வீடியோ கேம் விளையாடுவதில் தகராறு... சகோதரியை சுட்டுக் கொன்ற 9 வயது சிறுவன்!

அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில், 9 வயது சிறுவன் தனது 13 வயது சகோதரியை சுட்டுக் கொன்றுள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சுட்டுக்கொலை

நியூயார்க் மாகாணத்தில் உள்ள மிசிசிபியில்தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை, மன்ரோ கவுண்டி என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 13 வயது சிறுமியும் அவளது 9 வயது தம்பியும் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, வீடியோ கேம் ஜாய்ஸ்டிக்கை யார் வைத்திருப்பது என இருவருக்கும் தகராறு ஏற்படவே, ஜாய்ஸ்டிக்கைத் தர முடியாது என அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த சிறுவன், வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்துவந்து தனது சகோதரியின் தலையில் சுட்டுள்ளான்.  சிறுமி ரத்தவெள்ளத்தில் மிதந்துள்ளார். சம்பவம் அறிந்துவந்த போலீஸார், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிறுமியின் தலையில் பாய்ந்த குண்டு, மூளையில் பாதிப்பை ஏற்படுத்தியதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

சிறுவனிடம் போலீஸார் விசாரித்ததில், டி.வி-யைப் பார்த்து துப்பாக்கி சுட கற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளான். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், "முதல் முறை அந்த வீட்டுக்குள் நுழையும்போது, சிறுமி ரத்தவெள்ளத்தில் மிதந்ததை மறக்க முடியாது. நான் இந்தத் துறையில் 30 வருடங்கள் இருந்திருக்கிறேன். ஆனால், இந்த மாதிரி ஒரு சம்பவத்தைப் பார்த்தது இல்லை. எனினும்,  9 வயது சிறுவனிடம் இதுகுறித்து எப்படி விசாரணை நடத்துவது எனத் தெரியவில்லை. அவர்களது பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" எனக் கூறியுள்ளார். அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்தால், அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்வதுண்டு. அவையனைத்தும், பெரியவர்களின் செயல்களால் நிகழ்ந்தவை. தற்போது 9 வயது சிறுவன்,தன் சகோதரியையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது, அங்கு சோகத்தை உண்டாக்கியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!