வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (26/02/2018)

கடைசி தொடர்பு:08:25 (26/02/2018)

`உள்ளாட்சித் தேர்தல் தோல்வி எதிரொலி’ - இலங்கை அமைச்சரவை மாற்றியமைப்பு!

அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் கட்சி இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சரவையை மாற்றியமைத்து சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். 

Photo: Twitter/MaithripalaS

இலங்கையில், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை, கூட்டணி ஆட்சி புரிந்து வருகின்றன. அந்நாட்டில் உள்ள 340 உள்ளாட்சிக் கவுன்சில்களுக்கும் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.  அதில், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இலங்கை மக்கள் முன்னணி கட்சி 225 இடங்களில் வென்றது. இது, அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். 

புதிய அமைச்சரவையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சட்டத்துறை அமைச்சராகப் பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிறிசேனா, `உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதை, அரசு கவனத்தில் கொண்டுள்ளது. மக்களுக்குச் சென்றடைய வேண்டிய அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் போன்றவற்றை மாற்றம் செய்யவே அமைச்சரவை மாற்றம்’ என்று தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள்குறித்து விசாரிக்கப்படும் என்று கூறி, அதிபர் பொறுப்புக்கு சிறிசேனா வந்தார். ஆனால், சட்ட அமைச்சர் சகாலா ரத்நாயகாவின் கீழ், ஊழல் வழக்குகளின் விசாரணை வலுவிழந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்தே, சட்ட அமைச்சராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமராகவும் அவரே தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.