கிராமி விழாவில் ட்ரம்ப் வாங்கிய கலாய்... தேர்தல் முடிந்த பிறகும் வறுத்தெடுத்த ஹிலாரி! | Hillary Clinton sent the crowd into a roaring frenzy with an appearance at Grammy Awards

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (29/01/2018)

கடைசி தொடர்பு:18:30 (29/01/2018)

கிராமி விழாவில் ட்ரம்ப் வாங்கிய கலாய்... தேர்தல் முடிந்த பிறகும் வறுத்தெடுத்த ஹிலாரி!

சர்வதேச அளவில் இசைத் துறையில் சாதிக்கும் கலைஞர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கி கௌரவிக்கும் கிராமி விருதுகள் விழா, இந்த ஆண்டு நியூ யார்க் நகரின் மேடிசன் சதுக்கத்தில் நடந்தது. உலக அளவில் பிரபலமான இசைக் கலைஞர்கள் பலர் சூழ, விருதுகள் ஒன்றன் பின் ஒன்றாக வழங்கப்பட்டு வந்தது. இந்த விழாவின்போது, ஒரு வீடியோ காட்சி திரையிடப்பட்டது. அந்தக் காட்சியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் தோன்றி ட்ரம்ப்பை கலாய்த்துள்ளார். 

Hillary and Trump

ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இந்த ஓராண்டு காலம் குறித்து அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாளர் மைக்கெல் உல்ஃப், `Fire and Fury: Inside the Trump White House' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் அங்கு அதிகமாக விற்பனையாகிவருகிறது. அதில் வரும் சில வரிகளைத்தான் ஹிலாரி மேற்கோள் காட்டி ட்ரம்ப்பைக் கலாய்த்துள்ளார். 

வீடியோவில் ஹிலாரி, முகத்தை மறைத்துக்கொண்டே புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினார். பின்னர், புத்தகத்தை கீழே இறக்கி ஆடியன்ஸுக்கு தனது முகத்தைக் காட்டினர். அரங்கமே கர கோஷத்தில் மூழ்கியிருந்தபோது ஹிலாரி, `ட்ரம்ப்புக்கு வெகு நாள்களாகவே விஷம் வைத்து தான் கொலை செய்யப்படுவார் என்ற பயம் இருக்கிறது. மெக்டோனல்ட்ஸில் சாப்பிட அவருக்கு மிகவும் பிடித்திருந்ததற்கு ஒரு காரணம்: யாருக்கும் அவர் வந்துபோவது தெரியாது. மேலும், அங்கு உணவு முன்பே தயாரிக்கப்பட்டுவிடும் என்பதால்தான்' என்று கூற, ஒருவர் தோன்றி, `அது கச்சிதமாக இருந்தது' என்று கூறினார். அதற்கு ஹிலாரி, `அப்படியென்றால் எனக்கு கிராமி கிடைப்பது உறுதிதானே' என்று கேட்க, அந்த நபர், `கண்டிப்பாக' என்று முடிக்கிறார். ஹிலாரி பேசியுள்ள இந்தப் பகுதி, கிராமி விழாவில் பங்கேற்றவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இணையத்திலும் படுவைரலாகி வருகிறது.