வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்கிறார் டொனால்டு ட்ரம்ப் | Donald Trump to meet North Korean leader Kim Jong

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (09/03/2018)

கடைசி தொடர்பு:14:35 (09/03/2018)

வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்கிறார் டொனால்டு ட்ரம்ப்

டகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சம்மதம் தெரிவித்திருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 

கிங் ஜாங்குடன் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு

வடகொரிய அதிபரின் அழைப்பின் பேரில் அமெரிக்க அதிபர் அவரை சந்திக்க இருப்பதாகவும், சந்திக்கும் தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கில் தென்கொரிய, அமெரிக்க அதிகாரிகளுடன் வடகொரிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் டொனால்டு ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். 

இது குறித்து தென்கொரியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சுங் இ யங் கூறுகையில், ''அமெரிக்க அதிபரை நேரில் சந்திக்க அதீத ஆர்வத்துடன் இருப்பதாக வடகொரிய அதிபர் விருப்பம் வெளியிட்டதையடுத்து, மே மாதத்தில் டொனால்டு ட்ரம்ப் அவரைச் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அணு ஆயுதச் சோதனை, ஏவுகணைச் சோதனைகளை நிறுத்தவும் கிம் ஜாங் சம்மதித்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார். 

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சேன்டர், ''வடகொரிய அதிபரின் விருப்பம் அமெரிக்க அதிபரை குளிரவைத்துள்ளது. சந்திக்கும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். வடகொரியாவின் அணு ஆயுத சோதனை மற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதுவரை, தடைகளும் அமலில்தான் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வடகொரியாவின் செயல்பாடுகளே கிம் ஜாங் உடனான அமெரிக்க அதிபர் சந்திப்பை நிகழச் செய்யும்'' என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ட்ரம்ப் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அணு ஆயுத நிறுத்தம் பற்றி தென்கொரிய பிரதிநிதிகளுடன் வடகொரிய அதிபர் பேசியுள்ளார், இது வெறும் நிறுத்தம் மட்டுமல்ல இந்தக் காலகட்டத்தில் வடகொரியா, ஏவுகணை சோதனைகூட நடத்தாது. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை நடைபெறும் வரை தடைகள் தொடரும், அவருடனான சந்திப்பு திட்டமிடப்பட்டு வருகிறது எனப் பதிவிட்டுள்ளார்.

வடகொரிய அதிபரின் அணுஆயுதச் சோதனை நிறுத்தம் அறிவிப்பை அமெரிக்கா, தென்கொரிய நாடுகள் வரவேற்றுள்ளன. அண்மைக் காலத்தில் வடகொரிய அதிபர் கிங் ஜாங்கை, அமெரிக்க அதிபர் 'லிட்டில் ராக்கெட் மேன்', 'நோயுற்ற நாய்க்குட்டி' என்று திட்டினார். 'ஓல்ட் மேன்' ' வெறிபிடித்தவர்' என்று கிம் ஜாங் பதிலடி கொடுத்தார். 

வடகொரிய அதிபரை அமெரிக்க அதிபர் சந்தித்தால், அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக அமையும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close