நைஜீரிய பள்ளியில் புகுந்து 110 மாணவிகளைக் கடத்திய தீவிரவாதிகள்!

நைஜீரியாவில், பள்ளி ஒன்றின்மீது போகோ ஹரம் தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில்,  பள்ளியில் பயின்று வந்த 110 மாணவிகளைத் தீவிரவாதிகள் கடத்திச்சென்றதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது. 

Photo credit: AP

யோப் மாகாணத்தின் டாப்ச்சி பகுதியில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பப் பள்ளி ஒன்றில், கடந்த 19-ம் தேதி, இரவு நேரத்தில் புகுந்த போகோ ஹரம் தீவிரவாதிகள், கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். தாக்குதலை அடுத்து, அந்தப் பள்ளியில் பயின்று வந்த மாணவிகள் பலரை அவர்கள் கடத்திச்சென்றனர். இதில், 50-க்கும் மேற்பட்ட  மாணவிகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டு வந்த நிலையில், 110 மாணவிகளைக் காணவில்லை என நைஜீரிய அரசு அறிவித்துள்ளது.

அந்நாட்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் அல்ஹாஜி லாய் முகமது, இந்தச் சம்பவம்குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அந்த எண்ணிக்கை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 910 பேர் பயின்றுவந்த பள்ளியிலிருந்து 110 மாணவிகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மாணவிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவினர் நைஜர் நாட்டுக்கும் மற்றொரு பிரிவினர் போர்னோ மாகாணத்திற்கும் போகோ ஹரம் தீவிரவாதிகள் கொண்டுசென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கவும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கவும் நைஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!