மாலத்தீவில் இந்தியர் உள்பட 2 பத்திரிகையாளர்கள் கைது! | Indian Journalist Among 2 Arrested In Maldives

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (09/02/2018)

கடைசி தொடர்பு:22:30 (09/02/2018)

மாலத்தீவில் இந்தியர் உள்பட 2 பத்திரிகையாளர்கள் கைது!

அவசரநிலைப் பிரகடனம் அமலில் உள்ள மாலத்தீவில் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் உள்பட 2 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாகக் கூறி, அந்த உத்தரவை அதிபர் அப்துல்லா யாமீன் அமல்படுத்த மறுத்துவிட்டார். அதேபோல, ஆளுங்கட்சியைச் சேர்ந்த 12 பேர் அதிபருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கவே, ஆட்சிக் கவிழ்ப்பைத் தடுக்கும் நோக்கில் அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, மாலத்தீவில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி, அதிபர் அப்துல் யாமீன் கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டார். அவசரநிலை 15 நாள்கள் அமலில் இருக்கும் என்றும் அதிபர் அறிவித்திருந்தார். மாலத்தீவு நாடாளுமன்றமும் முடக்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

மாலத்தீவு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அப்துல்லா சையது மற்றும் நீதிபதி அலி ஹமீது ஆகியோர் அதிபரின் உத்தரவின்படி கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூம், நீதித்துறை நிர்வாக அதிகாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், உரிய ஆவணங்களின்றி மாலத்தீவில் தங்கியிருந்ததாக இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவின் குடியேற்றத் துறை விதிகளை மீறியதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பிரான்ஸைச் சேர்ந்த ஏஜென்ஸி பிரான்ஸ் பிரஸ் (AFP) நிறுவனத்துக்காகப் பணிபுரிந்து வந்துள்ளனர். அவர்கள் குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக மாலத்தீவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.  

 

 

 


[X] Close

[X] Close