Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குப்பை, சாக்கடை, புழு, பாம்பு, கொசு, ஈ, பூச்சி... ஒரு குப்பை வாழ்க்கையின் கதை!

உங்கள் வீட்டிலிருக்கும் அந்தச் சிறிய பிளாஸ்டிக் குப்பைத்தொட்டி நிரம்பி வழிகிறது. ஒருநாள் அதை வெளியில் கொட்டவில்லை. இரண்டாவது நாள்... மூன்றாவது நாள்... நான்காவது நாள்? அந்த துர்நாற்றத்தை தாங்கிட முடியுமா? ஒரே ஒரு குப்பைத் தொட்டி, அதுவும் ஒரு வீட்டுக் குப்பை. அந்தத் துர்நாற்றமே பெரும் பிரச்னை என்றால்... பல ஆயிரம் வீட்டுக் குப்பைகள்... நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அப்படியே இருக்கிறது. அழுகிய குப்பைகள் மொத்த நிலத்தையே கறுப்பாக்கி இருக்கிறது. அதிலிருந்து வெளியேறும் எரிவாயு... திடீரென தீ பற்றிக்கொள்ளும். மொத்த நீர்நிலைகளும் நாசமாகிப் போன நிலை. கழிப்பறை கிடையாது. சாக்கடை கிடையாது. சாலையெங்கும் மலங்கள் நிறைந்து இருக்கும். கொசுக்கள், ஈக்கள், பாம்புகள், புழுக்கள்... இந்த நிலையில் வாழ்வதை நினைத்துப் பார்க்க முடியுமா? ஆனால், ஒரு பெரும் மக்கள் கூட்டம் அதில்தான் வாழ்கிறது. அதுவும் பெருமகிழ்ச்சியோடு, கொண்டாட்டமாய் அந்த மக்கள் அந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் ஓர் ஓரத்தில் அமைந்திருக்கிறது "ஸ்மோகி மவுண்டைன்" (Smokey Mountain). 

குப்பை மேடு - மணிலா, பிலிப்பைன்ஸ்

ஆம்... அது மலைதான். கிட்டத்தட்ட 50 மீட்டர் உயரத்திற்கு அங்கு குப்பை மலைகள் இருக்கும். ஆனால், ஒரு காலத்தில் இது இப்படி இல்லை. அந்த மக்கள் இப்படியானவர்களாக இல்லை. இவர்கள் கடலாடியவர்கள். மீனவர்கள். இது ஒரு கடற்கரை கிராமம். ஆழ்கடலில் மூச்சைப் பிடித்து வெகுதூரம் நீந்திய இந்த மக்கள் கூட்டம், இன்று இந்த துர்நாற்றத்தில் மூக்கைப் பிடித்து சொதசொதப்பான சாக்கடையில் கால் வைத்து நடந்துகொண்டிருக்கிறது.

Smokey Mountain - மணிலா, பிலிப்பைன்ஸ்

மணிலா. உலகின் மிக வறுமையான நகரங்களில் ஒன்று. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர். 1960-க்கு முன்னர் வரை இந்தக் கிராமத்தில் எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை. அதன் பின்னர், கொஞ்சம், கொஞ்சமாக மணிலா  நகரம் வளரத் தொடங்கியது. விரிவடையத் தொடங்கியது. பிரச்னைகளும் தொடங்கியது. குப்பைகளைச் சரியான முறையில் கையாள அரசாங்கம் எந்தத் திட்டங்களையும் தீட்டவில்லை. குவியும் குப்பைகளை எங்கு கொட்டுவது என்ற கேள்விக்கு, பதிலாக நின்றது இந்த அழகிய கடற்கரை கிராமம். குப்பைக் கொட்டத் தொடங்கினார்கள். கொட்டித் தீர்த்தார்கள். கொட்டி, கொட்டித் தீர்த்தார்கள். முதலில் அது ஒரு பெரும் மலையாக உருவெடுத்தது. அதற்கு " ஸ்மோகி மவுண்டைன் 1" என்று பெயர்.

