வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (26/02/2018)

கடைசி தொடர்பு:19:20 (26/02/2018)

சிரியாவில் குளோரின் விஷக்குண்டு வீச்சு... பரிதவிக்கும் குழந்தைகள்!

சிரியாவில் குளோரின் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சிரியா

Credits : CNN

சிரியாவில் அரசுப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் போர் வலுத்துள்ளது. பிப்ரவரி 18-ம் தேதி முதல் சொந்த மக்கள்மீதே சிரியா அரசு வான்வெளித்தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 520-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள கிழக்கு கௌட்டா நகரத்தின்மீது நேற்று நடத்தப்பட்ட வான்வெளித்தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். குளோரின் குண்டுகள் வீசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூச்சு விட சிரமப்பட்டவண்ணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை குழந்தை ஒன்று மூச்சுத் திணறல் காரணமாக இறந்தது. 

சிரியா அரசு, கெமிக்கல் குண்டுகளை வீசவில்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறது. சிரியாவுக்கு ஆதரவாகப் போரிட்டு வரும் ரஷ்ய படையினர், கிளர்ச்சியாளர்கள்தான் கிழக்கு குவாட்டா நகரத்தில் குளோரின் குண்டுகளை வீசிவிட்டு அரசுப் படையினர்மீது பழி சுமத்துவதாகக் கூறுகின்றனர். டமாஸ்கஸ் நகரின் அருகேயுள்ள கிழக்கு கௌட்டா நகரம் 2013-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரத்தைத் தகர்த்து கிளர்ச்சியாளர்களை முற்றிலும் ஒழித்துவிடும் முனைப்பில் சிரியா அரசுப் படையினர் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே. ஜ.நா அமைப்பு 30 நாள்களுக்கு சண்டை நிறுத்தம் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. சண்டை நிறுத்தம் காரணமாகச் சிரியாவில் பாதிக்கப்பட்டோருக்கு மருந்துகள், உணவுப் பொருள்கள் எளிதாகக் கொண்டு சேர்க்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், போர் தீவிரமடைந்துள்ளது. 

சிரியா அரசுமீது குளோரின் குண்டுகள் வீசுவதாக அவ்வப்போது புகார் வந்துள்ளது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி வீசப்பட்ட குளோரின் குண்டுக்கு 12 பேர் கொல்லப்பட்டனர். 2014, 2015-ம் ஆண்டுகளிலும் ஐ.எஸ் இயக்கத்தினர்மீது குளோரின் குண்டுகளை அரசுப் படையினர் வீசியிருப்பதும் ஐ.நா அமைப்பின் தடை செய்யப்பட்ட விஷவாயு வெடிகுண்டு தடுப்பு முகமையால் கண்டுபிடிக்கப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க