வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (25/01/2018)

கடைசி தொடர்பு:10:59 (25/01/2018)

``ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்கள் எனக்கு ஆசிரியர்கள்!" ஷாரூக்கான்

டந்த திங்கள் கிழமை (22.01.2018) சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற 'WORLD ECONOMIC FORUM' நடத்திய விழாவில், மனித நேயம் மற்றும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பணிக்காக, 24-ம் ஆண்டின் கிறிஸ்டல் விருதை வாங்கினார் நடிகர், ஷாரூக்கான். அவர் நடத்திவரும் மீர் ஃபவுன்டேஷன் மூலமாகச் செய்துவரும் சமூகப் பணிக்காக இந்த விருது தரப்பட்டது. அந்த விருதை வாங்கிவிட்டு, இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் பற்றி ஷாரூக்கான் பேசிய பேச்சு எல்லோரையும் கவர்ந்தது. ஷாரூக்கான் பேசியவை ஐந்து பாயின்டுகளாக இங்கே... 

ஷாருக்கான்

சமத்தன்மை என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வார்த்தையல்ல. அது இயற்கையால் வழங்கப்பட்ட வார்த்தை. நமக்குச் சில அனுகூலங்கள் கிடைக்கும் என்பதற்காக, நாம் அந்த வார்த்தையை அற்பமாகப் பயன்படுத்தி வருகிறோம். பெண்கள் அவர்களுக்கான தேர்வினை தெரிவுசெய்ய அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் ஒடுக்கப்படும் முறை உலகின் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப மாறுபடலாம். ஆனால், அவர்கள் பெண்களாகப் பிறந்துவிட்டதாலே ஒடுக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். ஆண்கள், பெண்களை இப்படி நடத்துவதற்குக் காரணம், அவர்கள் மிகவும் பயந்துபோய் இருக்கிறார்கள். 

நடிகர்கள் புகழ்பெற்ற நார்சிஸ்ட்டுகள். எவ்வளவுதான் வெளிப்புற அழகில் நம்பிக்கை இல்லாதவர்களாகக் காட்டிக்கொள்ள முற்பட்டாலும், எப்படியோ அதில் சிக்குண்டுகொண்டோம். இதுபோன்று அழகுமீதான அதீத ஈர்ப்பினால் சூழ்ந்திருந்த நான், சில வருடங்களுக்கு முன்பு மிகவும் மோசமான ஆசிட் அட்டாக்கில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரைப் பார்த்தேன். அது என் வாழ்க்கையைச் சிறிய அளவிலாவது மாற்றியது. ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துவதற்காக அவர் முகத்தில் ஆசிட் வீசுவது என்பது, மிகமோசமான அடக்குமுறைகளில் ஒன்று. ஒரு பெண், ஓர் ஆணிடமோ ஒரு கூட்டத்திடமோ ’முடியாது’ என்று சொல்லும் உரிமையற்றவர் என்கிற எண்ணம் படிந்துள்ளது. நான் பார்த்த ஒவ்வொரு பெண்ணிடமுமே, வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துசெல்வதற்கான தைரியத்தையும், தான் பாதிக்கப்பட்டவர் என்கிற நிலையையே நிராகரிப்பதையும் பார்த்தேன். அவர்களுக்கு நடைபெற்ற நிகழ்வு, அவர்களை இன்னும் வலிமையானவராகவும், விடுவித்துக்கொள்பவர்களாகவும், அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அது முடியாது என்று சொல்வதை மாற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களிடம் இதுதான் என்னை மிகவும் வியக்கவைத்தது. 

‘பாதிக்கப்பட்டவரை’ தைரியம் எப்படி ஹீரோவாக மாற்றும், அவர்களிடம் கருணையைக் காட்டுவதைவிட கைக்கோத்து ஒற்றுமை காட்டுவது துன்பத்தைக் கடந்துசெல்லவைக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். சமத்துவம் என்பது வெறுமனே கருத்து கிடையாது. அது எல்லா உயிரினங்களையும் உள்ளடக்கும் உண்மை. மற்றவர்களுக்குத் தொண்டு செய்வது என்பது நம் விருப்பமல்ல, அது ஒரு கடமை என்பதை நான் கற்றுக்கொண்டேன். 

இரண்டு உயிரினங்களுக்கு நடுவே இனி ஒருபோதும் கொடுப்பவர்கள், பயனர்கள் என்கிற பிரிவினை கிடையாது. இங்கு இயற்கை, ஆன்மிகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் என்று நிறைய வளங்கள் இருக்கிறன. அவை எல்லோருக்குமானது. ஆனால், சிலருக்கு மட்டுமே அதை அதிகமாக அணுகக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது விபத்தாகவோ, திறமை, டிசைன், கடும் உழைப்பின் காரணமாகவோ கிடைத்திருக்கிறது. 

ஒரு பெண்ணிடம் ‘ஆம்’ என்கிற பதிலைப் பெற அவரை நிர்ப்பந்திப்பதற்குப் பதிலாக, வேண்டுதல் விடுக்கவும் சில நேரங்களில் கெஞ்சவும், பிச்சை எடுக்கவும் கற்றுக்கொடுத்ததற்காக, இந்த நிலைக்கு என்னைக் கொண்டு வந்ததற்காக, என் தங்கை, மனைவி, என் குட்டி மகள் ஆகியோருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.


டிரெண்டிங் @ விகடன்