வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (06/03/2018)

கடைசி தொடர்பு:17:39 (06/03/2018)

வடகொரியா: ட்ரம்ப் முடிவு... எச்சரிக்கும் அமெரிக்க அதிகாரிகள்! - 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? (பகுதி-7)

கிம் ஜாங், kim jong

தென்கொரியாவில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தென்கொரியாவும் வடகொரியாவும் ஒரே அணியாக இணைந்து விளையாடியதைத் தொடர்ந்து, இரு நாடுகளிடையே நிலவிவந்த பதற்றம் தணிந்தது, இதனால், தென்கொரியா முயற்சியின் பேரில் வடகொரியா - அமெரிக்கா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா, மீண்டும் வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து போர் பயிற்சியைத் தொடங்கவிருப்பது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவிடம் கெஞ்சமாட்டோம் என வடகொரியா அறிவித்திருப்பது, கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்பை மங்கச் செய்துள்ளது.

தென்கொரியாவும் வடகொரியாவும் இணக்கமாக இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும், அதன் காரணமாகவே அமைதிச் சூழலை சீர்குலைக்கும் விதமான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டை வடகொரியா முன்வைத்துள்ளது. 

வடகொரியா, northkorea

" ஒருபுறம் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துக்கொண்டே, மறுபுறம் தென்கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சியிலும் ஈடுபடுவதை வடகொரியா வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதற்கான வடகொரியாவின் எதிர்வினைகளைச் சந்தித்துதான் ஆக வேண்டும். இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு அமெரிக்காவே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்" என்று வடகொரிய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது. 

பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவின் நிபந்தனை

தென்கொரியாவில், பிப்ரவரியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தென்கொரியாவுடன் இணைந்து 'ஐக்கியக் கொரிய' தீபகற்பக் கொடியுடன் ஒரே அணியாக ஐஸ் ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க வடகொரியா விருப்பம் தெரிவித்ததும், அதனைத் தொடந்து ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது இளைய சகோதரி கிம் யோ ஜாங்-கை அனுப்பி வைத்ததும் இரண்டு கொரிய நாடுகளிடையே நிலவி வந்த இறுக்கத்தை தளரச் செய்தது. அத்துடன் வடகொரியா வருமாறு கிம் யோ ஜாங், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு விடுத்த அழைப்பும், அதன்பின்னர் வடகொரியாவின் சிறப்புத் தூதராக தென்கொரியா சென்ற வடகொரியா முன்னாள் உளவுத்துறைத் தலைவரும் ராணுவத் தளபதியுமான கிம் யாங் -சோல், அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த தங்கள் நாடு தயாராக இருப்பதாகக் கூறியதும் நல்ல முன்னேற்றமாகக் கருதப்பட்டது. 

தென்கொரொய அதிபர் மூன் ஜே இன் உடன் ட்ரம்ப்

இதனையடுத்து, "இரு கொரிய நாட்டுத் தலைவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும், தென்கொரியா சார்பில் சிறப்புத் தூதர் ஒருவரை வடகொரியாவுக்கு அனுப்ப இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தகவல் தெரிவித்தார். ஆனால், இதனை ட்ரம்ப் எந்த அளவுக்கு ரசித்தார் என்று தெரியவில்லை. 

வடகொரியா வீசிய அழகு அஸ்திரம்... அமைதியைக் கொண்டுவந்த ஒலிம்பிக் போட்டி! (பகுதி-6)

இதனையடுத்து வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும், ஆனால் அதற்கு முன், இனிமேல் அணு ஆயுத ஏவுகணைச் சோதனையை நடத்த மாட்டோம் என்று வடகொரியா உறுதியளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அல்லாமல் தொடர்ந்து ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டால் வடகொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அமெரிக்கா தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. கூடவே ஜப்பானுடன் இணைந்து கொரிய தீபகற்பத்தில் வடகொரிய கப்பற்படைக்கு எதிராக முற்றுகை நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டது. 

மசாஜ்... பாலியல் சேவை... உல்லாசம்: அதிபரால் நாசமாக்கப்படும் பள்ளி மாணவிகள்! (பகுதி-5)

'அமெரிக்காவிடம் வடகொரியா கெஞ்சாது'

இந்த நிலையில்தான் அமெரிக்காவின் இந்த நிபந்தனையை வடகொரியா நிராகரித்துவிட்டது. "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்காக முன் நிபந்தனை எதையும் ஏற்க இயலாது. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவிடம் நாங்கள் ஒருபோதும் கெஞ்சப்போவதுமில்லை, ராணுவ நடவடிக்கையைத் தவிர்க்கப் போவதுமில்லை" என்று வடகொரிய அயலுறவுத் துறை அமைச்சகப் பேச்சாளர் கூறியதாக அந்த நாட்டு அரசு செய்தி ஏஜென்சியான கே.சி.என்.ஏ, கடந்த சனிக்கிழமையன்று, அதாவது மார்ச் 3-ம் தேதியன்று தெரிவித்தது. 

