'கழுத்தை அறுப்போம்!'- தமிழர்களை மிரட்டிய இலங்கை அதிகாரி பணியிடை நீக்கம்

'கழுத்தை அறுப்போம்' என்று தமிழர்களுக்கு மிரட்டல் விடுத்த இலங்கைத் தூதரக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Lanka


இலங்கை சுதந்திர தினம் பிப்ரவரி 4-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் சுதந்திர தின விழா சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்தச் சமயத்தில், இலங்கைத் தூதரகம் முன்பு திரண்ட புலம்பெயர் தமிழர்கள், சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலைசெய்யப்பட்டதுகுறித்து கண்டனக் குரல்கள் எழுப்பினர்.

அப்போது, தூதரக அதிகாரிகளுடன் ராணுவ உடையில் நின்றுகொண்டிருந்த பிரியங்கா பெர்னாண்டோ என்ற அதிகாரி, தமிழர்களை நோக்கி மிரட்டும் தொனியில் சைகையை வெளிப்படுத்தினார். தன் கையை கழுத்தில் வைத்து, கழுத்தை அறுத்துவிடுவோம் என்பது போல அவர் மிரட்டல் விடுத்தார். இது சம்பந்தமான வீடியோ, சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகின. 

இதையடுத்து, பலரும் பெர்னாண்டோவுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அத்தோடு, இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.பி-க்கள் பலரும் பெர்னாண்டோவை இலங்கை அரசு திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக, பெர்னாண்டோவை பணியிலிருந்து விடுவிப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இலங்கை ராணுவத்தில் பிரிகேடியராக இருக்கும் பெர்னாண்டோ, லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இலங்கை பாதுகாப்பு அமைச்சக ஆலோசகராகப் பதவி வகித்துவந்தார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!