35,000 அடி உயரத்தில்  பிரசவம்... நைஜீரிய பெண்ணின் நெகிழ்ச்சிக் கதை! | Indian-born doctor helps deliver baby in international flight

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (01/02/2018)

கடைசி தொடர்பு:18:25 (01/02/2018)

35,000 அடி உயரத்தில்  பிரசவம்... நைஜீரிய பெண்ணின் நெகிழ்ச்சிக் கதை!

பிரசவம்

PC: Cleveland Clinic

டிசம்பர் 17, 2017... அந்த விமானப் பயணம் மிக சுவாரஸ்சியமாக இருக்கும் என நினைத்தார், 27 வயது டாக்டர் சிஜ் ஹிமல் (Sij Hemal). ஏனென்றால், முதன்முதலாக ‘ஃபர்ஸ்ட் கிளாஸில் பயணிக்கப்போகிறார். புது டெல்லியிலிருந்து பாரீஸ், பாரீஸிலிருந்து நியூயார்க் செல்லும் திட்டம். டெல்லியிலிருந்து பாரீஸ் சென்ற ஹிமல், நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறினார். அந்த விமானப் பயணத்தில் ஒரு கிளாஸ் ஷாம்பெயின் குடித்துவிட்டு, ஹாயாக திரைப்படம் பார்க்க நினைத்திருந்தார். ஆனால், சற்று நேரத்தில் ஓர் அசாதாரணமான விஷயத்தைச் செய்யப்போகிறோம் என்று நிச்சயமாக நினைத்திருக்க மாட்டார். 

அவருக்கு அருகில் டோய்ன் ஒகுண்டிபி (Toyin Ogundipe) என்ற நைஜீரியாவைச் சேர்ந்த 41 வயது கர்ப்பிணி பெண் அமர்ந்திருந்தார். கிட்டத்தட்ட 35,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. விமானத்தைத் தரையில் இறக்க வேண்டும் என்றால், அசோரீஸ் தீவுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளத்துக்குச் செல்ல வேண்டும். அங்கே செல்ல இரண்டு மணி நேரம் ஆகும். அதிலும், தற்போது செல்லும் பாதையிலிருந்து விலகிச் செல்ல வேண்டும். அமெரிக்காவின் சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்றடையவோ நான்கு மணி நேரமாகும் என்கிற நிலை. அந்தப் பெண்ணைப் பரிசோதித்தார் சிஜ் ஹிமல். 

“அவர் சற்று நேரத்தில் குழந்தையைப் பெற்றுவிடுவார் என்று தெரிந்தது. அதனால், நானும் டாக்டர் சுசன் ஷெப்பர்டும் சேர்ந்து அவரை ஆசுவாசப்படுத்தி, சிகிச்சையை ஆரம்பித்தோம்'' என்கிறார் சிஜ் ஹிமல். 

டாக்டர் சுசன், அமெரிக்காவில் குழந்தை நல மருத்துவராகப் பணிபுரிபவர். தாகர் என்ற இடத்தில் நடந்த ஒரு கலந்தாய்வில் பங்கேற்றுவிட்டு அதே விமானத்தில் அமெரிக்காவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். 

அந்தப் பெண்ணை விமானத்தின் முதல் வகுப்பில் இருக்கும் அறைக்கு மாற்றினார்கள். அவரின் நான்கு வயது மகள் ஏமி, விமானப் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டார். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு ஆகியவற்றைச் சரிபார்த்துக்கொண்டிருந்தபோதே, அந்தப் பெண்ணுக்குப் பிரசவ வலிக்கான அறிகுறிகள் அதிகரித்தன. ''ஒரு மணி நேரத்துக்குள் அந்தப் பெண்மணிக்கு விமானத்திலேயே குழந்தைப் பிறந்துவிடும் என்று தெரிந்தது” எனக் கூறுகிறார் ஹிமல். 

பெண்ணுக்கு பிரசவம்

அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு, ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் டோய்ன் ஒகுண்டிபி. ஒரு கத்தரிக்கோலால் தொப்புள்கொடியைப் பிரித்தார் ஹிமல். இவர், அடிப்படையில் சிறுநீரகச் சிகிச்சை நிபுணர். ஆனால், மருத்துவக் கல்லூரியில் பயிலும்போது, ஏழு பிரசவ சிகிச்சைகளைப் பார்த்திருக்கிறார். தற்போது, அமெரிக்காவிலும் இருக்கும் க்ளேவ்லாண்ட் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். “இதுபோன்ற சூழ்நிலையில், அமைதியாகவும் திறமையாகவும் சிந்திக்கக் கற்றுத்தந்திருக்கிறார்கள். அதைத்தான் இந்தச் சூழ்நிலையில் பயன்படுத்தினேன். என்னவெல்லாம் தவறாக நடக்க வாய்ப்பிக்கிறது என்று ஒருமுறை சிந்தித்துப் பார்த்தேன். பிறகுதான், அதைத் தவிர்க்கும் விதமாகச் செயல்பட தொடங்கினேன்” என்கிறார் ஹிமல். 

விமானம் தரையிறங்கியதும் தாயையும் குழந்தையையும் விமான நிலையத்துக்கு அருகிலிருந்த ஜாமாய்க்கா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து, “ஆரம்பத்தில் எனக்குப் பதற்றமாக இருந்தது. ஆனால், பாதுகாப்பானவர்களிடம்தான் இருக்கிறேன் என்று உணர்ந்து அமைதியானேன். லேபர் அறையில் குழந்தையைப் பெற்றிருந்தாலும், இதைத்தான் செய்திருப்பார்கள். சொல்லப்போனால், அதைவிட நன்றாகவே என்னைப் பார்த்துக்கொண்டார்கள்” எனப் புன்னகைக்கும் டோய்ன் ஒகுண்டிபி, தன் குழந்தைக்கு ஜாகே (jake) என்று பெயர் சூட்டியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்