இந்த நிலையில், அமெரிக்காவை முழுமையாகத் தாக்கும் அளவுக்கான அணு ஆயுத ஏவுகணையை வடகொரியா தயாரித்துவிட்டால், அது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும் என்றும், எனவே வடகொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது கட்டாயம் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது. 

வடகொரியா, north korea

வடகொரியா முழு அணு ஆயுத வல்லமை கொண்ட நாடாக உருவெடுத்துவிட்டால், அது இரான், லிபியா உள்ளிட்ட அணு ஆயுத ஏவுகணைச் சோதனை தொழில்நுட்பம் அறிந்திராத நாடுகளுக்கும் அந்தத் தொழில்நுட்பத்தை வடகொரியா வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்றும், அப்படி நிகழ்ந்தால் அது அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல்,  பிறநாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்றும் அமெரிக்கக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தெற்கு கரோலினாவின் செனேட்டர் லிண்ட்ஸே கிரஹாம், சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 


வடகொரியா: 'பட்டத்து ராஜா'வின் பகீர் பக்கங்கள்..! (பகுதி-4)

ட்ரம்ப்பை எச்சரித்த அமெரிக்க அதிகாரிகள்

இதனிடையே, வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைவர் மார்க் மில்லே, ராணுவச் சிறப்பு நடவடிக்கைகளுக்கான கமாண்டர் ரேமண்ட் தாமஸ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை, அதாவது மார்ச் 1-ம் தேதியன்று ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அமெரிக்க ராணுவத் தரப்பிலும் சிவிலியன்கள் தரப்பிலும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து அதிகாரிகள் ட்ரம்ப்புக்கு எடுத்துரைத்ததாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ராணுவ உயரதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தும் ட்ரம்ப்...

" வடகொரியா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தினால், முதல் சில நாள்களிலேயே அமெரிக்கா தரப்பில் சுமார் 10,000 வீரர்கள் உயிரிழக்க நேரிடும். இது இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் மீது தாக்குதல் நடந்தபோது தொடக்க நிலையில் ஏற்பட்ட வீரர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை சுமார் மூவாயிரம் என்ற நிலையைக் காட்டிலும் மிக அதிகமாக இருக்கும். அதேபோன்று சிவிலியன்கள் தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும். 

 

வடகொரியா Vs அமெரிக்கா: பகையும் வெறுப்பும் ஏன்? (பகுதி-3) 

தென்கொரியாவில் தற்போது சுமார் 28,500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். போர் வெடித்தால் வடகொரியா ஏவுகணை தாக்குதலுக்கு தென்கொரியா, குறிப்பாக தலைநகர் சியோல் எளிதில் இலக்காக நேரிடும். அப்படி ஒன்று நிகழ்ந்தால் உயிரிழப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். அதேபோன்று தற்போதைய அமெரிக்க வீரர்கள் யாரும் சந்தித்திராத கொடூரங்களையும் அமெரிக்க வீரர்கள் எதிர்கொள்ள நேரிடும். 

வடகொரியா Vs தென்கொரியா: பிரிந்தது எப்படி? -  (பகுதி- 2)

எனவே, ராணுவத் தாக்குதல் என்பதை வேறு வழியே இல்லை என்ற தீவிரமான நிலை ஏற்பட்டாலொழிய தேர்வு செய்ய வேண்டாம். கூடியவரைக்கும் பல்வேறு அழுத்தங்கள் மூலம் வடகொரியாவை பேச்சுவார்த்தை மேஜைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் அளியுங்கள்" என அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹெச்.ஆர். மெக்மாஸ்டர் மற்றும் அமெரிக்க ராணுவத் தலைவர் மார்க் மில்லே ஆகியோர் ட்ரம்ப்பை எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

போர் பயிற்சியில் அமெரிக்க வீரர்கள்...

இதேபோன்று குடியரசுக் கட்சி செனேட்டர் ஸென்.ஜேம்ஸ் ரிஸ்ச் மற்றும் வெள்ளை மாளிகையின் பல்வேறு உயரதிகாரிகளும் வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை வேண்டாம் என்று எச்சரித்ததாகவும் வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மூன்றாம் உலகப் போர்... முரசு கொட்டும் வடகொரியா!- ( பகுதி-1)

ஆக மொத்தத்தில் நிலைமையின் அடிப்படை உண்மைகளை உணர்ந்து அமெரிக்க அதிபர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அதேபோன்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் தென்கொரியாவை வடகொரியாவின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து ஐக்கிய கொரியாவை ஆள வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப ஒப்புக்கொள்ள வேண்டும். வீராவேசமாகப் பேசினாலும்  இனிமேலும் சர்வதேசப் பொருளாதார தடைகளைத் தாங்கும் சக்தி வடகொரியாவுக்கு இல்லை என்ற யதார்த்த நிலையை கிம் ஜாங் உன்னும் உணர்ந்திருப்பதால் அவருக்கு அதைத்தவிர வேறு வழியில்லை! 

இத்தொடர் இத்துடன் நிறைவுபெற்றது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்