`மக்கள் சார்பில் கேட்கிறேன்; உதவுங்கள்!' - இந்தியாவுக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் உருக்கமான வேண்டுகோள்

மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நசீத் இந்தியாவிடம் உதவி கோரியுள்ளார்.

Mohamed Nasheed
 

மாலத்தீவில் உச்சகட்ட அரசியல் குழப்பங்கள் நீடிக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு மாலத்தீவு அதிபராக யாமீன் அப்துல் கயூம் பொறுப்பேற்றார். வரப்போகும் தேர்தலிலும் வெற்றிபெறும் முனைப்பில் செயல்பட்டு வந்தார் யாமீன். ஆனால், சமீபத்தில் அவரது கட்சியைச் சேர்ந்த 12 பேர், யாமீனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இதனால் அவர் பெரும்பான்மை இழந்தார். ஆட்சிக் கவிழ்ப்பை தவிர்க்க 12 பேரையும் தகுதி நீக்கம் செய்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்தது. அரசியல் குழப்பமும் அதிகரித்தது. ஆளும் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி தலைவரும் மாலத்தீவின் முன்னாள் அதிபருமான முகமது நசீத்தைச் சிறையில் அடைத்தார். எதிர்க்கட்சி எம்.பி-க்களையும் சிறையில் அடைத்தார். 

yameen
Yameen


ஆனால், பிரச்னை முடியவில்லை. யாமீனுக்கு நெருக்கடி அதிகரித்தது. மாலத்தீவின் உச்ச மன்ற நீதிபதிகள் முகமது நசீத் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க உத்தரவிட்டனர். ஆளும் கட்சியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி-க்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது யாசினின் கோபத்தை அதிகரித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிகார வரம்பை மீறி நடந்துகொள்வதாக யாசீன் குற்றம்சாட்டினார். நீதிபதிகளின் உத்தரவை ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறிய யாமீன், மாலத்தீவில் நேற்று முன் தினம் (5.2.2018) அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார். மாலத்தீவு நாடாளுமன்றமும் முடக்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. யாமீன் இதோடு நிறுத்தவில்லை. மாலத்தீவு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை கைதுசெய்ய உத்தரவிட்டார். மேலும், முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூம், நீதித்துறை நிர்வாக அதிகாரி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். இதனால் அங்கு உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவியது.  

இந்நிலையில், மாலத்தீவு சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர முன்னாள் அதிபர் முகமது நசீத் இந்தியாவின் உதவியை நாடியுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்த நசீத், “இந்திய தூதரகம் தங்கள் ராணுவத்தை மாலத்தீவுக்கு அனுப்ப வேண்டும். நீதிபதிகள், எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்க உதவ வேண்டும். அமெரிக்கா மாலத்தீவு ஆளும் அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இதை நான் மாலத்தீவு மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். மாலத்தீவு முன்னாள் அதிபரின் கோரிக்கையை இந்தியா ஏற்குமா மாலத்தீவு பிரச்னையில் தலையிடுமா என்பது கேள்விக்குறி! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!