வெளியிடப்பட்ட நேரம்: 20:21 (08/03/2018)

கடைசி தொடர்பு:20:21 (08/03/2018)

கடத்தல் வெறியாட்டத்தைத் தொடரும் 'போகோ ஹரம்' .. நைஜீரிய அரசுக்கு விழுந்த மரண அடி!

போகோ ஹரம், boko haram

'மாலை 5:30 மணி இருக்கும். நான் தங்கும் விடுதியில் இருக்கும் என் அறையில் இருந்தேன். திடீரென பக்கத்தில் இருக்கும் மாணவிகள் தங்கியிருந்த விடுதியிலிருந்து துப்பாக்கிச் சத்தமும், அலறல் சத்தமும் வந்தது. ஒன்பது வண்டிகளில் ஆயுதம் ஏந்தியபடி ஒரு கூட்டம் அந்த விடுதியை நோக்கி வருவதை கண்டேன்.' என்று அந்தக் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் அந்தக் கொடிய நிகழ்வை விவரித்தார்.
 
2014-ல் உலகமே பார்த்து அதிர்ந்த ஒரு கொடுரம் மீண்டும் ஒருமுறை நைஜீரியாவில் அரங்கேறியுள்ளது. 2014-ல் சிபோக் எனும் பகுதியில் 276 சிறுமிகள் 'போகோ ஹரம்' அமைப்பினரால் கடத்தப்பட்டனர். அன்று பலரின் மனதை திகைக்க வைத்த அதே நிகழ்வு மீண்டும் நடந்திருக்கிறது. நைஜீரியா-வில் உள்ள டாப்ச்சி அரசு கல்லூரியில் படிக்கும் மாணவிகளை கடந்த பிப்ரவரி மாதம் போகோ ஹரம் அமைப்பினர் கடத்தியுள்ளனர். அதை பற்றிய செய்தி அப்போது அந்நாட்டு அரசால் பெரிதாக வெளியிடப்படவில்லை. மிகவும் தாமதமாக மொத்தம் 110 மாணவிகள் கடத்தப்பட்டுள்ளனர் என ஒப்புக்கொண்டது நைஜீரிய அரசு. இன்றைய தேதி வரை அந்தக் கடத்தல் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனால் நைஜீரிய அதிபருக்கும் கடும் நெருக்கடி உருவாகியிருக்கிறது.

'பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளைத் தேடி சம்பவம் நடந்த இடத்தில் குவிந்தனர். தொலைத்தொடர்பு வசதி மேம்படுத்தப்படாத இந்நாட்டில், கடத்தல் சம்பவத்தின் போது காப்பற்றி அனுப்பிவைக்கப்பட்ட சில மாணவிகள் பாதுகாப்பாக வீடு சென்றார்களா என்று கூட அறிவதற்கு வழி இல்லை. பெற்றோர்கள் தங்கள் பெண்களை மீட்டுத் தருமாறு கெஞ்சும் அழுகுரல் மனதை வதைக்கிறது' என்றார் அதே ஆசிரியர்.

நிகர்,பென்யு என இரு ஆறுகளையும் நீண்ட கடற்பரப்புகளையும், எண்ணெய் மற்றும் இதர கனிம வளங்களை கொண்ட நாடு நைஜீரியா. இருந்தும் அமைதி அந்நாட்டிற்கு எட்டாக் கனியாகவே உள்ளது. 1960-ல் சுதந்திரம் பெற்ற நைஜீரியா 1963-ல் தன்னை குடியரசாக அறிவித்துக் கொண்டது. 1967-ல் நைஜீரியாவில் உள்நாட்டு போர் மூண்ட பின் ராணுவத்திடம் ஆட்சி கைமாறியது. அன்று முதல் பல ராணுவ அதிபர்களைச் சந்தித்த நைஜீரியா இன்று வரை முன்னேற்றம், வளர்ச்சி என்னும் வார்த்தைகளை அறியவில்லை என்பதே நிதர்சனம் காரணம் அங்கு நடக்கும் உள் அரசியல்.

