’ என்று பாகிஸ்தான் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக, இத்திட்டத்தின் முழு வரைவில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ‘‘அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு, பாகிஸ்தானில்  எத்தகைய நடவடிக்கைகளுக்கு சீனா முன்னுரிமை அளிக்கப்போகிறது என்ற விவரங்கள் திட்ட வரைவில் பக்காவாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றை பார்க்கும்போது சீனாவின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது’’ என்று அவர்கள்  கூறுகின்றனர்.

‘பயிர்கள் சாகுபடிக்கான வெவ்வேறு வகையான விதைகள் உற்பத்தி முதல் நீர்ப்பாசன தொழில்நுட்பம் வரையிலான வேளாண் பணிகளை ‘செயல்படுத்திக் காட்டும் திட்டம்’ என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர்  விவசாய நிலங்கள், சீன நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படும். ‘சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு’ என்ற பெயரில் பெஷாவர் தொடங்கி கராச்சி வரை சாலைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட்கள் என பல இடங்களில் 24 மணி நேர வீடியோ கேமரா பதிவுகளுடன் கூடிய கண்காணிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். சீன கலாசாரத்தைப் பாகிஸ்தானில் பரவலாக்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளை சீன தொலைக்காட்சிகளுடன் இணைந்து பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப ஏதுவாக, நாடு முழுமைக்கும் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் வசதி பாகிஸ்தானில் ஏற்படுத்தப்படும் என்பது உட்பட பல திட்டங்கள் அதில் இடம் பெற்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகின்றன.

கிட்டத்தட்ட இந்தத் திட்டம் முழுக்கவே, ‘பாகிஸ்தானை சீனா எப்படிப் பயன்படுத்திக்கொள்ள முடியும்’  என்பதாகவே இருக்கிறது.

பாகிஸ்தானுக்குப் பயன் இல்லையா?

சரி, இந்தத் திட்டத்தினால் பாகிஸ்தானுக்கு சிறிதும் பலன் இல்லையா என்று கேட்டால்,  இந்தத் திட்டம் மூலம் வரும் சீன முதலீடுகளால்,  பாகிஸ்தானின் பொருளாதாரம் புத்துயிர் பெறும். அதே சமயம், சீனாவிலிருந்து கொண்டுவரப்படும் சரக்குகளை எந்த  அளவுக்கு தனது தொழில் வளர்ச்சிக்கு பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்கிறது என்பதைப் பொறுத்தே அதன்  பொருளாதார வளர்ச்சி அமையும் என்று கூறுகிறார்கள் அந்த நாட்டு பொருளாதார வல்லுநர்கள்.

இதனிடையே, ‘‘ஆரம்பத்தில், பாகிஸ்தானுக்குள் செய்யப்படும் அபரிமிதமான அந்நிய முதலீடுகளால், கிடைக்கிற  பொருளாதார முன்னேற்றம் நல்ல பலன்களை அளிக்கும். ஆனால், இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர்,  அதில் கிடைக்கும் லாபத்தை அந்நிய முதலீட்டாளர்கள் எடுத்துச் சென்றுவிடுவர். அத்துடன் இத்திட்டத்துக்காக வாங்கிய  கடனையும் திருப்பிச் செலுத்தத் தொடங்கும்போது, அது பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்’’ என  சர்வதேச நிதியம் பாகிஸ்தானை எச்சரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு சீனர்கள் வருவதற்கு விசா போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை; ஆனால், பாகிஸ்தானியர்கள் இப்படி சீனாவுக்குள் நுழைய முடியாது. இந்தமாதிரி எல்லா வகையிலும் சீனாவுக்கு சாதகமாகவும், பாகிஸ்தானுக்கு பாதகமாகவும் இருக்கிறது இந்தத் திட்டம்.

பாகிஸ்தானில் சீன ராணுவத் தளம்

இத்தகைய சூழ்நிலையில்தான், பாகிஸ்தானில் இந்தப் பொருளாதார வழித்தட திட்டம் தொடங்கும் பாதை அமைந்துள்ள குவாடர் துறைமுகம் அருகே, பாகிஸ்தான் – ஈரான் எல்லையிலிருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ள ஜிவானி என்ற இடத்தில் சீனா எதிர்காலத்தில் தனது ராணுவத் தளத்தை அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த இடம் CPEC பொருளாதார வழித்தட திட்டத்தின் பாகிஸ்தானின் முகப்பு இடமான குவாடர் துறைமுகத்திலிருந்து 90 கி.மீ. தொலைவில்தான் அமைந்துள்ளது.

இன்னும் ஐந்தாண்டுகளில் நிறைவேற்றி முடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிற இந்த CPEC திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், ஆண்டுக்கு சுமார் 13 மில்லியன் டன் சரக்குகளை இந்த குவாடர் துறைமுகம் கையாளும் என்றும், அதுவே 2030 வாக்கில் சுமார் 400 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் அளவுக்குக் கையாளும் என்றும், இந்தத் துறைமுகத்திலிருந்து மத்திய ஆசியா மற்றும் மேற்கு சீனாவுக்கு சரக்குகள் எடுத்துச் செல்வது எளிதாக அமைந்து விடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்தத் துறைமுகம் சீனாவைப் பொறுத்தவரை மிகுந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது என்பதால்தான், அதன் அருகே உள்ள ஜிவானியில் தனது ராணுவ தளத்தை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது.

