மாலத்தீவில் அவசரநிலை மேலும் 30 நாள்களுக்கு நீட்டிப்பு!

அரசியல் குழப்பம் நிலவும் மாலத்தீவில் அவசரநிலைப் பிரகடனத்தை மேலும் 30 நாள்களுக்கு அமல்படுத்த அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாகக் கூறி, அந்த உத்தரவை அதிபர் அப்துல்லா யாமீன் அமல்படுத்த மறுத்துவிட்டார். அதேபோல, ஆளுங்கட்சியைச் சேர்ந்த 12 பேர் அதிபருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கவே, ஆட்சிக் கவிழ்ப்பைத் தடுக்கும் நோக்கில் அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, மாலத்தீவில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி, அதிபர் அப்துல் யாமீன் கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டார். அவசரநிலை 15 நாள்கள் அமலில் இருக்கும் என்றும் அதிபர் அறிவித்திருந்தார். மாலத்தீவு நாடாளுமன்றமும் முடக்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

அவசரநிலைப் பிரகடனம் இன்றுடன் முடிய இருந்தநிலையில், அதை மேலும் 30 நாள்களுக்கு நீட்டிக்க  நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அரசியலமைப்புச் சட்டத்தை மீறி அவசரநிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தன. அதிபர் யாமீன் 45 நாள்களுக்கு அவசர நிலையை நீட்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதேநேரம், மாலத்தீவில் அவசரநிலைப் பிரகடனத்தை நீட்டிக்காமல், அரசியல் தீர்வுகாண வேண்டும் என இந்தியா வலியுறுத்தியிருந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!