வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (15/02/2018)

கடைசி தொடர்பு:11:13 (15/02/2018)

ஊழல் புகார் எதிரொலி! - தென்னாப்பிரிக்க அதிபர் பதவியைத் துறந்த ஜேக்கப் ஜுமா!

தென்னாப்பிரிக்கா அதிபர் பதவியிலிருந்து ஜேக்கப் ஜுமா பதவி விலகியுள்ளார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் சார்பில் கடந்த 2009-ம் ஆண்டு 4வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜேக்கப் ஜுமா

2009 முதல் தென்னாப்பிரிக்கா அதிபராக ஜேக்கப் ஜுமா பதவி வகித்து வந்தார். இந்தநிலையில், இவர்மீது சமீபகாலமாக ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த ஊழல் புகார் காரணமாக இவரின் உறவினர் வீடுகளில் சோதனை நடந்தது. இதைத்தொடர்ந்து, பதவியிலிருந்து விலகக்கோரி அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. பதவி விலகக்கோரி அவரது கட்சியிலிருந்தே தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டது. இருப்பினும் தான் பதவி விலகப்போவதில்லை எனப் பிடிவாதம் பிடித்து வந்த நிலையில் அவரது கட்சியின் அழுத்தத்துக்குப் பணிந்து ஜேக்கப் ஜுமா நேற்று பதவி விலகினார். 

ராஜினாமா செய்யாவிட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவி இழக்கச் செய்வோம் எனக் கட்சித் தலைமை அறிவித்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதையடுத்து, தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக ஜேக்கப் ஜுமாவின் அமைச்சரவையில் துணை அதிபராக இருந்த சிரில் ராமபோசா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிரில் ராமபோசா ஒரு தொழிலதிபரும்கூட. அடுத்த வாரம் இவர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகச் சிரிலுக்கும் ஜூமாவுக்கும் அதிகாரப் போட்டி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிகாரப் போட்டியில் ஜூமாவை முந்தி சமீபத்தில் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற சிரில் ராமபோசா தற்போது அதிபர் அரியணையை அலங்கரிக்கவுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க