வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (29/01/2018)

கடைசி தொடர்பு:13:02 (29/01/2018)

பென்டகன் பேப்பர்ஸ்... வாட்டர்கேட் ஊழல்... The Post படம் பேசும் அமெரிக்க அரசியல்!

தி போஸ்ட்

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஒரு படத்தை எடுக்க குறைந்தபட்சம் இரண்டு வருடம் எடுத்துக்கொள்வார். ஆனால், அவர் தற்போது ஒரு படத்தை ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் முடிக்கிறார். காரணம் என்ன என்று கேட்டால், "இது காலத்தின் கட்டாயம்; அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசாங்கம்தான், என்னை இந்த அளவுக்கு அவசரப்படுத்தியது" என்கிறார். 'அப்படி அது என்ன படம்? அதை ஏன் இவ்வளவு வேகமாக எடுக்க வேண்டும்?' என்றால் பதிலாக வந்து நிற்கிறது ''தி போஸ்ட்'' திரைப்படம். அரசுக்கும், பத்திரிகை நிறுவனத்துக்கும் இடையே நடக்கும் தர்மயுத்தம்தான் ''தி போஸ்ட்'' படத்தின் கதை.

''பென்டகன் பேப்பர்ஸ்'' எனும் ஆவணம் வெளியாகி, அமெரிக்காவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டுவராமல் அமெரிக்க அதிபர்கள், காலம் தாழ்த்தியது, வியட்நாம் போர் குறித்த தவறான தகவல்களை அமெரிக்க மக்களிடம் பரப்பியது என பல்வேறு முறைகேடான செயல்களில் ஹாரி எஸ். ட்ரூமேன், எய்சன் ஹவர், ஜான் எஃப் கென்னடி, ஜான்சன், ரிச்சர்டு நிக்சன் என 1945 முதல் 1971-ம் ஆண்டுவரை பதவியில் இருந்த அமெரிக்க அதிபர்கள், தங்களின் தவறுகளை ரகசியமாக வைத்து வந்துள்ளனர். இந்த ஆவணங்கள் ஒரு நேர்மையான அமெரிக்க அதிகாரி கையில் கிடைக்கிறது. அதை முதலில் 'டைம்ஸ்' பத்திரிகைக்கு அளிக்கிறார் அவர். அவர்கள் வெளியிடும் செய்தியில் அதிரும் வெள்ளை மாளிகை, டைம்ஸ்மீது வழக்குப் பதிவு செய்கிறது. 

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள போதிலும், சரியான வழிநடத்துதல் இல்லாத நிலையிலும் தரமான செய்திகளை மட்டுமே நம்பி இயங்கும் 'வாஷிங்டன் போஸ்ட்' இந்தச் செய்தியைத் துரத்துகிறது. பல பிரச்னைகளுக்கு நடுவே வெளியாகும் செய்தியால் மிகப்பெரிய சர்ச்சை வெளிச்சத்துக்கு வருகிறது. இதனால் கோபம் கொண்ட அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன், "டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகள் மற்றும் அவற்றின் நிருபர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழையக்கூடாது" என உத்தரவிடுகிறார். 
பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான இந்த வழக்கில், பத்திரிகைகள் தங்களின் நியாயத்தை எப்படி நிலைநாட்டி, அரசுக்கு எதிராக வெற்றி பெறுகின்றன என்பதுதான் "தி போஸ்ட்" சொல்லும் கதை.

தி போஸ்ட்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இந்தச் சம்பவத்தை சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் படமாக எடுத்திருக்கிறார். ஆனால், "வழக்கமாக அவர் படம் எடுக்க அதிக காலத்தை செலவிடும் நிலையில், இந்தப் படத்தை மட்டும் ஆறு முதல் எட்டு  மாதங்களில் எப்படி முடித்தார்?" என்ற கேள்விக்கு தற்போதைய அமெரிக்க அரசைக் காரணம் காட்டுகிறார் ஸ்பீல்பெர்க். "இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை நான் 11 மாதங்களுக்கு முன்புதான் படித்தேன். தற்போதைய காலச்சூழலுக்கு ஏற்ற படம் என்பதால்தான் இதனை விரைந்துமுடித்தேன். அதிபர் டொனால்டு டிரம்ப், மீடியாக்களை போலி என விமர்சித்து வருகிறார். 'உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகங்களைப் போலி' என விமர்சிக்கும் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

அன்று நிக்சன் வெள்ளை மாளிகைக்குள் சில பத்திரிகைகளுக்கு அனுமதி மறுத்தார். இன்று டிரம்ப் அதையே வேறு மாதிரியாக, ஊடகங்களை பொதுவெளிகளில் விமர்சிக்கிறார். 'இந்தப் படத்தில் சில இடங்களில் டிரம்பின் செயல்களையொத்த நிகழ்வுகள் பிரதிபலிக்கிறதே' என்று சிலர் கேட்கிறார்கள். வேறு வழியில்லை ஒரே தவறை மீண்டும் செய்யும்போது சென்றமுறை செய்த தவறுடன் அது ஒப்பிட்டுப் பார்க்கப்படுவது வழக்கமே" என்கிறார் ஸ்பீல்பெர்க்.

'தி போஸ்ட்' படத்தின் இறுதியில் இன்னொரு ஊழல் பற்றிய தகவலோடு முடிக்கப்பட்டிருக்கும். அது, முன்னாள் அதிபர் நிக்சன் பதவி விலக வழிவகுத்த வாட்டர்கேட் ஊழலாகும். அமெரிக்க அதிபரை பதவி விலக வைக்கும் அளவுக்கு பத்திரிகை செய்திகள் வலிமை பொருந்தியதாக இருந்துள்ளன. வாஷிங்டனில் உள்ள வாட்டர்கேட் கட்டடத்தில் தகவல்களை ஒட்டுக்கேட்டு, நிக்சன் இரண்டாவதுமுறை அதிபராவதற்கு உதவி செய்ததே அந்த ஊழல். அமெரிக்காவில் அரசு வழிதவறி நடந்த விஷயங்களை திரையில் தத்ரூபமாக காட்டியிருக்கிறார். டிரம்ப்பை கோல்டன் க்ளோப் மேடையில் விமர்சித்த மெரில் ஸ்ட்ரீப்தான், இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். டிரம்ப்-க்கு எதிராக இருக்கும் ஹாலிவுட், இம்முறை ஒட்டுமொத்த அமெரிக்க அரசியலையும் சாடியுள்ளது. ஆஸ்கர் ரேஸில் இருக்கும் இந்தப் படத்தின் அதிர்வலைகள் அகாடமி விருதுகள் மேடையிலும் ஒலிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. "தி போஸ்ட்" அமெரிக்க அரசியலை உரக்க கூறியுள்ளது என்றால் மிகையல்ல...


டிரெண்டிங் @ விகடன்