`இனி வாழ்நாள் முழுக்க அதிபர்தான்' - உலகின் அதிமுக்கிய தலைவராகும் ஜி ஜின்பிங்!

சீனாவின் நிரந்தர அதிபராக மாறப்போகிறார் ஜி ஜின்பிங். ஆம், அதற்கான சட்டத்திருத்தம் சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஜி ஜின்பிங்

கடந்த 2013-ம் ஆண்டு சீன அதிபராகப் பதவியேற்று, உலகின் கவனத்தை சீனாவின் பக்கம் திருப்பத் தொடங்கியவர் ஜி ஜின்பிங். பதவியேற்ற பின் முதல் அதிரடியாகக் கட்சியிலும், ஆட்சியிலும் ஊழல்களைக் களையெடுக்க தொடங்கினார். அதன்பயனாக, 70,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்தது. தொடர்ந்து அவர் எடுத்த மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் சீனாவில் பெருத்த வரவேற்பை பெற்றது. மேலும், அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்னைகளை கையாண்ட விதம், பொருளாதாரக் கொள்கை என அவரின் அதிரடி தொடரவே, மக்கள் அதிபராக மாறினார். அதன் பிரதிபலிப்பே, கடந்த ஆண்டு நடந்த சீன கம்யூனிஸ்ட் மாநாட்டில் மீண்டும் அதிபராக முடிசூடப்பட்டார். 

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான உலக நாடுகள் எதிர்ப்பு, ரஷ்ய அதிபர் புதின் மீதான எதிர்மறை விமர்சனம் உள்ளிட்டவைகளால் 130 கோடி மக்களை தாண்டி ஜி ஜின்பிங், உலகின் அதிமுக்கிய தலைவராக உருவெடுத்துவருகிறார். இந்நிலையில், சீனாவின் நிரந்தர அதிபராக ஜி ஜின்பிங் இருக்கும் வகையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. சீன அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே இருக்க முடியும். ஜி ஜின்பிங் இரு முறை தேர்வு செய்யப்பட்டுவிட்டார். இதனையடுத்து, அவரை நிரந்தர அதிபராக இருக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர சீன கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. அதற்கான, சட்டத்திருத்தம் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 2,958 உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாகவும், 2 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 3 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் சீனாவின் நிரந்தர அதிபராக ஜி ஜின்பிங் மாறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!