`ஃபேஸ்புக் ஒரு மாயை; என்னால் மாற்ற முடியாது' - மார்க் சக்கர்பெர்க் கொடுத்த வேலையை உதறித்தள்ளிய இளைஞர்

mark

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்வதற்காக ஒருவரை பிரத்யேகமாகப் பணியமர்த்தியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.  யார் அந்த நபர். அவர் எதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்தைவிட்டுச் சென்றார் என்பது பற்றி `The Verge’ ஊடகம் வெளியிட்ட செய்தியின் விவரம் பின்வருமாறு:

மார்க்கெட்டிங் துறையில் மிகுந்த ஆர்வமுடைய இளைஞர் தாவிஸ் (Tavis) என்பவர் கடந்தாண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பித்தார். அவர் கூகுள் நிறுவனத்தில் மார்க்கெட் ரிசர்ச் துறையில் பணிபுரிந்தவர் என்பதால் ஃபேஸ்புக் நிறுவனத்திலும் அதைச் சார்ந்த வேலையைத்தான் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை சற்று வித்தியாசமானது.  

மார்க் சக்கர்பெர்க் குறித்த பொதுமக்கள் கருத்தை ஆய்வு செய்வதுதான் தாவீஸுக்கு கொடுக்கப்பட்ட முழு நேர வேலை. தாவீஸ் ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தது அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான சமயம். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அமெரிக்க வாக்காளர்களைக் குழப்பும் நோக்கில் ரஷ்யா நூற்றுக்கணக்கான போலி ஃபேஸ்புக் கணக்குகளைத் தொடங்கி சர்ச்சைக்குரிய செய்திகள், கட்டுரைகளை வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஃபேஸ்புக் சரிவை கண்டது. ஃபேஸ்புக் நிறுவனம் மார்க்மீது மக்களின் அபிப்ராயம் மாறிவிட்டதாக அந்நிறுவனம் வருந்தியது. இதனால் மார்க்கெட்டிங் துறையில் வேலை கேட்டு வந்தவருக்கு மார்க் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்ய பணியமர்த்தியது. தாவிஸும் வேலையை ஏற்றுக்கொண்டார். ஆனால், ஆறு மாதங்களில் வேலை பிடிக்காமல் ஃபேஸ்புக் நிறுவன வேலையைவிட்டு வெளியேறினார். 

இதுகுறித்து The Verge ஊடகத்துக்கு தாவிஸ் அளித்த பேட்டியில் ‘எனக்கு ஃபேஸ்புக் நிறுவனத்தில் கொடுக்கப்பட்டது ஒரு வித்தியாசமான வேலை. சர்வதேச அளவில் மக்கள் மார்க் சக்கர்பெர்க் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சர்வே எடுப்பதுதான் என் வேலை. மார்க் எப்படிப்பட்டவர், அவர் ஊடகங்களுக்கு சரியான முறையில் பேட்டியளிக்கிறாரா. அவர் ஃபேஸ்புக் போஸ்ட் உங்களுக்குப் பிடிக்குமா போன்ற கேள்விகள் அந்தச் சர்வேயில் இடம்பெற்றிருக்கும். சர்வேயில் நான் ஒருசில விஷயங்களைப் புரிந்துகொண்டேன். மக்களுக்கு ஃபேஸ்புக் மீது அப்படியொன்றும் நல்ல அபிப்ராயம் இல்லை. ஃபேஸ்புக் நிறுவனம் வணிகம் செய்யும் முறையே எனக்குப் பிடிக்கவில்லை. ஃபேஸ்புக் ஒரு மாயை என்பதை உணர்ந்துவிட்டேன். என்னால் இதை மாற்ற முடியாது. ஃபேஸ்புக்  நிறுவனம் பின்பற்றும் கலாசாரத்தையும் என்னால் மாற்ற முடியாது. அதனால் ஃபேஸ்புக் வேலையை உதறித்தள்ளினேன்’ என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி ஃபேஸ்புக் நிறுவனம் இன்னும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!