50 மில்லியன் மக்களின் ஃபேஸ்புக் தகவல் திருட்டு - கேம்பிரிட்ஜ் அனாலிடிக் நிறுவன சி.இ.ஓ. இடைநீக்கம் | Cambridge Analytica firm ceo alexander nix suspended for facebook private information issue

வெளியிடப்பட்ட நேரம்: 11:18 (21/03/2018)

கடைசி தொடர்பு:12:00 (21/03/2018)

50 மில்லியன் மக்களின் ஃபேஸ்புக் தகவல் திருட்டு - கேம்பிரிட்ஜ் அனாலிடிக் நிறுவன சி.இ.ஓ. இடைநீக்கம்

அமெரிக்காவில், 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, 50 மில்லியன் மக்களின் அரசியல் சார்ந்த தனியுரிமை   (பிரைவசி )த் தகவல்களை பொலிட்டிக்கல் டேட்டா ஃபர்ம் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா (Cambridge Analytica),  திருடியுள்ளது எனப் பிரபல பிரிட்டன் தொலைக்காட்சி சேனல், நியூஸ் 4 நேற்று செய்தி வெளியிட்டது. 

அலெக்சாண்டர் நிக்ஸ்

இதையடுத்து, கேம்பிரிட்ஜ் அனாலிடிக் நிறுவனத்தின் தலைமை அலுவலர் (சி.இ.ஓ)அலெக்சாண்டர் நிக்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். லண்டனைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், ஸ்டீபன்,           கே. பன்னன் மற்றும் ராபர்ட் மெர்சரால் ஆகியோரால் நிறுவப்பட்டது. 

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, டொனால்டு ட்ரம்ப்பின் அரசியல் பிரசாரத்திற்காக உதவும் வகையில் டொனால்டு வெற்றி பெறுவதற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் இந்தத் திருட்டு நடைபெற்றுள்ளது என நியூஸ் 4 சேனல் குற்றம் சாட்டியுள்ளது. 

ஃபேஸ்புக்

அதாவது, அமெரிக்காவில் உள்ள ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள், தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள பிரைவசி ஆப்ஷனைப் பயன்படுத்தி, தங்களின் தனிப்பட்ட அரசியல் சார்ந்த தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தாலும், அவர்களின் ஃபேஸ்புக் நண்பர்கள் பிரைவசி ஆப்ஷனைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பட்சத்தில், பிரைவசி ஆப்ஷனைப் பயன்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருந்த தனிப்பட்ட தகவல்களை,  'சைக்கோகிராஃபிக் மாடலிங் டெக்னிக்ஸ்' எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி,  கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியுள்ளது.

இவ்வாறு திருடப்பட்ட 50 மில்லியன் மக்களின் தனி நபர் சார்ந்த அரசியல் தகவல்களை டொனால்டு ட்ரம்ப்-பின் அரசியல் பிரசாரத்தின்போது பயன்படுத்திக்கொண்டதாக, பிரிட்டன் தொலைக்காட்சி சேனல் நியூஸ் 4 செய்தி வெளியிட்டது. இதையடுத்து, கேம்பிரிட்ஜ் அனாலிடிக் நிறுவனத்தின் தலைமை அலுவலர் அலெக்சாண்டர் நிக்ஸ் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 'தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டன' என்று ஃபேஸ்புக் நிறுவனமும் தங்களின் பயன்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எங்களை வருத்தமடையச்செய்கிறது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.