Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க வல்லரசுக்கே ஆட்டம் காட்டிய 'ஆதார் கார்டு' டெக்னிக்!

ஆதார், adhaar

வங்கிக் கணக்கில் இருந்து வருமான வரி கணக்கு வரை அனைத்திலும் 'ஆதார்' அட்டையை ஓடிஓடி இணைத்துக்கொண்டிருக்கிறோம். 'மார்ச் மாதத்துடன் உங்கள் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும்.. ஓடிப்போய் ஆதாரை இணையுங்கள்' என திக்திகில் குறுஞ்செய்தியுடன் 'ஹாய்' சொல்லும் சிம் கம்பெனி அட்ராசிட்டிகளுக்கு, 'மோடி சர்காரின் 'மான் கி பாத்' ஆலாபனை எவ்வளவோ தேவலாம்' எனத் தோன்ற வைத்திருக்கிறார்கள். '6 வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள்' கார்ட்டூனில் 'லிங்க் யுவர் ஆதார்' வார்த்தையை புதைத்து வைத்த புண்ணியவான்களுக்கு அந்த புருஷோத்தமர்தான் அருள் புரிய வேண்டும். அவரிடம் 'ஆதார் கார்டு' கேட்டு புல்லாங்குழலைப் பிடுங்காமல் இருந்தால் சரி. 'தனி மனித உரிமைகளைப் பறிக்கும் செயல்' என்று சமூக ஆர்வலர்கள் காது ஜவ்வு கிழியும் அளவுக்குக் கூவுகிறார்கள். இருந்தாலும், 'தனி நபர் தகவல் முக்கியமா? நாடு முக்கியமா? ஜெய் மகிழ்மதி' எனக் கொடி உயர்த்தும் குரூப், கக்கத்தில் கட்டி வருவதற்கு சாபம் விட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் பக்கென ஆதார் கார்டை தேட வேண்டியிருக்கிறது. இத்தனை ரோதனைகளுக்கு ரூட் கொடுத்த இந்த ஐ.டி கார்டு எஸ்.டி.டியை (வரலாறு என புரிந்துகொள்ளவும்) சற்று சுற்றி வரலாம்... (சுருள் கொசுவர்த்தி மோடில் செல்லவும்)

நெப்போலியன்:

nepoleon, நெப்போலியன்


 1803-ல் தனது ஆட்சியின் கீழ் இருந்த பிரான்ஸில் வேலை பார்த்துவந்த அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டையை வழங்கினார். இவரே ஐ. டி கார்டு வழங்குவதில் மூத்தகுடி எனப் பேச்சு இருக்கிறது. அக்காலத்தில் தொழிலாளர்கள், முதலாளிகளிடம் வேலையைப் பெறுவதற்கு இந்த அடையாள அட்டை உதவியாக இருந்தது. அடிமைத்தளத்தில் இருந்த மக்கள் அதில் இருந்து விடுபட பேருதவி புரிந்தது இந்த அட்டை. தொழிலாளர்கள் தங்களுக்கான வேலையைப் பெற தங்களுடைய அடையாள அட்டையை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உள்நாட்டு யுத்தம் அப்போது நிலவி வந்ததால், இத்திட்டம் போதிய அளவுக்கு வரவேற்கப்படவில்லை.

ஹிட்லர்:

ஓர் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு, ஓர் இனத்தையே கொல்ல முடியுமா? முடியும்!, ஆச்சர்யப்படத்தேவையில்லை, மக்களைப் பற்றிய மொத்தத் தகவல்களையும் வைத்துக்கொண்டு, யூதர்களை இப்படித்தான் தேடிப்பிடித்தார் ஹிட்லர். அவர் ஜெர்மனியின் அரியணையில் ஏறிய பிறகு, ஒட்டுமொத்த மக்களின் பதிவையும் உடனடியாக ஒரே இடத்தில் நிறுவ வேண்டும் என்று விரும்பினார்.

ஹிட்லர், hitler

இதன் மூலம் 'மக்களை மேற்பார்வை செய்து, அவர்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டு வர முடியும்' என்று கூறி இத்திட்டத்தைக் கொண்டு வந்தார். இதில், தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள், அவர்களின் முகவரி என அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 1941 - 1945 இந்தக் காலகட்டத்தில்,  யூத மக்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டு பயங்கர சித்ரவதையுடன் கொல்லப்பட்டனர். ஹிட்லரின் 'மக்கள் கணக்கெடுப்பின்' படியே, யூதர்கள் அனைவரையும் வகைபிரித்து, ஒன்று சேர்த்துக்கொன்றார் ஹிட்லர். இந்த ஐ.டி கார்டு உத்தியை அப்போதே சமூகத்துக்கு எதிராகப் பயன்படுத்தினார் ஹிட்லர்.

இங்கிலாந்து:

முதல் உலகப்போரின் போது இங்கிலாந்தில் ஒரு 'தேசியப் பதிவு' மேற்கொள்ளப்பட்டது. இது சொல்லிக்கொள்ளும் அளவிற்குத் துல்லியமாக இல்லை. இதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் செலவானது என்று அரசு தெரிவித்தது. பின்னர் 1939-1952  காலகட்டங்களில் மீண்டும் ஒட்டுமொத்த மக்கள் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

மாவோ:

mao, மாவோ

அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், தொழிலாளர் நலன் சார்ந்தும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தார் இளம் வயது 'மாவோ'. இவர் அதிகாரத்திற்கு வந்தபோது கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்கள் வரை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டையை வழங்கினார். 'அரசின் சலுகைகளை ஏமாற்றிப் பெற்றுக்கொண்டிருக்கும் வர்க்கத்தினர் அதிகரிக்கக் கூடாது என்ற நோக்கிலேயே இந்த முறை உருவாக்கப்பட்டது' என்றார் மாவோ. முதலாளிகளிடம் இருந்து தொழிலாளர்களைக் கண்காணிக்கும் ஒரு புதிய அமைப்பாக இது உருவாக்கப்பட்டது. தொழிலாளர் நலன்களைக் காக்க இது பெரும்பங்காற்றியது.

ஈராக்:

ஈராக்கில் அறிமுகப்படுத்தபட்ட 'பயோ மெட்ரிக் கார்டுகள்' மக்களை சமூக இனவாத குழுக்களாகப் பிரித்தது. அதற்குக் காரணம் ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கும், அரசியல் பிரிவினைவாதமுமே.

அமெரிக்கா:

செப்டம்பர் 11, 2001-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட இரட்டை கோபுர தகர்ப்புச் சம்பவத்தை எளிதாக யாரும் கடந்து போக முடியாது. இத்தாக்குதலே அமெரிக்காவின் 'தேசிய அடையாள அட்டை' திட்டத்தினை சீரமைத்தது எனலாம். ஆனால், உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் திணறியது. ஒரு நாட்டின் மொத்த மக்களின் தனி மனிதப் பதிவுகள் என்பது எளிதாகக் கையாளக்கூடிய விஷயம் அல்ல என்பதனை சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்க வல்லரசு புரிந்துகொண்ட தருணம் அது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement