ட்ரம்புக்குத் தொல்லைகொடுக்கும் அமெரிக்க மாப்பிள்ளை ஜாரெட் குஷ்னர்! | jared kushner become headache for donald trump

வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (05/03/2018)

கடைசி தொடர்பு:20:02 (05/03/2018)

ட்ரம்புக்குத் தொல்லைகொடுக்கும் அமெரிக்க மாப்பிள்ளை ஜாரெட் குஷ்னர்!

குஷ்னர்

குடும்ப அரசியல் கூடாது என்ற கொடியை அறிவாலயத்தை நோக்கி மட்டும் தூக்கவில்லை. அமெரிக்காவை நோக்கியும் தூக்கியுள்ளனர். அமெரிக்க அதிபரின் ஆலோசகர்கள் யார் என்றால் அமெரிக்க அதிபரின் மகள் இவான்கா ட்ரம்பும், அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகிய இருவரும் உள்ளனர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்பு நியமிக்கப்பட்ட அதிகாரிகளில் பலர் ட்ரம்ப்புக்குச் சொந்தக்காரர்களாகவே இருந்தனர். 

அமெரிக்க அதிபரையே நீங்கள் அதிபராக இல்லை, ரியல் எஸ்டேட்காரர் மனநிலையிலிருந்து மாறுங்கள் என்று அமெரிக்கா கூறி வருகிறது. அப்படிப்பட்ட ரியல் எஸ்டேட்காரரின் மருமகனும் ஒரு ரியல் எஸ்டேட்காரர்தான். யார் இந்த ஜாரெட் குஷ்னர், இவரை ஏன் பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரது பின்புலம் என்ன என்று பல கேள்விகள் இவர் பெயரைச் சொன்னதும் காட்டாயம் எல்லாரது நெஞ்சிலும் எழும்.

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் பிறந்த இவர், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சார்லஸ் குஷ்னரின் மூத்தமகன்.. ஜாரெடின்  தாத்தா-பாட்டியோ , இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருக்கு பயந்து தப்பி வந்து 1949- ம் ஆண்டு அமெரிக்காவில் தஞ்சம் (holocaust  survivor) புகுந்தவர்கள்.

1999 ம் ஆண்டு புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தார் ஜாரெட் குஷ்னர். பள்ளிக் காலங்களில் படிப்பில் கெட்டிக்காரராக விளங்கினாலும், இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர தனது தந்தையின் பண பலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தியுள்ளார். சிறுவயதிலிருந்தே வியாபார யுக்திகளை அறிந்து வைத்திருந்த ஜாரெட் ரியல் எஸ்டேட் தொழிலில் மிகவும் ஆர்வம் காட்டினார். இதை உறுதிப்படுத்தும் வகையில்தான் படித்துக்கொண்டிருக்கும் போதே ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

ஜாரெட் குஷ்னர்

தனது இளங்கலை படிப்பை முடித்த அவர், 2007- ம் ஆண்டு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ சேர்ந்தார். அடுத்த ஆண்டே தனது தந்தையின் ரியல் எஸ்டேட்  நிறுவனமான 'குஷ்னர்  கம்பெனி'க்குத் தலைமை நிர்வாக அதிகாரியானார். அதே ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தனது முதலீட்டிலிருந்து சுமார் 586.7 கோடி ருபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது.

2009 ம் ஆண்டு ட்ரம்பின் மகளான இவனா ட்ரம்ப்பை திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2014- ம் ஆண்டு தனது சகோதரர்களுடன் சேர்ந்துடான்லைன் ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். இதில் தனக்குப் பங்குதாரராக, அமெரிக்காவின் குடியரசு கட்சிக்குப் பெருமளவில்  நிதிஉதவி செய்யும் ஒருவரான ஜார்ஜ் சொரோசும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தனது 25 வது வயதில், அமெரிக்காவின் பிரபல தினசரியான நியூயார்க் பேப்பரின் வார இதழான 'அப்செர்வர்'-ஐ  65.1 கோடிக்கு வாங்கினார். தான் கல்லூரிக் காலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்ததில் ஈட்டிய பணத்தின் மூலம் இந்த வார இதழை வாங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பத்திரிகையின் மூலம், தனக்குத் தொழில் ரீதியில் போட்டியாக இருந்தவர்களை விமர்சனம் செய்வதாகப் பல குற்றச்சாட்டுகள் இவர்மீது வைக்கப்பட்டன.