nigeria, நைஜீரியா

ஒரு புறம் அதிகாரிகள் ஊழலில் மூழ்கி நாட்டைச் சின்னாபின்னமாக்கி வரும் நிலையில் மறுபுறமோ தீவிரவாதத் தாக்குதலும், பயங்கரவாத அச்சுறுத்தல்களும் நாட்டின் குடிமக்களை அகதிகளாக மாற்றி வருகின்றன. நைஜீரியாவை ஆட்டி வைக்கும் பயங்கரவாத இயக்கங்களுள் பெரும் அச்சுறுத்தலை தருவது 'போகோ ஹரம்', அதாவது 'மேற்கத்திய ஊடுருவலின் தடை' என்று பொருள். 2009-ல் பல அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களை தாக்கி தனது உக்கிரத்தின் தொடக்கப் புள்ளியை அமைத்தது அந்த அமைப்பு. அவ்வாண்டில் வாரம் ஒரு குண்டுவெடிப்பு என்னும் கணக்கில் தன் பயங்கரவாதத்தை கால் ஊன்றியது. 2013-ல் 'போகோ ஹர'மைத் பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்தது. 'போகோ ஹரம்' அமைப்பால் நிகழ்த்தப்படும் படுகொலைகள் மிகவும் குரூரமானவை. அந்த அமைப்பினரால் நிகழ்த்தப்படும் கொலைகள் நைஜீரிய அரசை மட்டுமல்லாமல் உலகையே கிடுகிடுக்க வைத்தது.

பிறகு, ஏப்ரல் 2014-ல் உலகம் முழுக்கும் இருக்கும் அத்தனை கோடி மக்களையும் உலுக்கியது அந்தக் கடத்தல். 'சிபோக்' என்னும் இடத்தில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் 276 பேரை கடத்திச் சென்றது 'போகோ ஹரம்'. 'பள்ளிக்குச் செல்வது இஸ்லாத்துக்கு எதிரானது. பள்ளி  செல்லும் பெண்கள் அனைவரும் தவறானவர்கள். அவர்கள் இந்த இயக்கத்து போராளிகளுக்கு மணம் முடித்து வைக்கப்படுவார்கள்' என அந்த இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் கூறினார். #bring_back_ourgirls என்னும் ஹேஷ்டேக் உலகின் அத்தனை மூலை முடுக்குகளிலும் ஒலித்தது. பலரின் கண்டனங்களுக்குப் பின்னும் பல எதிர்ப்புகளுக்குப் பிறகும், சிறையில் உள்ள 'போகோ ஹரம்' அமைப்பைச் சேர்ந்த சிலரை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு 2016-ல், 21 குழந்தைகளும், 2017- ல் 82 குழந்தைகளும் விடுவிக்கப்பட்டனர். இது அந்த இயக்கத்தை உலகெங்கிலும் அறியவைத்தது. பல முக்கிய நகரங்களை கைப்பற்றி ஐ.எஸ் இயக்கத்தோடு உடன்படிக்கை செய்து கொண்டு மிக முக்கிய தீவிரவாத இயக்கமாக மாறியது 'போகோ ஹரம்'. குழந்தைகளை மனித வெடிகுண்டுகளாக மாற்றி, பள்ளி செல்வதற்கே பயந்து நடுங்கும் நிலையை ஏற்படுத்தி சுமார் 20,000 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்திருக்கும் இந்த அமைப்பை அவ்வரசால் வேரறுக்க முடியவில்லை என்பதே உண்மை. அவ்வப்பொழுது அவர்களைத் தாக்கி 'நாங்களும் இருக்கிறோம்' என்று காட்டிக் கொண்டிருக்கிறது நைஜீரிய அரசு.

போக்கோ ஹரம், boko haram


தற்பொழுது, மீண்டும் 110 பள்ளிச் சிறுமிகளை கடத்தியுள்ளது 'போகோ ஹரம்'. 'இந்தக் கொடூரங்களுக்கு காரணம் ஊழலில் திளைத்து, வளங்கள் அனைத்தையும் சுரண்டி அலட்சியத்தையும், மெத்தனத்தையும் கையில் ஏந்தியிருக்கும் கையாலாகாத அரசே' என குற்றம்சாட்டுகிறார்கள் அந்நாட்டினர். பள்ளியில் ஆசிரியர் நல்ல மதிப்பெண் தருவதில் தொடங்கி வேலை வாங்குவது வரை எங்கும் ஊழல் எதிலும் ஊழல். அங்கு படித்து முடிக்கும் பல மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. எங்கு மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக மாறுகிறதோ, அங்கு மனித நெறிகள் ஒடுங்கும். மனித நெறிகள் ஒடுங்கும் இடங்களில் மனிதநேயம் குன்றி அன்பு வதைக்கப்பட்டு பயங்கரவாதம் தலை ஓங்கும். அந்த நாட்டின் அமைதியும் குழி தோண்டி புதைக்கப்படும். அந்நாட்டில் பிறந்ததை தவிர்த்து வேறு ஒரு தவறும் செய்திறாத குடிமக்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையும் நரகமாகும். அத்தகைய விளைவுகளை நோக்கிதான் நைஜீரியா சென்றுகொண்டிருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்