வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (15/02/2018)

கடைசி தொடர்பு:19:15 (15/02/2018)

2018 பியாங்சங் ஒலிம்பிக் போட்டிகள்! - நெதர்லாந்து பெண் உலக சாதனை

winter olympics

23 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியா நாட்டின் பியாங்சங் நகரில் நடைபெற்று வருகிறது. 

கடந்த 9-ம் தேதி பியாங்சங் ஒலிம்பிக் மைதானத்தில் தொடக்க விழாவுடன் கோலாகலமாக ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. இதில் 92 நாடுகளிலிருந்து 2,920 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இதில் 15 விளையாட்டுகளில் 105 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இம்முறை 4 புதிய போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் மலேசியா, சிங்கப்பூர் உட்பட 6 புதிய பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பாக ஜெகதீஷ் சிங் மற்றும் ஷிவா கேசவன் கலந்து கொண்டனர். இந்திய வீரர் சிவ கேசவன் பங்குபெறும் 6 வது ஒலிம்பிக் போட்டி இதுவாகும். 40 வீரர்கள் பங்குபெற்ற பனிச்சறுக்குப் பிரிவில் 34 வது இடத்தை சிவ கேசவன் பிடித்துள்ளார். இந்த ஒலிம்பிக் போட்டியுடன் அவர் ஓய்வு பெறுகிறார்.

போட்டிகள் தொடங்கி 6 நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில், ஒலிம்பிக் சாதனைகளில் பத்தும்,  உலக சாதனையில் ஒன்றும் நிகழ்த்தப்பட்டுள்ளன. பெண்கள் பிரிவில் 1,000 மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற்ற நெதர்லாந்து நாட்டின் வீராங்கனை  ஜோரியன் தேர் மார்ஸ், பந்தய தூரத்தை 73.56 விநாடிகளில் கடந்து உலக சாதனைப் படைத்துள்ளார். நேற்று நடந்த ஆடவருக்கான பனிச்சறுக்குப் போட்டியில் அமரிக்காவைச் சேர்ந்த ஷான் வைட் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில்  அமெரிக்கா தனது 100 வது தங்கப்பதக்கத்தைப் பெற்றது. 6 நாள் போட்டிகள் முடிவில் தற்போது வரை 8 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து மற்றும் நார்வே முறையே  5 தங்கப்பதக்கத்துடன் இரண்டாம் இடத்திலும் 4 தங்கப்பதக்கத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. பிரமாண்டமாக நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இம்மாதம்  25-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.