சரக்குகளை எடுத்துச் செல்லும்  சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்துக்கு இந்தியா உள்ளிட்ட எந்த ஒரு அண்டை நாடுகளினாலும் அச்சுறுத்தல் வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த பாதை நெடுக பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து சீன ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இதன் ஒரு அம்சமாகவே ஜிவானியில் சீன – பாகிஸ்தான் கூட்டுக் கடற்படை மற்றும் விமானப்படைத் தளங்களை அமைத்து ஒன்றாக பயிற்சியில் ஈடுபடவும் சீன ராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2017 நவம்பர் மாதம் பாகிஸ்தான் படையினருக்கு சீன ராணுவம் சிறப்பு பயிற்சி ஒன்றை அளித்ததாக சேனல் 7 என்ற பாகிஸ்தானின் உருது சேனல் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்   

ஏற்கெனவே ‘பட்டுப் பாதை’ திட்டத்தின் ஒரு அம்சமாக இலங்கையின் அம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனா வளைத்துப் போட்டது  எப்படி என்பதையும், அந்த துறைமுகம் சீனாவுக்கு 99 வருட  குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டதன் மூலம் இந்திய பாதுகாப்புக்கு அது எப்படி அச்சுறுத்தலாக மாறி உள்ளது என்பதையும் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். தற்போது குவாடர் துறைமுகம் அருகே சீனா ராணுவத் தளம் அமைக்கத் திட்டமிடுவதும், CPEC திட்டத்தை இந்தியா - பாகிஸ்தான்  இடையே தீர்க்கப்படாமல் இருக்கும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் உள்ள கில்கிட் - பல்டிஸ்தான் வழியாக இந்தப் பாதையைக் கொண்டு செல்வதும்  நிச்சயம் இந்தியாவுக்குக் கூடுதல் அச்சுறுத்தலாகவே அமையும்.  

அதே சமயம் பாகிஸ்தான் – அமெரிக்கா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலும், சீனா உலக அரங்கில் ஒரு சர்வதேச சக்தியாக மாறுவதை அமெரிக்கா  விரும்பவில்லை என்பதால், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுப்படும் என்பதால், சீனாவும் பாகிஸ்தானும் சற்று எச்சரிக்கையுடன்தான் இந்தியாவிடம் நடந்துகொள்ளும் என்பதுதான் இதில் கிடைத்துள்ள ஒரே ஆறுதல்!

=========================================================================

 

CPEC  திட்டம்:  முக்கிய அம்சங்கள்

எனப்படும் ஐரோப்பா, ஆசியா என இரண்டு கண்டங்களின் ஒட்டுமொத்த நுகர்வோர் சந்தையையும் தனது டிராகன் கரங்களுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் சீனா உருவாக்கி இருப்பது, One Belt-One Road (OBOR) எனப்படும் ‘ஒரு சூழல் - ஒரு பாதை’ என்ற திட்டம். பண்டைக்காலத்தில் ‘பட்டுப்பாதை’ என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளையும் ஆசியாவையும் இணைக்கும் வணிகப்பாதை ஒன்று இருந்தது. அதை மீண்டும் உருவாக்குவதுதான், ‘புதிய பட்டுப் பாதை’ (New Silk road) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தின் ஒரு அம்சமாகவே பாகிஸ்தானுடன் இணைந்து CPEC (China Pakistan Economic Corridor) எனப்படும்  சீன - பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது.

* உட்கட்டமைப்பு மற்றும் மின் திட்டங்கள் என சுமார் 55 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நிறைவடைந்தால் அது மேற்கு சீனாவையும் தெற்கு பாகிஸ்தானையும் இணைக்கும் சுமார் 3,000 கி.மீ. தூர சாலைகளையும், ரயில்வே பாதைகளையும், பைப் லைன்களையும் கொண்டிருக்கும்.

* இந்தப் பொருளாதார வழித்தடம், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பிரிவினை முழக்கங்களை எழுப்புகின்ற பலுச்சிஸ்தான் மாகாணத்தின் வழியாகவும், இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்னைக்குரிய இடமாக உள்ள கில்கிட்- பல்டிஸ்தான் வழியாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகவும் அமைக்கப்படுகிறது.

* இந்தத் திட்டத்தினால் தங்கள் பகுதியிலுள்ள இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதாகவும், இந்தத் திட்டத்தின்  பணிகளுக்கு சீன பணியாளர்களே பெருமளவில் அமர்த்தப்படுவதால் தங்களது வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாகவும், தங்களது நிலங்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் வலுக்கட்டாயமாக CPEC  திட்டத்துக்காக கையகப்படுத்தப்படுவதாகவும் கில்கிட் - பல்டிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பலுச்சிஸ்தான் மாகாண மக்கள் சீனா மற்றும் பாகிஸ்தான் அரசுகள்மீது கோபத்துடன் உள்ளனர்.

* CPEC  திட்டப் பணிகளின் வளர்ச்சியை இந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து சாட்டிலைட் உதவியுடன் சீனாவும் பாகிஸ்தானும் கண்காணிக்கத் தொடங்கும்.

========================================================================================

ஜின்பிங் வருவார்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்