வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (19/01/2018)

கடைசி தொடர்பு:17:38 (19/01/2018)

தனிமையில் அவதிப்படுபவர்களை வழிநடத்த ஓர் அமைச்சர்...! பிரிட்டன் புது முயற்சி

பிரிட்டன் அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, தனிமையில் அவதிப்படும் மக்களுக்காக ஓர் அமைச்சரை நியமனம் செய்திருக்கிறார் பிரதமர் தெரேசா மே. தற்போது விளையாட்டு அமைச்சராகப் பணிபுரிந்துவரும் ட்ரேசி கிரௌச், தனிமை அமைச்சராக (Loneliness Minister) சமீபத்தில் பதவியேற்றார். மறைந்த MP ஜோ காக்ஸின் நினைவாக இந்தப் பதவியை அறிவித்திருக்கிறார் தெரேசா மே.

ஜோ காக்ஸ்

41 வயதான ஜோ காக்ஸ், 2016-ம் ஆண்டு ஜூன் 16 அன்று தாமஸ் அலெக்ஸாண்டர் மேயர் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேயர், ஓர் இனவெறியாளர்; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரும்கூட. காக்ஸை தேசத்துரோகி என்று தவறாகக் கருதி துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொன்றிருக்கிறார் என்று வழக்கு பதிவுசெய்து, ஆயுள் தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. காக்ஸ் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இரண்டு குழந்தைகளுக்கும் அளவில்லாத அன்பைக் கொடுப்பதே காக்ஸின் ஆசை எனக் குறிப்பிட்ட அவரின் கணவர் ப்ரெண்டேன், “வெறுப்புகளைவிடுத்து அன்பால் உலகை ஆளலாம் என்ற நம்பிக்கை உடையவர் காக்ஸ். தனிமை ஆபத்தானது என்று எப்போதுமே குறிப்பிடுவார். அவர், வாழ்க்கையை நினைத்து என்றைக்குமே வருந்தியதில்லை. ஒவ்வொரு நாளையும் புன்னகையுடன் கடத்துவார். அவரின் வாழ்நாள் ஆசையை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன்” என்று பகிர்ந்துகொண்டார்.

ப்ரெண்டேன் காக்ஸ்

ஜோ அமைச்சராக இருந்தபோதே தனிமை நோயினால் தவிக்கும் மக்களுக்கு என ‘இண்டிபெண்டன்ட் க்ராஸ் பார்ட்டி’ என்ற ஓர் அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பின் நோக்கம், ‘தனிமை’ என்ற கொடிய நோயை ஒழிப்பதுதான். காக்ஸின் மறைவுக்குப் பிறகு, அமைச்சர்கள் ரேச்சல் ரீவ்ஸ் மற்றும் சீமா கென்னடி இந்த அமைப்பை வழிநடத்திச் செல்கின்றனர். இதையடுத்து, லண்டன் MP-க்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்டவர்களின் உதவியால் தனிமையை எதிர்கொள்ளும் பிரசாரம் ஒன்று ஜோ காக்ஸின் பெயரிலேயே நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

“தனிமையின் பிரச்னை நாடெங்கும் இருப்பதை உணர்ந்து, அதை ஒழிப்பதற்கு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டார் ஜோ காக்ஸ். தனிமை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறைய உதவிகளைச் செய்துவந்தார். புதிதாக நியமனம் செய்த அமைச்சர் ட்ரேசி கிரௌச், தற்போது தனியாராக இயங்கிவரும் அமைப்போடு இணைந்து பல நல்ல செயல் திட்டத்தைச் செய்யவுள்ளார். சுமார் 9 மில்லியன் மக்கள் தனிமையில் அவதிப்படுகின்றனர் என்றும் அதில் 2 லட்சம் பேர், தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம்கூட பேசுவதில்லை என்றும் ஆய்வுகளில் கூறப்படுகிறது. இந்த நவீன காலத்திலும் மக்கள் தனிமையில் இருக்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும்” என்றார் தெரேசா மே. 

தெரேசா மே

“ஜோ, தனிமையின் வலியை நன்கு அறிந்தவர். இந்தப் பிரச்னையை ஒழிப்பதற்கு மிகவும் பாடுபட்டார். அவரின் நினைவாக இந்தப் பதவியில் இருக்கும் நான், அவரின் கொள்கையை நிறைவேற்றும் பணியை நிச்சயம் தொடங்குவேன்" என்று உறுதியாகக் கூறினார் கிரௌச்.

ட்ரேசி கிரௌச் - தனிமை அமைச்சர்

“ ‘தனிமை, சிறியவர்கள் பெரியவர்கள் என வேறுபாடு பார்க்காது’ என்று ஜோ எப்போதும் கூறுவார். அப்படிப்பட்ட தனிமையினால் ஏற்படும் துயரங்களை அறிந்து, அரசு இப்படிப்பட்ட முயற்சிகளை எடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று நெகிழ்ந்தார் ரேச்சல் ரீவ்ஸ்.

ரேச்சல் ரீவ்ஸ்

‘ஜோ மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார்' என்று ஜோவின் கணவர் ப்ரெண்டேன் காக்ஸ் ட்வீட் செய்துள்ளார். மேலும் Office of National Statistics (ONS), தனிமையை அளக்கும் முறையை ஆராய்ந்து செயல்படுவதற்குத் தேவையான நிதிகளையும் வழங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்