’ப்ளீஸ்... நான் கேம் முடிக்கணும்.’ - கால்கள் செயலிழந்த பின்னரும் வீடியோ கேம் விளையாடத் துடித்த இளைஞர்

தொடர்ந்து 20 மணி நேரம் வீடியோ கேம் விளையாடியதால், சீன இளைஞருக்குக் கால்கள் செயல்படாமல்போன சம்பவம், வீடியோ கேம் பிரியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

வீடியோ கேம்
 

இதுகுறித்து சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் விவரம் பின்வருமாறு...

சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள இணைய மையத்தில் (cyber cafe) தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கடந்த மாதம் 27-ம் தேதி காலை, இளைஞர் ஒருவர் இணைய மையத்துக்கு வந்துள்ளார். கணினி முன் அமர்ந்து வீடியோ கேம் விளையாடத் தொடங்கிய அவர், சிறிது நேரத்தில் மிக மிக மும்முரமாக விளையாட்டில் மூழ்கிவிட்டார். மறுநாள் மதியம்வரை விளையாடிக்கொண்டே இருந்தாராம்.

ஒருகட்டத்தில், அந்த இளைஞர் கழிப்பறைக்குச் செல்வதற்காக சீட்டில் இருந்து எழ முற்பட்டுள்ளார். அவரால் இரு கால்களையும் நகர்த்த முடியவில்லை. அவரின் இடுப்பு முதல் பாதம் வரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் மரத்துப்போனதை இளைஞர் உணர்ந்தார். அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். பயத்தில் அவரும் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள், அவரை ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.  ஸ்ட்ரெச்சரில் மயக்க நிலையில் இருந்தபோதும், ’ நான் அந்த கேமை முடிக்க வேண்டும்... இன்னும் ஒரு சில கட்டம்தான் இருக்கிறது...ப்ளீஸ் என்னை விடுங்க’ என்று உளறிக்கொண்டே இருந்ததாக, அந்த இளைஞரின் நண்பர் ஊடகங்களிடம் பேட்டியளித்துள்ளார். இளைஞரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச்செல்லும் வீடியோ, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

சீனாவில் இப்படி நடப்பது புதிதல்ல. கடந்த ஆண்டு, மொபைலில் வீடியோ கேம் விளையாடி 21 வயது பெண் ஒருவர் பார்வை இழந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!