வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (22/02/2018)

கடைசி தொடர்பு:19:20 (22/02/2018)

`மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த சிறுவனைக் காப்பாற்றிய ஹீரோ போலீஸ்!’ - வைரல் வீடியோ

எகிப்தில் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த 5 வயது சிறுவனைப் போலீஸ் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

கெய்ரோவின் தெற்குப் பகுதியில் உள்ள அஸ்யூட் மாகாணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில்  3 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வங்கியின் மேல்தளத்தில் குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதிக்கு போலீஸார் சென்று பார்த்தபோது, அந்தக் கட்டடத்தின் 3 வது தளத்தின் பால்கனியில் சிறுவன் ஒருவன் கீழே விழும் நிலையில் தொங்கிக்கொண்டிருந்த காட்சியை அவர்கள் கண்டனர். சிறுவன் கீழே விழுந்தால், அவனைப் பிடிப்பதற்காக அங்கிருந்த மேட் ஒன்றை எடுத்து போலீஸார் தயாராகினர். மேலும், மேல்தளத்துக்குச் சென்று சிறுவனைக் காப்பாற்றும் முயற்சியில் போலீஸ் ஒருவர் ஈடுபட்டார். 

இந்தச் சூழலில் சிறுவனின் பிடி நழுவி 3 வது தளத்திலிருந்து கீழே விழ, அங்கு நின்றுகொண்டிருந்த போலீஸ் ஒருவர், சிறுவனைச் சரியாகக் கேட்ச் பிடித்துக் காப்பாற்றினார். சரியான சமயத்தில் போலீஸ் துணிச்சலுடன் செயல்பட்டதால், அந்தச் சிறுவனனின் உயிர் காப்பாற்றப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை எகிப்து அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் அந்தச் சிறுவனுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், காப்பாற்றிய போலீஸுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டதாகவும் அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறினார். அதேநேரம் அந்தச் சிறுவன் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கமில் ஃபதி சையத், ஹஸன் சையத் அலி மற்றும் சப்ரி மௌஹ்ரோஸ் அலி என்பது தெரியவந்துள்ளது.