’’ஐந்து வருடங்கள் கழித்து வருகிறேன்!’’ - மனைவியிடம் சொல்லிவிட்டு ஆஸ்திரியாவில் மாயமான பாக். தூதரக ஊழியர்

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்துவந்த ஊழியர் ஒருவர் முக்கிய ஆவணங்களுடன் மாயமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் சாரா-இ-கார்போஸா பகுதியைச் சேர்ந்த அந்த நபர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தவர். அவர் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கிளார்க்காக பணியமர்த்தப்பட்டார். தேசப்பாதுகாப்பு தொடர்பான முக்கியமான பணியை பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அவருக்கு ஒதுக்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில முக்கியமான ஆவணங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அந்த ஆவணங்கள் வெளியானால் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும் என்றும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டது. மாயமான ஊழியர் தொடர்பாக பாகிஸ்தான் நாட்டு சட்டப்படி தேசதுரோகம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், அந்த முக்கிய ஆவணங்களுடன் வியன்னாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து கடந்த 2-ம் தேதி அவர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமானவரின் மனைவியிடம்  நடத்திய விசாரணையில், தனது கணவர் சொந்தவிருப்பத்தின் பேரிலேயே தூதரகத்திலிருந்து கிளம்பிச் சென்றதாகவும், 5 ஆண்டுகள் கழித்து அவர் திரும்ப வருவதாகக் கூறிச் சென்றதாகவும் தெரிவித்தார். அந்த ஆவணங்கள் எதிரி நாடுகளிடம் கிடைத்தால் பாகிஸ்தானுக்கு எதிராக அவை பயன்படுத்தப்படாலாம் என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!