வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (06/02/2018)

கடைசி தொடர்பு:19:00 (06/02/2018)

'எங்கள் நாட்டவர்களுக்கு உரியப் பாதுகாப்பு அளியுங்கள்'- பாகிஸ்தானுக்கு சீனா வலியுறுத்தல்

பாகிஸ்தானில் இருக்கும் சீனர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் சீனா வலியுறுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியிலுள்ள சம்சமா பூங்கா அருகில் சீனா நாட்டைச் சேர்ந்த 46 வயது மதிக்கத்தக்க சென் சூ காரில் சென்று கொண்டிருக்கும்போது அவர்மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதில், அவர் படுகாயமடைந்தார். காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சீனா வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜெங் சௌவுங், 'சீனர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்துவருகிறோம். பாகிஸ்தானிலுள்ள சீன தூதர், மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார்.

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளியை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த பாகிஸ்தான் போலீஸாரை வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையுடன் பாகிஸ்தான் இருப்பதற்கு நாங்கள் தொடர்ந்து அந்நாட்டுக்கு ஆதரவு அளிப்போம். பாகிஸ்தானிலுள்ள சீன நிறுவனங்கள் மற்றும் சீனர்களுக்கு பாகிஸ்தான் அரசு உரிய பாதுகாப்பு அளிக்குமென்று நம்புகிறோம். பாகிஸ்தானிலுள்ள சீனர்களுக்கு அந்நாட்டு அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்' என்று தெரிவித்தார்.