வெளியிடப்பட்ட நேரம்: 10:33 (14/03/2018)

கடைசி தொடர்பு:11:25 (14/03/2018)

20-க்குப் பதில் 18 - இளைஞர்களுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த நாடு

ஜப்பானில், பெரியவர்களாக மாறுவதற்கான வயது வரம்பைக் குறைக்க, அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

சிறுவர்கள், பெரியவர்களாக மாறுவதற்கான வயது வரம்பை 20-ல் இருந்து 18-ஆகக் குறைக்க, ஜப்பான் அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், 18 வயது நிரம்பியவுடன் இளைஞர்கள் தாங்களாகவே வங்கிகளில் கடன் பெறுவது, திருமணம் செய்துகொள்வது போன்றவற்றுக்கு உரிமை பெறுவர். ஆனால் புகைபிடிப்பது, மது அருந்துவது மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுவது ஆகியவற்றை 20 வயது வரை செய்யமுடியாது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வரும்.

19-ம் நூற்றாண்டிற்குப் பிறகு, இந்தச் சட்டம் முதன் முறையாக மாற்றியமைக்கப்பட உள்ளது. இது நிறைவேற்றப்படுவதால் பல சிக்கல்களும் உள்ளன. தற்போது, இளைஞர்கள் தங்களின் பெற்றோர்களின் அனுமதியுடன் 20 வயதில் திருமணம் செய்யலாம். ஆனால் இந்தச் சட்டம் வந்த பிறகு, 18 வயது நிரம்பியவுடன், எந்த ஆணும் பெண்ணும் தங்களின் பெற்றோர்களின் அனுமதி இல்லாமலும் திருமணம் செய்யலாம். 18 மற்றும் 19 வயதுடையவர்களும் சுதந்திரமாக எந்த ஒப்பந்தங்களிலும் கையொப்பமிடலாம்.