வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (11/02/2018)

கடைசி தொடர்பு:21:30 (11/02/2018)

71 பேருடன் தரையில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானம்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 71 பேர் உயிரிழந்தனர். 


தனியார் விமான நிறுவனமான சரதோவ் ஏர்லைன்சுக்கு சொந்தமான ஆன்டோனாவ்-148 ரக விமானம், 65 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் மாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கஜகஸ்தான் எல்லைப் பகுதியில் நகரான ஓர்ஸ்க்-க்குப் புறப்பட்டுச் சென்றது. ஆனால், விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அந்த விமானத்தைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. மாஸ்கோவிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், அந்த விமானத்தில் பயணித்த 71 பேரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் உத்தவிட்டுள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கலும் தெரிவித்துள்ளார். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதனாலேயே விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.