கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்த ஹெலிகாப்டர்! - இருவர் உயிரிழப்பு

கிழக்கு நியூயார்க் பகுதியில் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின், கிழக்கு நியூயார்க் பகுதியில் உள்ள ரூஸ்வெல்ட் தீவில் நேற்று இரவு ஏழு மணியளவில் ஒரு ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் 6 பேர் பயணம் செய்துள்ளனர். திடீரென என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் ஆற்றில் விழுந்த பயணிகளை மீட்கத் தீவிரமாகப் போராடினர்.

இது குறித்து, அமெரிக்கக் கடலோரக் காவல்படையினர் கூறும் போது விபத்து நிகழ்ந்ததிலிருந்து சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு
பிறகு முதலில் ஒருவர் மீட்கப்பட்டார், அவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு நடந்த மீட்புப் பணியில் தொடர்ந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாகவும் அதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் போது, நேற்று இரவு 7 மணியளவில் ரூஸ்வெல்ட் தீவில் ஒரு சிவப்பு நிற AS350 ரக ஹெலிகாப்டர் ஒன்று மிக வேகமாகச் சென்று அதே வேகத்துடன் ஆற்றில் விழுந்ததை தாங்கள் கண்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் காட்சிகளை அங்குள்ள சிலர் தங்களது போனிலும் படம்பிடித்துள்ளனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!