பிரபல பத்திரிகை நிறுவனமான 'வேனிட்டி ஃபேர்' வெளியிட்ட செய்தி ஒன்றில், 'அப்செர்வர்' பத்திரிகையை ஜெரார்ட் குஷ்னர் வாங்கியதால் அப்பத்திரிகையின் தரம் குறைந்துவிட்டது. ஆனால், அந்நிறுவனத்தின் வருவாய் உயர்ந்தது. 2016- ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது மாமனார் ட்ரம்பை ஆதரித்து செய்திகளை தனது பத்திரிகையில் வெளியிட்டார். ஆனால், தேர்தலின் பிரசாரக் காலம் முடியும் தருவாயில், தனது பத்திரிகை நிறுவனம் எந்த ஒரு அதிபர் வேட்பாளருக்கும் ஆதரவில்லாமல் நடுநிலையாக உள்ளதாகக் கூறினார். 

அந்தத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்று அதிபரானதும் தனது பிற பதவிகளைத் துறந்து, அதிபரின் ஆலோசகராகப் பதவியேற்றார். இதற்கு பலதரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ஓர் அதிபர், தனது உறவினர்களை ஆலோசகராக நியமிப்பதில் தவறு ஏதும் இல்லை என்று தீர்ப்பளித்தது. தனது மாமனாருக்கு ஆலோசகராக மட்டுமல்லாமல், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் செயல்பட்டார். இதற்கு 'ப்ராஜெக்ட் எலெமோ' என்று பெயரிட்டு  குழு ஒன்றை அமைத்தார். கடந்த ஆண்டு ஜனவரி 9 ம் தேதி அதிபரின் மூத்த ஆலோசகராகப் பதவியேற்றார். இஸ்ரேல் -பாலஸ்தீன் இடையே நல்லுறவு ஏற்பட அமெரிக்க சார்பில் பேச குஷ்னரை ட்ரம்ப் நியமித்தார்.

இவான்கா ட்ரம்ப்

தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குஷ்னரை அரசு பதவியில் நியமித்த ட்ரம்புக்குச் சோதனைகளே மிஞ்சுகிறது. 2016- ம் ஆண்டு அதிபர் தேர்தலின் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக ரஷ்ய அரசிடம் அமெரிக்க அரசு சார்பாக சில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் ஜாரெட்டுக்கும் பங்கு உண்டு. ட்ரம்ப் டவரில் நடந்த சந்திப்பில் அமெரிக்காவுக்கு எதிரான செயல்பாடுகளில் இவர் ஈடுபட்டதாக ஃபயர் அண்டு ஃபெரி புத்தகம் கூறுகிறது. அரசு அதிகாரத்தை தனது கையில் வைத்துக்கொண்டு,தனது தொழிலுக்கும் அதிகாரத்தை இவர் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் அதிகரித்துவருகிறது. தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை அரசு சார்ந்த வேலைகளுக்குப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக ஹிலாரி கிளின்டன் இருந்த போது இதே தவறை செய்தார் என ட்ரம்ப் அப்போது கடுமையான கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

குஷ்னர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்தாலும் ட்ரம்பும், அமெரிக்க அரசும் குஷ்னரை எதுவும் கேட்பதில்லை. வாரிசு அரசியல் எல்லா இடத்திலும் இருப்பதற்கு இது இன்னோர் உதாரணம். எல்லாருக்கும் அமெரிக்க மாப்பிள்ளை என்றால் இஷ்டம். ஆனால், ட்ரம்ப்புக்கு இப்போது அமெரிக்க மாப்பிள்ளையால்தான் கஷ்டம் வந்திருக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close