வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (25/03/2018)

கடைசி தொடர்பு:16:16 (25/03/2018)

`பந்தைச் சேதப்படுத்திய விவகாரம்!’ - ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ராஜினாமா #SAvAUS

கிரிக்கெட் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் ஆகியோர் தங்களில் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

Photo Credit : cricket.com.au

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 4 போட்டிகளைக் கொண்டடெஸ்ட் தொடர், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 2 போட்டிகளில் 1-1 என்ற விகிதத்தில் இரு அணிகளும் வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி கேப்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்காஅணி முதல் இன்னிங்ஸில் முடிவில் 311 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா சிறப்பாக பேட்டிங் செய்து வந்தது. 

நேற்று நடந்த மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது உணவு இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராப்ட் மஞ்சள் நிறத்திலான ஒரு பொருளை வைத்து பந்தின் மீது தேய்த்தார் அந்த காட்சி கேமிராக்களில் பதிவானது. இதை உணர்ந்த பான்கிராப்ட் உடனடியாக மஞ்சள் நிறத்திலான பொருளை தனது  முன் பக்க பாக்கெட்டில் மறைத்தார். அம்பையர்கள் கேட்டபோது கருப்பு கண்ணாடிகளின் பெட்டி ஒன்றை மட்டுமே வெளியே  எடுத்துக் காட்டினார். இந்தக் காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படவே, கிரிக்கெட் உலகில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 

இதுபற்றி விளக்கமளித்த பான்கிராப்ட், ``தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்தைச் சேதப்படுத்த வேண்டுமென முன்னரே நாங்கள்  முடிவெடுத்தோம். நான் இந்தச் செயலை செய்யும் போது அங்குப் பல கேமிராக்கள் இருந்ததை மறந்து விட்டேன் அதை உணர்ந்த  போது பதட்டமாகிவிட்டேன் எனது செயலை நினைத்து  வருந்துகிறேன்" என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், "இந்த  போட்டியில் பந்தை சேதப்படுத்துவது என்பதை முன்னரே எங்கள்  அணியின் வீரர்களுடன் சேர்ந்து தீர்மானித்தோம். இது எங்கள் அணியின் தலைமைக் குழுவுக்கும் தெரியும். இது விளையாட்டு  உணர்வுக்கு எதிரான செயல். தற்போது நடந்த சம்பவத்திற்கு மிகவும் வருந்துகிறேன். இனி இப்படிப்பட்ட சம்பவம் நடக்காது என  உறுதியளிக்கிறேன்" என்றார்.

ஆஸ்திரேலிய அணியின் செயலுக்கு அந்நாட்டு பிரதமர் உள்படப் பலர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்தச் செயலுக்கு 
உடந்தையாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்துக்கும் கண்டனங்கள் வலுத்துள்ளது. இச்சம்பவம் குறித்து கருத்து 
தெரிவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், தங்கள் நாட்டு அணியினரின் இந்தச் செயல் மிகவும் வருத்தமளிக்கிறது இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் அதுவரை ஸ்மித் கேப்டன் பதவியில் நீடிப்பார் என தெரிவித்திருந்தது.
 ஆனால்,ஆஸ்திரேலிய விளையாட்டுக் கழகம், ஸ்மித் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எந்த விளையாட்டிலும் 
இத்தகைய விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அறிவித்தது. 

பந்தை சேதப்படுத்தும் திட்டத்தை தீட்டிய அனைவரும் தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என அதிரடியாக அறிவித்தது. ஆஸ்திரேலிய விளையாட்டுக் கழகம். இந்நிலையில் இன்று ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் 
தங்களின் கேப்டன், துணைக் கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். பதவிகளை ராஜினாமா செய்தாலும், பொறுப்பு கேப்டன் (interim captain) டிம் பெய்ன் தலைமையின் கீழ் இந்த ஆட்டத்தில் இருவரும் தொடர்ந்து பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.