Smokey Mountain - பிலிப்பைன்ஸ்

1982-ல், அன்றைய பிலிப்பைன்ஸ் பிரதமர் ஃபெர்டினன்ட் மார்கோஸ் (Ferdinand Marcos) தன் மக்கள்மீது கழிவிரக்கம் கொண்டார். அந்தச் சமயத்தில் ஸ்மோகி மவுண்டைன் 1 முடிந்து, ஸ்மோகி மவுண்டைன் - 02 உருவாகிவிட்டிருந்தது. 

Smokey Mountain - பிலிப்பைன்ஸ்

"இந்தக் கிராமத்தின் மொத்த வீடுகளையும் இடித்துத் தள்ளுங்கள். இவர்களுக்கான மாற்று வீடுகளையும், மாற்று வாழ்க்கையையும்  இந்த அரசாங்கம் வழங்கும் " என்று அறிவித்தார். வீடுகள் இடிக்கப்பட்டன. நகரைவிட்டுப் பல மைல் தூரம் தள்ளி ஏதோ சில தற்காலிகக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால், அங்கு தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. வருமானத்திற்கு வழியில்லை. மாற்றத்துக்காக மக்கள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள். எதுவும் நடக்கவில்லை. குப்பையில்லா இடத்தில் பசியில் சாவதைவிட, குப்பையில் கிடைக்கும் உணவையாவது உண்டு சாகலாம் என்ற முடிவுக்கு வந்து மீண்டும் அந்தக் குப்பை மேட்டிற்கே திரும்பினர். முன்னர் இருந்த வீடும் இப்போது இல்லை இவர்களுக்கு. ஆட்சி மாறியது. ஆட்சியாளர்கள் மாறினார்கள். ஆனால், இவர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லை. 

குப்பைப் பொறுக்கித்தான் இவர்கள் வாழ்கிறார்கள். பலரும் குப்பைகளில் கிடக்கும் காலாவதியான உணவுப் பண்டங்களை எடுத்துத்தான் சாப்பிடுகிறார்கள். 40 வருடங்களாகக் கிடக்கும் குப்பைகளிலிருந்து பல விதமான வாயுக்கள் வெளிவருகின்றன. அவை, சமயங்களில் தீ பிடிக்கவும் செய்யும். அந்தப் புகை உடலுக்குப் பெரும் கேடு விளைவிக்கும். பெரும்பான்மையான குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதில்லை. பெரும்பாலும், குப்பைதான் பொறுக்குகிறார்கள். இவர்களில் பலரும் நீச்சலிலும், கூடைப்பந்து விளையாட்டிலும் மிகவும் திறமைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். ஆனால், அந்தத் திறமை இந்தக் குப்பை மேட்டைத் தாண்டி வெளித் தெரிவது இல்லை. 
இந்தப் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குப்பையை எரித்துக் கரி உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இங்கிருக்கும் பலருக்கும் நிமோனியோ (Pneumonia), காச நோய் (Tubeculosis), எம்ஃபிசிமா (Emphysimaa) போன்ற நோய்கள் அதிகமாகத் தாக்குகின்றன. பொதுவாக இங்கிருப்பவர்களின் வாழ்நாள் என்பது 40-லிருந்து, 45 வருடங்களாக மட்டுமே இருக்கின்றன. 

குப்பை மேடு - மணிலா, பிலிப்பைன்ஸ்

Pic Courtesy:www.justonewayticket.com


இந்தியாவின் மும்பை, பிரேசிலின் ரியோ போன்ற இடங்களில் நடப்பதுபோலவே இங்கும் "ஸ்லம் டூர்" (Slum Tour) நடைபெறுகிறது. பல மேலை நாட்டு மக்கள் இந்தப் பகுதிகளில் சுற்றுலா வந்து இவர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறார்கள். ஒரு பக்கம் இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் வந்தாலும், ஒரு பக்கம் இதன் மூலம் அந்த மக்களுக்கு ஏதோ வருமானம் கிடைக்கிறது, அவர்களின் பிரச்னை சர்வதேச கவனத்தை ஈர்க்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆனால், எது நடந்தும், இதுவரை இந்த மக்களுக்கான தீர்வு காணப்படவில்லை. அவர்கள் இன்னும் அந்தச் சாக்கடையில்தான் உழன்றுகொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement