`குடியிருப்புப் பகுதியில் சிரியா ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்' - 416 பேர் உயிரிழப்பு!

கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கௌட்டா நகர்மீது கடந்த ஒருவார காலமாகச் சிரியா ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 416 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Photo: AP

சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. போரால் கடுமையான பாதிப்புக்குள்ளான அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் குடியேறி வருகின்றனர். சிரியா ராணுவம், ரஷ்யா உள்ளிட்ட ஆதரவு நாடுகள் உதவியுடன் அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் நகரங்கள்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதும் சிரியா அரசு ஆதரவுப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. 

Photo: AP


இந்தநிலையில், சிரியா எல்லைப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கடைசி நகரான கிழக்கு கௌட்டாமீது அரசு ஆதரவுப் படைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை பொதுமக்களில் 416 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 1,000-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. 40,000 பொதுமக்கள் வசித்து வந்த குடியிருப்புப் பகுதியில் சிரியா அரசு ஆதரவுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

மேலும், இந்தத் தாக்குதலில் 12-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பாதிப்படைந்ததால், காயமடைந்த மக்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கிலும் மீதமுள்ளவர்களை வெளியேற்றும் வகையிலும் 30 நாள்கள் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் அவை வலியுறுத்தியுள்ளது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!